Presidential Secretariat of Sri Lanka

ஆனந்தா கல்லூரியின் “07 மாடிக் கட்டிடம்” ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிப்பு…

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய “07 மாடிக் கட்டிடம்” இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி உருவாக்கிய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தனது பாடசாலை பருவத்தின் நடைமுறைகளுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி அவர்கள் முதலில் அங்குள்ள விகாரைக்குச் சென்று வழிபட்டார். கல்லூரியின் சாரணர் பிரிவின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

தாய் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தைச் சேர்ந்த ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களை நினைவுகூர்ந்து ஜனாதிபதி அவர்கள், இராணுவ தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். கல்லூரியின் பழைய ஆசிரியர்களை நினைவுகூர்ந்து ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் அவர்களின் உருவச் சிலைக்கும் மலரஞ்சலி செலுத்தினார்.

இலங்கையின் பாடசாலையொன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது 07 மாடிக் கட்டிடம் இதுவாகும். இதற்காக 62 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. கல்லூரியின் கனிஷ்ட மற்றும் இடைநிலைப் பிரிவுகள், மாணவர்களின் கல்விக்கான 44 வகுப்பறைகள், விஞ்ஞானக்கூடம், கணனி ஆய்வுக்கூடம், சித்திரம், நடனம், சங்கீதம் ஆகிய அழகியல் துறைகளுக்கான அறைகள் கல்லூரியின் பிரதான நூலகம் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வறை மற்றும் மருத்துவ நிலையம் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் 2015 ஜனவரி 01ஆம் திகதி நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தற்போதைய அரசாங்கத்தின் கல்வி, அபிவிருத்தி மூலோபாயங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் உருவாகும் பிள்ளைகளை பல்வேறு வகையான திறன்கள் மற்றும் இயலுமைகளை கொண்டவர்களாகவும் சவால்களையும் தடைகளையும் வெற்றிகொள்ளக்கூடியவர்களாகவும் மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்னும் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடு என்ற உள நிலையிலிருந்து விலகி உண்மையான முன்னேற்றத்தை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு ஒரு தொலைநோக்கும் திட்டமும் இருக்க வேண்டும். அந்த தொலைநோக்கும் திட்டமும் அரசாங்கத்திடம் உள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு பல்வேறு பணிகள் உள்ளன. நாம் வெற்றிகொள்வதற்கு பல்வேறு சவால்கள் உள்ளன. கடந்த காலங்களில் பாரிய சவால்களை வெற்றிகொண்ட ஒரு தேசம் என்ற வகையில் எதிர்காலத்திலும் அதனை செய்வதற்கு எமக்கு முடியும். இதற்கு தேவையாக இருப்பது ஒற்றுமையும் உரிய தலைமைத்துவமும் ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஆசிரியர்மைய, பரீட்சைமைய கல்வி முறைமையிலிருந்து மாணவர்மைய கல்வி முறைமைக்கு மாற வேண்டிய காலம் உருவாகியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பிள்ளைகளை ஆரம்ப பிரிவில் சேர்த்தது முதல் பாடசாலையிலிருந்து வெளியேறும் வரை பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் எப்படியோ பரீட்சைகளில் சித்தியடைய வேண்டுமென்பதாகவே உள்ளது. எனினும் பிள்ளைகளுக்கு பாடசாலை வாழ்க்கையில் பெற்றோர்களின் மூலம் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட கூடாதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

எமக்கு தேவையாக இருப்பது பரீட்சைகளுக்கு தோற்றி வெற்றி பெறுவதற்காக மட்டும் பிள்ளைகளை தயார்படுத்துவதல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் செயற்திறனாக பங்களிக்கக்கூடிய ஒரு முழுமையான பிரஜையை உருவாக்குவதேயாகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்

பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. சிறந்த தரம் வாய்ந்த மூன்றாம் நிலை கல்வி முறைமையை உருவாக்குவதே தனது முக்கிய நோக்கமாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள், குறிப்பிட்டார். 21ஆம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இது இலங்கைக்குள்ள ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும். உற்பத்தி கைத்தொழிலுக்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளைக் கொண்டுள்ள எமக்கு அதிர்ஷ்டவசமாக கற்ற தொழிற்படையொன்று உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதிலிருந்து அதிகபட்ச பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

சியாமோபாலி மகாநிக்காயவின் மல்வத்தை பீட அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜத்தசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.கீர்த்தி ரத்ன உள்ளிட்ட ஆசிரியர்கள், பல்வேறு துறைகளிலும் உள்ள ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular