Presidential Secretariat of Sri Lanka

திட்டமிட்ட வகையிலும் தொலைநோக்குடனும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள் யதார்த்தமாகியுள்ளன……

– பௌத்த ஆலோசனை சபையின் மஹா சங்கத்தினர் தெரிவிப்பு…..

பொறுமையுடனும் நன்கு திட்டமிடப்பட்ட வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலன்கள் தற்போது யதார்த்தமாகி வருகின்றன. தொலைநோக்குப் பார்வையும் நடைமுறைச் சிந்தனையும் கொண்ட தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒன்றிணைவது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பு என மஹா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற பௌத்த ஆலோசனை சபையின் 12ஆவது கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கொவிட் தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும், ஜனாதிபதி அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி மஹா சங்கத்தினர் பௌத்த ஆலோசனைச் சபையில் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அதலபாதாளத்துக்கு சென்றுகொண்டிருந்த நாட்டையும் தேசத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே தலைவர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை எனவும், கூரகலை புனித பிரதேசம், முஹுது மஹா விஹாரை உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் உள்ள விஹாரைகளைப் பாதுகாத்து, நாட்டுக்கு உரிமையாக்குவதற்கு கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என, மஹா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான உண்மைத் தகவல்களை வழங்குவதும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், பௌத்த ஆலோசனைச் சபையின் பொறுப்பாகும் என்றும் மஹா சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

சட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நிறைவேற்றுவதற்கு மஹா சங்கத்தினரின் வழிகாட்டலை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அழியும் தருவாயில் இருந்த சிங்கள பௌத்த பாரம்பரியத்தை கொவிட் தடைகளுக்கு மத்தியிலும் பாதுகாத்து, பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றபட்டதைப் போன்று, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பௌத்த ஆலோசனை சபையின் மஹா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular