Presidential Secretariat of Sri Lanka

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெப்ரவரி 20 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப் படிப்பொன்றை அல்லது அதற்கு சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதி பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரி விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் 2020.01.01 ஆம் திகதிக்கு பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழிலின்றி இருப்பதாகவும் கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு ஆவணத்தின் புகைப்படப் பிரதி ஒன்று (மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி) 2020.02.20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையின் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். விண்ணப்பங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் www.presidentsoffice.lk  என்ற இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு – 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும். குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தெரிவு செய்யப்படுபவர்கள் கல்வி அமைச்சு (கிராமிய தோட்டப் பாடசாலைகள்), நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களம், சுகாதார அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் / மருத்துவ நிலையங்கள்) நில அளவை திணைக்களம், விவசாய திணைக்களம், சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம், விலைமதிப்புத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகிய துறைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.

ஒரு வருட பயிற்சிக் காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். நியமனங்கள் மாவட்ட மட்டத்தில் வழங்கப்படுவதுடன், முதலாவது நியமனம் வழங்கப்படும் மாவட்டத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்வது கட்டாயமானதாகும்.

(English) Recent News

Most popular