Presidential Secretariat of Sri Lanka

பென்டோரா பத்திரங்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் பற்றி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பு, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களால், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதியன்று, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டப்ளிய.கே.டி.விஜேரத்ன அவர்களினால், 2021.11.08ஆம் திகதியன்று அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்குகளின் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வறிக்கைகள் தற்போது கிடைத்தவண்ணம் காணப்படுவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவித்தார்.

விசாரணைகள் முடிவடையாதுள்ளமையால், கோரப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(English) Recent News

Most popular