Presidential Secretariat of Sri Lanka

2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் யாழ்ப்பாணத்தில்

  • நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்ப, குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது – சாகல ரத்நாயக்க.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் வேலணை பிரதேசங்களை மையமாக வைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம் சாகல ரத்நாயக்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமையவே குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் ஏழை மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ள அதேநேரம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, விளைந்த அறுவடைக்கு உரிய விலை கிடைத்துள்ளது.

மேலும், இந்த திட்டம் சிறு நெல் ஆலை உரிமையாளர்களையும் வலுவூட்டுவதாக அமையும். இந்த அரிசி விநியோகத்தின் முதல் கட்டத்தை தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் இரண்டாம் கட்டம் இன்று யாழ்.மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இராணுவம் தனது கடமைகளை செய்வதோடு, விவசாய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டுள்ளமை இத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத் திட்டத்தில் விளைசலுக்காக செலவிடப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொண்டு எஞ்சியவற்றை வறிய மக்களுக்கு விநியோகிக்க இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன் முதற் கட்டத்தை மாவட்டத்தில் ஆரம்பிப்பதே ஜனாதிபதியின் நோக்கமாக இருந்தது. எனவே இந்த அரிசியை இன்று உங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்த இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யுத்த காலத்தின் பின்னர் எமது நாட்டில் ஏற்பட்ட சிரமமான காலம் கடந்த சில வருடங்களில் ஏற்பட்டது. அதன்போது நாங்கள் முதலில் கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்டோம். அதன் பிறகு பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த பொருளாதார நெருக்கடியோடு மக்கள் போராட்டத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

உணவு, மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்சாரத்தை துண்டிக்க வேண்டியதாயிற்று. அப்போது வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

அவ்வேளையில் ரணில் விக்ரமசிங்க, அந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பொறுப்பை ஏற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அப்போது நாட்டில் ரூபாயைப்போன்று டொலரும் இருக்கவில்லை. நாட்டின் பொருளாதார செயல்முறை வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த அனைத்துப் பிரச்சினைகளாலும் அன்னிய செலாவணி வருமானத்தை இழந்தோம். சுற்றுலா பயணிகள் வரவில்லை.

தொழிற்சாலைகள் இயக்க மின்சாரம் இல்லை.போக்குவரத்து முடங்கியது.

அன்று ரணில் விக்ரமசிங்க, நாட்டைப் பொறுப்பேற்ற போது அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலை நாட்டில் காணப்பட்டது. இன்னும் பத்து நாட்கள் சென்றிருந்தால் நாடு முழுவதுமாக முடங்கிவிடும். நாம் ஒரு தீவு நாடு. எங்களால் எல்லையை தாண்டி வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது. எங்கிருந்தும் உணவு கொண்டு வரவும் முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் தலைவராக பொறுப்பேற்று ஒரு சில நாட்கள் செல்வதற்கு முன்னரே நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. மேலும் அப்போது நிலவிய பல பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர ஆரம்பித்தன.

முக்கியமாக எரிவாயு, உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

அதேநேரம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தை உருவாக்குவது எளிதான காரியம் அல்ல. பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற முடியாமல் தவிக்கும் பிற நாடுகளும் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு, முதலில் சர்வதேச நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த நம்பிக்கையின் காரணமாகவே தற்போது சர்வதேச சமூகம் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது. வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வருகிறார்கள். நாடு படிப்படியாக ஸ்திரம் அடைந்து வருகிறது.
ஒரு அடி கூட பின்வாங்காமல் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்வதற்கான பின்னணியை ஜனாதிபதி தற்போது தயாரித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் பற்றி நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இப்போது நல்லிணக்கம் பற்றி பேசியது போதும். இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. காணாமல் போனவர்களை கண்டறியும் நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மக்களின் வறுமையை அகற்றவும் சமூக பாதுகாப்பு திட்டம் கட்டமைக்கப்படும்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டம் சாதி, மத பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகிறது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாடு கடுமையான நெருக்கடியில் இருந்தபோது, நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒட்டுமொத்த மக்களும் நன்றி கூற வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட ஒன்றிணைய வேண்டும் என நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல்

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த வேளையில் தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். ரணில் விக்ரமசிங்கவிடம் நாடு கையளிக்கப்பட்டதால் பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. மேலும் அப்போது யாழ்ப்பாண மக்கள் மிகவும் கவனமாக நடந்துகொண்டார்கள். சமுர்த்தி குடும்பங்களுக்கு மாத்திரமன்றி வறுமையில் உள்ள குடும்பங்களுக்கும் புத்தாண்டுக்கும் புத்தாண்டுக்குப் பின்னரும் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, யாழ் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட, உட்பட முப்படை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular