Presidential Secretariat of Sri Lanka

2020 பொருளாதார மாநாடு: மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஒன்றுபடுமாறு ஜனாதிபதி தனியார் துறைக்கு அழைப்பு…

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார மறுமலர்ச்சிக்கான சக்தியும் பலமும் அரசாங்கமே என்பதை அங்கீகரித்து  பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறு தனியார் துறை தொழில்முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

“தனியார் துறை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. இந்த நற்பெயர் ஒரு யதார்த்தமாக மாற, எப்போதும் பாரம்பரிய மற்றும் குறைந்த அபாய உத்திகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அதிக நன்மைகளைப் பெறுவதற்கான ஆற்றலுடன் தைரியமாக முதலீடு செய்யுங்கள்” என்று ஜனாதிபதி அவர்கள் தனியார் துறை வர்த்தகர்களிடம் தெரிவித்தார்.

இன்று (01) முற்பகல் கொழும்பில் ஆரம்பமான ”இலங்கை பொருளாதார மாநாடு 2020“ (Sri Lanka Economic Summit 2020) இல் வீடியோ தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக தனது தலைமையின் கீழ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விளக்கிய ஜனாதிபதி அவர்கள், மக்களின் அபிலாஷைகளை நன்கு நிறைவேற்றும் வகையில் தனியார் துறையின் முழு திறனையும் பயன்படுத்த உதவும் வகையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். இந்த இலக்கை அடைய உதவும் வகையில் 2021 வரவு செலவு திட்டத்தில்  பல அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

மேற்படி நோக்கத்தை அடைய, எமது புதிய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் புதிய வழிகளை ஆராயத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இலங்கை பொருளாதார மாநாடு 2020” இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 20 வது தடவையாக நடைபெறும் இம்மாநாட்டின் கருப்பொருள் “மக்கள் மைய பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழியமைப்போம்” என்பதாகும். இந்திய குடியரசின் நிதி மற்றும் வர்த்தக விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இங்கு சிறப்புரையாற்றினார். இரண்டு நாள் மாநாட்டில் முன்னணி கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச பொருளாதாரத்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

“கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாரிய பாதிப்புகளுக்கு மத்தியில், பொருட்களின் உற்பத்தி உட்பட பல துறைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்க்கு மத்தியிலும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அறிவுத் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு மேலும் மேலும் பழக்கமாகி வருகின்றனர். விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றொரு போக்கு. புதிய அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட்டு, விவசாயம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தகவல் தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சிக்காக அதிக முதலீடு செய்வது முதன்மையான தேவையாகும் ”என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

“ஒரு வலுவான பொருளாதார மறுமலர்ச்சிக்கு களம் அமைப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான பங்காண்மை தேவை. பல்வேறு துறைகளில் உள்ள எங்கள் அணுகுமுறைகள் அனைத்தும் மையத் தொலைநோக்கொன்றின் அடிப்படையில் தெளிவான நோக்கங்கள் மற்றும் செயல் திட்டங்களால் வழிநடத்தப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து அணுகுமுறைகளும் எங்கள் அபிவிருத்திப் பாதையை உறுதிப்படுத்த பங்களிக்க வேண்டும்.” என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் இந்த சூழலில், இலங்கை வர்த்தக சபை அமைத்த பொருளாதார கட்டமைப்பை பாராட்டினார்.

மாநாட்டில் பங்குபற்றும் நிபுனர்கள், விரிவுரையாளர்கள், அரச மற்றும் தனியார் துறை முன்னோடிகளும் அரசாங்கமும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டு இலங்கை பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி அவர்கள் வெளிப்படுத்தினார்.

இலங்கை வரத்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டில் நிதி, மூலதன சந்தைகள் மற்றும் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களும் பங்கேற்றார்.

(English) Recent News

Most popular