Presidential Secretariat of Sri Lanka

இலங்கையை உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக முன்னேற்ற முடியும் -ஜனாதிபதி

அமைவிடத்தை பயன்படுத்தி இலங்கையை உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

உலகின் வளர்ச்சியடைந்த துறைமுகங்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்து அபிவிருத்தி இலக்குகளை துரிதமாக அடைந்துகொள்ள முடியுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

24.000 கொள்கலன்களை கொண்டு செல்லக்கூடிய உலகின் பாரிய கப்பல்களை ஈர்க்கக் கூடிய வகையில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப்படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டை அண்மித்து பயணம் செய்யும் சர்வதேச கப்பல்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய வகையில் துறைமுக முறைமையை மேம்படுத்தி கொழும்பு, காலி, திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும். மீள் கப்பலேற்றல் நடவடிக்கைகளை கையாள்வதற்கான வசதிகள், களஞ்சிய வசதிகள் மற்றும் வழங்கல் வசதிகளை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இரத்மலானை, பேலியகொடை மற்றும் வெயங்கொடை பகுதிகளை அண்மித்ததாக புதிய களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி கொழும்பு துறைமுகத்தை ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு கொள்கலன்களை மாற்றும் பரிமாற்று மையமாக மாற்றுவது (Transshipment Hub) குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசு தலையிட்டு எரிபொருள் களஞ்சிய தாங்கிகளை நிர்மாணித்து கப்பல்களுக்கு எரிபொருள்களை வழங்க வேண்டும். பாரியளவிலான படகுகளை நிர்மாணித்ததன் பின்னர் அவற்றை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வதற்கு பேருவளை பிரதேசத்தை அண்மித்ததாக படகு கட்டும் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் அனுமதியளித்தார்.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக்கொண்டு ஏற்றுமதிக்காக கப்பல்கள் மற்றும் படகுகளை பராமரித்தல், திருத்துதல், உற்பத்தியை விரிவுபடுத்தல், முக்கிய துறைமுகங்களை மையமாகக்கொண்டு கப்பல் பணிக்குழாமினரை பரிமாற்றுவதற்குத் தேவையான வசதிகளை விரிவுபடுத்த வேண்டியதன் தேவை பற்றியும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் துறைமுகங்களுடன் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular