Presidential Secretariat of Sri Lanka

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கையாகும்

  • இளைஞர் கோரிய மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
  • இன்று கடமையை செய்தால் இன்னும் 25 வருடங்களில் பெருமிதம் கொள்ள முடியும் – இளையவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்.

இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் இன்று (13) நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2048 அபிவிருத்தி அடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஆரம்ப முயற்சியாக உலகில் இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பை இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை இளைஞர்களே கோரினர். ஆகையால் இந்த சந்தர்பத்தை கொண்டு உரிய வகையில் பயனடைவர் என தான் நம்பவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டமான (UNDP) இன் உதவியுடன் இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உரையாற்றினர்.

பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள 17 துறைகளுக்கான துறைசார் மேற்பார்வை குழுக்களுக்காக பத்திரிகை விளம்பரம் ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டு பாராளுமன்றச் செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட 18 – 35 வயதுக்கிடையிலான 550 இளைஞர்களுக்கு செயலமர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த துறைசார் மேற்பார்வை குழு செயற்படுவதோடு, திருத்தம் செய்யப்பட்ட நிலையியற் கட்டளை ஏற்பாடுகளுக்கு இணங்க முன்னெடுக்கப்படும் விசாரணைச் செயற்பாடுகளின் போது செயற்குழு தலைவர்களின் உதவிக்காக இளம் உறுப்பினர்கள் ஐவரை தெரிவுசெய்து அழைப்பு விடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு செயற்குழுவிற்குமான இளம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இன்று இந்த சபையில் 500 புதிய இளம் உறுப்பினர்கள் இணைந்துகொண்டுள்ளனர். மேற்பார்வையாளர்களாக அன்றி பாராளுமன்ற குழுக்களில் உள்ள இளம் பிரதிநிதிகளாகவே இவர்கள் பங்கெடுத்துள்ளனர். உலகில் முதல் முறையாக இவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

பாராளுமன்ற குழுவிலும் அமெரிக்க செனட் குழுவிலும் காங்கிரஸ் குழுவிலும் அவர்களது சபை உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். ஆனால் நமது பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நிலையியற் கட்டளைகளில் மேற்கொண்ட திருத்தங்கள் காரணமாக இளம் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மேலதிகமாக உங்களது கருத்துகளும் உள்வாங்கப்படும். சபை அமர்வுகளும் விவாதங்களும் மட்டுமே பாராளுமன்றத்தின் பணிகளென பலரும் நினைக்கிறார்கள். இன்று அநேகமான பாராளுமன்றங்கள் குழுநிலைச் செயற்பாடுகள் மூலமே அதிகளவான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதி வழங்கலை அனுமதித்தல் நிதியை ஈடுபடுத்தல், செலவிடுதல், சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கூட்டுத்தாபனங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வை குழுக்களின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் சபை அமர்வில் பங்கேற்றல் மற்றும் உரையாற்றுதல் ஆகியவற்றை தவிர்ந்த ஏனைய அனைத்து பணிகளிலும் நீங்கள் பங்கெடுக்க முடியும்.

இந்த திட்டம் பற்றி கூறிய போது இது சாத்தியப்படாத விடயம் என சிலர் கூறினர். சிலர் இதனால் பயனில்லை நேரம் மட்டுமே வீணாகும் என்றனர். சிலருக்கு திட்டம் எவ்வாறானது என்பதே பெரும் குழப்பமாகியிருந்தது.

இருப்பினும் சிலர் அச்சமின்றி தங்களது பெயர்களை அனுப்பி வைத்தனர். அவர்களிலிருந்தே சிறந்த 535 பேரை நாம் தெரிவு செய்துள்ளோம்.

நீங்கள் சாத்தியமாக்கிக் காட்டுங்கள். நீங்கள் சாத்தியமாக்கிக் காட்டிய பின்னர் மற்றையவர்களும் இந்த பணியில் பங்கெடுப்பர். அதன் பின்னர் ஆயிரக் கணக்காணவர்கள் வரத் தொடங்கிவிட்டால் எவ்வாறு நிர்வகிப்பது என்பதை பற்றியே இப்போது நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறிதளவான இளைஞர்களுக்கு மட்டுமே உலகில் இவ்வகையான வாய்ப்புகள் கிட்டியிருந்தன. அந்த வகையில் 28 வயதில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பிரதி அமைச்சராக பொறுப்பேற்ற நான் அதிஷ்டசாலியாவேன். அதற்கு முன்னதாக அப்போதைய பிரதமர் ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் பாராளுமன்றத்திற்கு செல்லக் கிடைத்ததால் பாராளுமன்ற கடமைகள் பற்றி அறிந்துகொண்டேன். பலருக்கும் அவ்வாறான வாய்ப்புக்கள் கிட்டியதில்லை. இன்று உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. அதனை கொண்டு முழுமையாக பயனடையுங்கள்.

கடந்த வருடத்தில் இந்நாட்டில் பெரும் மோதல்கள் ஏற்பட்டிருந்தன. அந்த நேரத்தில் மேற்படி விடயம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் கலந்துரையாடினேன். இந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை வழங்கலாம் என ஆலோசித்தோம். அதற்கு முன்னதாக வைக்கப்பட்ட எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்காததால் 225 பேரையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிடுவோம் என்று கூறினார்கள். அப்படிச் செய்திருந்தால் சுற்றாடல் பாதிப்பு மட்டுமே ஏற்பட்டிருக்கும்.

அதன் பின்னர் அவர்களின் வெற்றிடத்திற்கு புதியவர்கள் 255 பேரை கட்சிகளின் செயலாளர்கள் நியமித்திருப்பர். உண்மையில் பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது, வீடுகளுக்கு தீ வைப்பதும் வீதிகளில் இறங்கி வீடுகளுக்கு தீ வைப்பதும் பாராளுமன்றத்தை சுற்றி வளைப்பதும் தீர்வாக அமையாது.

நாம் ஏன் வங்குரோத்து நிலைக்குச் சென்றோம். எமது பொருளாதாரத்திற்கு என்ன நடந்தது என்ற பிரச்சினைகள் தலையெடுத்திருந்தன. எனது சிறு வயது காலத்தில் இலங்கையானது ஜப்பானுக்கு அடுத்தபடியான நாடாக விளங்கியது. இன்று நாம் எங்கு இருக்கிறோம்.

அதன்படி இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களிடத்தில் கேட்டபோது, அதற்கான தீர்வாக இளையவர்களை பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களில் உள்வாங்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். அதனை சபாநாயகரும் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். எனவே அவருக்கு நன்றி கூற வேண்டும்..

இவ்வாறானதொரு சந்தர்ப்பம் எவருக்கும் கிடைக்கும் என நான் நம்பவில்லை. பொருளாதார வீழ்ச்சியால் நாடு முடங்கிக் கிடக்கும் வேளையில் முழுமையான மறுசீரமைப்புச் செயற்பாடொன்றினை நாம் முன்னெடுக்க முயற்சிக்கிறோம். அதற்காக செலவீனங்களை மட்டுபடுத்தினோம். புதிய செயற்றிட்டங்கள் கொண்டுவரவேண்டும், இப்போது விலைச் சூத்திரங்கள் ஊடாக எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது, புதிய கல்வித் திட்டம் ஒன்று பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

இப்போது அரசாங்கம் காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான 5 புதிய சட்டங்களையும், பெண்களின் உரிமை பாதுகாப்பு தொடர்பிலான 3 அல்லது 4 சட்டங்களையும் கொண்டுவரவுள்ளதோடு, வேறு பல புதிய சட்டங்களும் கொண்டுவரப்படவுள்ளன. அவை தொடர்பில் கலந்தாலோசித்து உங்களுடைய கருத்துகளையும் வழங்குங்கள்.

எவ்வாறு நிதி செலவிடப்படுகிறது. குறித்த சில துறைளுக்கு வழங்க காரணம் என்ன? சில விடயங்களுக்கு வழங்கப்படாததன் காரணம் என்ன? இவை அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு உதவ பாராளுமன்றத்தில் ஆய்வு குழுவொன்று உள்ளது. பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றும் புதிதாக நிறுவப்பட உள்ளது. ஏனைய அமைச்சுக்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையமும் அரசியல் கல்விக்கான கேந்திர நிலையமாக மாற்றப்படவுள்ளது. இவை அனைத்தையும் கொண்டு முழுமையாக பயனடையும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

பாராளுமன்ற அங்கத்தவர்களாகிய நமக்கும் அதற்குரிய பணிகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பாராளுமன்றத்தில் எல்லா நேரங்களிலும் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்த மேற்பார்வை குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் இவற்றில் கட்டாயம் பங்கேற்ற வேண்டும்.

அன்றாட விடயங்களை மாத்திரமின்றி முக்கியமான விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். குழு அமர்வு இடம்பெறாவிட்டால் அது குறித்து தலைவர்களிடத்தில் கேட்டறிய வேண்டும். எம்.பிக்கள் பங்கெடுக்காவிடின் அவர்களிடத்திலும் காரணங்களை கேட்டறியுங்கள். 2 மாதங்களுக்கு மேலாக பங்கெடுக்காதவர்களை மாற்றுங்கள், இல்லாவிட்டால் இளையவர்களுக்கான வாய்ப்புக்களும் இல்லாமல் போய்விடும்.

முதற் தடவையாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கொண்டு முழுமையாக பயனடைய வேண்டும்.

எமது பாராளுமன்றம் பழமையானது. 1835 ஆம் ஆண்டு முதலான பாரம்பரியத்தை கொண்டது. எம்மை விட பழமையான பாராளுமன்றங்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க், சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளன.

இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நாம் பொதுநலவாய குழுவினருக்கும் அறிவித்து அவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடியும்.சர்வதேச பாராளுமன்ற சங்கத்தினருக்கு அறிவித்து அவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடியும். ஐரோப்பிய பாராளுமன்றம் இதுபற்றிய விஷேட அவதானத்தை செலுத்தும். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவின் உதவியையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அந்த பொறுப்புகள் உங்களையே சார்ந்துள்ளது. பாராளுமன்றத்தின் இளம் பிரதிநிதிகளும் எம்.பிக்களும் இணைந்து இந்த பணிகளை செய்யுங்கள்.

நாம் அபிவிருத்து அடைந்துவரும் நாடாகவே இருக்க முடியாது. எவ்வாறு நாம் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவது என்பதை சிந்திக்க வேண்டும். எமக்கு நல்லதொரு எதிர்காலம் தேவைப்படுகிறது. அதற்காக நல்லதொரு பொருளாதாரமும் அவசியமரகியது. சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அது பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள்.

கரு ஜயசூரிய அவர்களினால் மக்கள் சபை சட்டம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. அதன்கீழ் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் சபையொன்று உருவாக்கப்படும். அதனிலும் பங்கெடுக்க இளையோருக்கு வாய்ப்பளிக்கப்படும். பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்காக கிராம மட்டத்திலுள்ள அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தேசிய இளைஞர் மன்றத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த மாற்றங்களை காண இன்னும் பல நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலமைப்புக்கு அமையவே செயற்றிட்டங்களை மாற்ற வேண்டும். அடுத்த பாராளுமன்றம் வரும் வரையில் பார்த்துக்கொண்டிருக்காமல் உங்கள் அனைவருக்கும் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சவாலை நாம் ஏற்றுக்கொண்டு நல்ல தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.

25 வருடங்களின் பின்னர் “நாம் மேற்கொண்ட தீர்மானங்களே இலங்கையின் அபிவிருத்திக்கு வழிவகுத்தன” என்று நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,

“நாம் அனைவரும் சிறப்பானதொரு பாதைக்கு பிரவேசித்துள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி திட்டத்தை செய்வதாக உறுதியளித்திருந்தார். இன்று அதனை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. 17 துறைசார் மேற்பார்வை குழுகளில் பங்கேற்பதற்காக 500 இற்கும் மேற்பட்ட இளம் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளீர்கள். இளையோருக்கு வழங்கியுள்ள இந்த வாய்ப்பினால் புதிய ஜனநாயக கட்டமைப்பொன்றிற்குள் நாம் புகுந்துள்ளோம். அந்த வகையில் ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறகும் பொறுப்பு இரு தரப்பினரையும் சார்ந்துள்ளது.

இளையோருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஆரம்பத்தில் இளையோருக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 1960 களிலேயே இளைஞருக்கான வாக்குரிமை சட்டமாக்கப்பட்டது. நாட்டின் வளங்கள் உரிய வகையில் முகாமைத்துவம் செய்யப்படாத காரணத்தினால் பெரும் அழிவு ஏற்பட்டது.

நாட்டின் வளங்கள் பற்றிய மேற்பார்யை இருக்கவில்லை. கல்வி கற்ற இளைஞர்களின் பங்களிப்பு, முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்தும் இயலுமை உள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பாதகமாக அமையும் பட்சத்தில் அவற்றில் திருத்தம் செய்வது குறித்தும் கலந்தாலோசிக்கலாம். அவ்வாறாயின் மட்டுமே இந்த செயற்றிட்டத்தை சாத்தியமாக்க முடியும். நாட்டின் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்தி, அரசியல் ஸ்திரத்தன்மையினையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உங்களது பங்கேற்பை தேசிய கடமையாக எண்ணுங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டங்கள் நீண்டகாலமாக எமது நாட்டிற்கு பங்களிப்பை வழங்கி வருகின்ற நிலையில் அதனூடாக புதிய பலன்களை பெற்றுக்கொள்ள முற்பட வேண்டியது அவசியமாகும். பல சவால்களை நாம் வெற்றிகொள்ள வேண்டியுள்ள நிலையில் அர்பணிப்புடன் பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

படைப்பாற்றல் மூலம் புதிய பயணத்தை மேற்கொள்ள முடியும். வரவிருக்கும் சவால்களைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். இலட்சக்கணக்கானவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர்தர கல்வியை கைவிட்டுச் செல்கிறார்கள். இந்த இளம் தலைமுறையின் பிரச்சனையை நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சிகளையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேற்பார்வைக் குழுக்கள் பாரம்பரிய சிந்தனைகளை விடுத்து இளைஞர்களின் ஆலோசனைகளுடன் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் பலமாக செயற்பட வேண்டும்.” என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இங்கு கருத்துரைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

“நமது நாட்டின் முக்கியமான திருப்புமுனையாக அமையும் செயற்பாடொன்றிற்காக பாராளுமன்றம் பங்கெடுப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறானதொரு பணி இடம்பெறுகிறது. ஜனாதிபதியின் திட்டத்திற்கமையவே பாராளுமன்றத்திற்கு இளையவர்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படுகிறது. கடந்த காலங்களில் இளையோர் பாராளுமன்றம் மற்றும் இளைஞர் சேவை மன்றத்தை உருவாக்கியவரும் தற்போதைய ஜனாதிபதியாவார். இளையவர்களின் முன்மொழிவுகள் நாட்டின் நிர்வாகத்திற்கு அவசியம் என்பதை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார். அந்த திட்டத்தை சாத்தியமாக்கிக்கொள்ள பாராளுமன்றத்தின் செயலாளர் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

எமது நாடு பல துரதிஷ்டமான யுகங்களை கடந்து வந்துவிட்டது. இளையோரின் கலவரங்களை கண்டது, முப்பது வருட யுத்தம் ஒன்றையும் கண்டது. நாட்டின் நிலைமையை வழமைக்கு திரும்பச் செய்ய இன்று பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலத்தில் நாடு மிகப்பெரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அதற்கு ஆர்ப்பாட்டம் செய்வதே தீர்வாகும் என சிலர் எண்ணிக்கொண்டிருந்தனர். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் எமக்கு கிடைத்த பலன் என்ன? இவ்வாறனதொரு யுகத்தை கடந்தே இந்த இடத்திற்கு நாம் வந்துள்ளோம்.

துறைசார் மேற்பார்வை குழுக்களின் உள்ளக உறுப்பினர்களாக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். நாட்டில் நடைமுறைப்புடுத்தப்படும் அனைத்து சட்டங்களும் சட்டமூலங்களும் துறைசார் மேற்பார்வை குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் முன்பாக தீர்க்கமாக ஆராயப்படும். இறுதியில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும்.

அவ்வாறான விடயங்களுக்கே இளையவர்களின் அறிவுடன் கூடிய கலந்துரையாடல்கள் அவசியப்படுகின்றன. அதனாலேயே நாட்டின் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நம் சகலரினதும் கருத்துகள் நாட்டிற்கு அவசியமாகும். கலவரங்களுக்கும் யுத்தங்களுக்கும் முகம்கொடுத்து பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கும் நாட்டிற்கு அவை வலுவாக அமைய வேண்டும். எம்மிடத்தில் பெறுமதியான சூழலும், வலுவும், பெறுமதியான அறிவை கொண்ட மக்களும் உள்ளனர் அவ்வாறானதொரு நாடு எவரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியமில்லை.’’ என்று குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

“எமது நாட்டின் அரசியல் களத்தில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகவே காணப்படுகின்றது. அதற்கு மாறாக சொல்வதை செய்யும் கலாச்சாரம் உருவாகினால் இன்றைய தினம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். எதிர்கட்சி என்ற வகையில் நல்ல விடயங்களை வரவேற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவரும் நாட்டிற்கு நல்ல விடயமொன்று கிட்டுமாயின் அதனை வரவேற்பது அவசியம். அதனால் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் இந்த பணி பாராட்டுக்குரியது. நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகிறது. அந்த வகையில் 17 துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு 530 இளைஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரியது” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

(English) Recent News

Most popular