Follow Us:

Sunday, Jun 22
ஜூன் 10, 2025

ஜனாதிபதியின் ஜெர்மன் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (10) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் ( Frank – Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2025 ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜெர்மனியின் ஜனாதிபதி, கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் ஜெர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்தில் இலங்கையின் பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் வலிறுத்தவுள்ளார்.

மேலும், இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜெர்மனியின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொழில் சங்கங்கள் ( Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளையும் மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் ஜனாதிபதியுடன் கலந்து கொண்டுள்ளார்கள்.

Top