Presidential Secretariat of Sri Lanka

எதிர்க்கட்சியின் அபத்தமான குற்றச்சாட்டுகளால் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாது ….

  • அன்றும் இன்றும் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம்….
  • தேசியவாதத்திற்கு வெளிநாட்டு சக்திகள் எதிர்ப்பு ….
  • வெளிநாட்டு விவசாயிகளுக்கு பதிலாக உள்நாட்டு விவசாயிகளை வளப்படுத்தினோம் ….
  • நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு ஒப்பந்தங்களிலிருந்து விலகி சுதந்திரத்தைப் பாதுகாத்தோம்…

                                        ஜனாதிபதி “கிராமத்துடன் உரையாடலில்” தெரிவிப்பு

எதிர்க்கட்சி என்ற வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். அவை உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இருப்பினும், அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இது தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் கருத்து. எனவே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தியது. அக் கருத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், “நான் மறந்துவிட்டேன், மயக்கம் அடைந்தேன், எனக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.  இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை ஒருபோதும் ஏமாற்றக்கூடாது.” என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் பேரவை எங்களுக்கு எதிராக கொண்டு வந்த முன்மொழிவுக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அந்த நிலைப்பாட்டை நிராகரித்து, தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகியது. எம்.சி.சி ஒப்பந்தம் உட்பட நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் இருந்து முறையாக விலகி மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக்கு பதிலாக, எதிர்ப்பு தெரிவிக்க தனி இடம் வழங்கப்பட்டது. தேசியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் எமது விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை வெளிநாட்டு விவசாயிகளை வளப்படுத்திய பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு, நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் எமது விவசாயிகளை வளப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்திற்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளுடன் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பதை தான் கண்டது இதுவே முதல் முறை என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (13) முற்பகல் காலி மாவட்டத்தின் மாதம்பாகம பிரதேச செயலக பிரிவில் உள்ள கலகொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள ஜனபத கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற 14 வது “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை மற்றும் குருணாகல் மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

கலகொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவு அம்பலங்கொட நகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தெற்கேயும் மற்றும் கிழக்கே மாதம்பாவில சரணாலயம் மற்றும் மேற்கில் ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் உள்ள குலீகொட கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கலகொடவத்த சுனாமி கிராமம், கலகொட குடியேற்றம் மற்றும் கலகொட புதிய குடியேற்றம் ஆகியவை இக்கிராம அதிகாரி பிரிவைச் சேர்ந்தவை. 1072 குடும்பங்களைக் கொண்டுள்ள கலகொட கிழக்கு கிராமத்தில் மக்கள் தொகை 3711 ஆகும். மீன்பிடித் தொழில், நெல் பயிர்ச்செய்கை, கறுவா மற்றும் தும்புக் கைத்தொழில் ஆகியவை இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க கலகொட மக நெகும மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கிருந்து ஜனபத கனிஷ்ட வித்தியாலயம் வரை வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் உரையாடி பிரதேச மக்களின் விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

மொபிடல் நிறுவனம் ஜனபத கனிஷ்ட கல்லூரியில் தாபித்துள்ள அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறையை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார், டயலொக் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சி குலீகொட சுமன வித்தியாலயம், குமார காசியப்ப வித்தியாலய அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து ஜனாதிபதி அவர்கள், அப்பகுதியில் உள்ள விகாரைகளின் குறைபாடுகள் குறித்து மகா சங்கத்திடம் கேட்டறிந்தார்.

மாதம்பாகம மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கும், அம்பலங்கொட குலரத்ன மகா வித்தியாலயம், பெரலிய ஸ்ரீ ஜினரதன வித்தியாலயம், ஜனபத கனிஷ்ட வித்தியாலயம், வேரகொட விஜயபா பாடசாலை, அகுரல கனிஷ்ட வித்தியாலயம், குலீகொட சுமன வித்தியாலயம், கஹவ ரதனசார வித்தியாலயம் உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

கலபொட மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மக்களின் முக்கிய வாழ்வாதாரமான மீன்பிடித் துறையை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தி, கிராமவாசிகள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.

பெரலிய, தொடந்துவ, அம்பலங்கொட, ஹிக்கடுவ மற்றும் பலபிட்டிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தியை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார். இழுவை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுனாமி மீன்பிடி வீடுகளை புனரமைக்கவும், நீண்டகால காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

தும்புக் கயிறு, பாய்கள் உள்ளிட்ட பிரதேசத்திற்கே தனித்துவமான கைத்தொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பலபிட்டிய, மாதுவ பாலம், ரத்தகம தேவிதிகொட பாலம் கட்டுமானம் உட்பட இப்பகுதியில் 21 வீதிகள் மற்றும் 49 குறுந்தூர வீதிகளை காபட் செய்து அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.

பூசா, பிடிவெல்ல மற்றும் கதுரூப்ப பகுதிகளில் தரிசாக உள்ள நெல் வயல்களை நீர்த்தேக்கங்களாக மாற்றுவதன் மூலம் நன்னீர் மீன்வளத்தை அபிவிருத்திசெய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அம்பலங்கொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட 700 ஏக்கர் தரிசு நெல் நிலங்களை தென்னை பயிர்ச்செய்கைக்காக 700 இளைஞர்களுக்கு ஒரு ஏக்கர் விகிதம் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

சுற்றுலா, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பண்ணை வளர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

உரிமையின்றி அரச நிலங்களை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் இன்று ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் ஐந்து குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்களை அடையாளமாக வழங்கினார்.

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி அவர்கள் பாடசாலைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத் துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

அமைச்சர் ரமேஷ் பதிரன, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, இராஜாங்க அமைச்சர் மொஹான் பி. டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரல, சந்திம வீரக்கொடி, இசுரு தொடங்கொட, ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்ககளின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular