Presidential Secretariat of Sri Lanka

உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரிப்பதே வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவதற்கான வழி ….

 தற்போது அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  •  கட்சியின் கொள்கைகள் மற்றும் அவற்றின் பயன்களை ஒப்பிட்டுப் பாருங்கள்….
  • விவசாய முன்னேற்றத்தின் நன்மைகள் கிராமத்துக்கு….
  •  சுற்றாடலையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் : கட்டுப்பாடுகள் மட்டும் போதுமானதல்ல..
  • பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாற்றம் அடைந்தால் நாட்டுக்கே இழப்பு…

‘வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன் மூலமே அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான 17 வகையான பயிரினங்களை இனங்கண்டு அவற்றின் இறக்குமதியை மட்டுப்படுத்தினோம். தற்போது அவற்றை உள்நாட்டில் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எமது விவசாயிகளுக்கும் எமது கிராமங்களுக்குமே கிடைக்கின்றது.’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

ஒரு கிலோ நெல்லுக்கு முன்னர் வழங்கிய 32 ரூபாவை 50 ரூபாவாக அதிகரித்ததன் பின்னர் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். நெல்லின் விலையை அதிகரித்ததன் மூலம் கிடைக்கும் இலாபம் குறித்த ஒரு பிரதேசத்துக்கு மட்டுமன்றி முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கும் கிடைப்பதாகவும், மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் இவ்வாறான விடயங்களால் மக்கள் அடையும் பயன்கள் எதைப் பற்றியும் கூறுவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அவர்கள் நேற்று (18) மாலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தனது வெற்றிக்கும், தனது அரசாங்கத்தின் வெற்றிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் பங்களிப்பை பாராட்டி தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் முன்னேற்றத்தை அளவிடும்போது, அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகள் மற்றும் அவற்றின் பயன்களை அவதானிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ‘விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்கள் அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. அதன் மூலம் உற்பத்தியாளருக்கு மாத்திரமன்றி நுகர்வோரும் பயன்பெறுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உழைக்கும்போது செலுத்தும் வரியை இரத்து செய்ததால் அரச ஊழியர்களின் வருமானம் அதிகரித்தது. இந்த பெறுபேற்றை கண்டுகொள்ளாதவர்கள் பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்துவதுடன் நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.’ என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கறவை பசுக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய மேய்ச்சல் நிலங்களை உருவாகக் வேண்டும். பரம்பரையாக வசித்துவந்த காணிகளை விவசாயிகள் இழந்திருந்தால் அதற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது சுற்றாடல் அழிப்பு அல்ல. அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் காடுகளை அழிப்பதற்கு அனுமதியளிக்காது. 2030ஆம் ஆண்டாகும்போது வலுசக்தி தேவையின் 70 வீதத்தினை மீள்பிறப்பாக்கத்தின் மூலம் நிறைவு செய்துகொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சூழலை பாதுகாப்பதற்கு இது பாரிய பங்களிப்பை செய்யும். முள் தேங்காய் பயிரிடுவதை நிறுத்தியதன் மூலம் பல மாவட்டங்களில் இடம்பெற்றுவந்த சூழல் பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுற்றாடலை பாதுகாப்பதோடு அதனை அபிவிருத்தி செய்வதும் அவசியமாகும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் நலனுக்காக பாரிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  அவர்கள், நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் இவ் உண்மையை மறைத்து பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து முன்னெப்போதும் இல்லாத பாரிய பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொண்டார். ஆனாலும் எதிர்த்தரப்பினர் முன்வைத்த பொய் பிரச்சாரங்களை நம்பிய மக்கள் 2015இல் அவரை தோற்கடித்தனர். அதன் பின்னர் பாரிய வீழ்ச்சியே இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு இல்லாமல் ஆக்கப்பட்டது. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. நாட்டில் இறைமை இல்லாதொழிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை நாம் எமது நாட்டை அன்று இருந்த நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தனது உண்மையான முயற்சி நாட்டை கட்டியெழுப்புவதுடன், மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதுமாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு பொதுஜன பெரமுன பெண்கள் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

நேற்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுவாக மக்களுக்கும், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலும் உள்ள பல பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களிடம் முன் வைத்தனர். சுயதொழில் முயற்சிகளை உருவாக்கல், வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல், நுண்கடன் பிரச்சினை, கிராமிய வீட்டுப் பிரச்சினை, வாழ்க்கைச் செலவு, போதைப்பொருள் பிரச்சினை, பிள்ளைகளின் கல்விப் பிரச்சினைகள் போன்ற பலவற்றையும் முன்வைத்தனர். போதைப்பொருளை தடுப்பதற்காக தற்போது முறையான வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கு சில காலம் தேவைப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இவ்வருடத்தில் பெண்களுக்காக இரண்டு இலட்சம் சுயதொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். “அரசாங்கம் கருவாடு மற்றும் மாசி இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு சுயதொழிலாக தற்போது இப்பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட முடியும். விவசாயத்துறையில் சுயதொழில்களை உருவாக்குவதற்கு பாரியளவு சந்தர்ப்பம் உள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் தலைவி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, மஞ்சுளா திசாநாயக்க, இராஜிகா விக்கிரமசிங்க, முதிதா பிரசாந்தி, டயனா கமகே ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Most popular