- எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
- அடுத்த ஆண்டு முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும்- ஜனாதிபதி.
எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் இன்று (31) முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தை மற்றும் நிதி அறிவாற்றல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம். ரணசிங்க,இலங்கை பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
நுகவெல மத்திய கல்லூரியில் மூலதனச் சந்தை பற்றிய சங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பட்டயச் சான்றிதழ் மற்றும் ஒரு இலட்சம் ரூபா நிதி என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாடசாலை அதிபர் தம்மிக்க பண்டாரவிடம் வழங்கி வைத்தார்.
அத்துடன், மூலதனச் சந்தை பற்றிய அறிவைப்பெறக் கூடிய நூல்களின் தொகுப்பு ஜனாதிபதியின் கரங்களினால் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியை அச்சினி கனிடுவெவவிடம் கையளிக்கப்பட்டது.
கல்லூரியின் சித்திரப்பாட ஆசிரியை நயனா விஜேகோனினால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படமும் இதன் போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
“நாம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு நின்றால் உலகம் நம்மைக் கடந்து செல்லும்” என்ற பாடலை மேற்கோள் காட்டி கல்வி அமைச்சர் உரையாற்றினார். அதை மனதில் வைத்துத் தான் இன்று இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைத்தொழில்துறை யுகத்தின் அணுகுமுறைகளுடன் நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றினோம். அந்தf; கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டோம். அதன் முடிவுகளை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாறினோம். ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றும் திட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளேன். அதனை எமது அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
ஒரு நாடு என்ற வகையில் மீண்டும் படுகுழியில் விழாமல் எப்படி முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளைத் தொடர்வதா அல்லது புதிதாகச் சிந்தித்துப் புதிய பாதையில் செல்வதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பழைய முறையின் கீழ் சென்றால், ஒரே இடத்தில் சுற்றுவதற்குக் கூட நாடொன்று எஞ்சாது. ஏனென்றால் இன்று நாம் இருக்கும் இடத்தில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கக் காத்திருக்கும் தலைமுறைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதையும் கூற வேண்டும். எனவே தொழில்நுட்பத்துடன் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்ப வளர்ச்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
நாங்கள் பாடசாலையில் கற்கும் போது கிராமங்களில் ஒரு தொலைபேசி கூட இருக்கவில்லை. ஆனால் இன்று அனைவரிடமும் கைபேசி உள்ளது. சிலரிடம் இரண்டு கைபேசிகள் இருக்கின்றன. அதுதான் நிகழ்ந்துள்ள மாற்றமாகும்.
இந்த மாற்றத்துடன் நாம் முன்னேறும்போது, நவீன தொழில்நுட்பத்தை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக பல பாரிய பணிகளை செய்து வருகிறோம். மேலும், கல்வி அமைச்சு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறைகளை முடிவு செய்ய வேண்டும். பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு,ஜெனொம் விஞ்ஞானம் என இவை அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் இந்த தொழில்நுட்பத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால், புதிய தொழில்நுட்பத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேறும் போது இன்னொரு விடயத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மட்டும் போதுமானதல்ல. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. நாம் அனைத்து விடயங்களுக்கும் பணத்தை பயன்படுத்தும் சமூகம். இன்று அந்தப் பணம் மிகவும் திறந்த சந்தையில் பயன்படுத்தப்படுகிறது. பணப் பயன்பாட்டை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அமெரிக்க அரசாங்கமோ அல்லது சர்வதேச நாணய நிதியமோ அதைச் செய்ய முடியாது.
அன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் இருக்கவில்லை. இலங்கைக்கு இணையத்தைப் பெற 1993 ஆம் ஆண்டில் நான் கையெழுத்திட்டேன். அதுவரை இந்த வசதிகள் எங்களிடம் இல்லை. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாம் மிகக் குறுகிய காலத்தில் உலகத்துடன் இணைந்துள்ளோம்.
மேலும், போட்டித்தன்மையான பொருளாதாரத்தில், எல்லைகளைப் பற்றி கவலைப்படாத நிதி முறைமையே உள்ளது. இது நல்லதோ கெட்டதோ அதை மாற்ற முடியாது. இந்த எல்லையில் இருந்து நாம் செயற்பட வேண்டும். உலகிற்குத் தேவையான பணம் இறுதியாக சந்தையில் இருந்து பெறப்படுகிறது. வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை வங்கிகளிடமிருந்து பெறுகின்றன. நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை பங்குச் சந்தையில் இருந்து பெறுகின்றன. அதற்கேற்ப பணம் பயன்படுத்தப்படுகிறது.
இங்கே மிக முக்கியமான விடயம் பணம். தனியார் துறையைப் போலவே, அரசாங்கமும் பணச் சந்தையைத் தான் தேர்ந்தெடுக்கிறது. திறைசேரி முறிகளை பெறுகிறோம். இன்று இந்த முறையைப் பற்றி உங்களை அறிவூட்ட அதன் ஒரு பகுதியைத்தான் இன்று ஆரம்பித்துள்ளோம்.
அதேபோல் அடுத்த வருடத்திலிருந்து மத்திய வங்கி அறிக்கைகளை பாடசாலைகளில் ஆராய்வதற்கு எதிர்பார்க்கிறேன். அது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களை பயிற்றுவிப்பதோடு, வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய முறைமைகள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிவை பெற்றுக்கொடுப்பதற்கு மாத்திரமன்றி நிதிப் பயன்பாடு, பிணையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கிராமங்கள் வரையில் கொண்டுச் செல்ல வேண்டும். கிராமங்களில் திறமையானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அவசியமான அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
இன்று முழு உலகமும் ஒரே சந்தையாக இயங்குகிறது. அதனுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும். அதற்காக பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் கைசாத்திட வேண்டும். சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஜப்பான், கிழக்காசியா, தென்கிழக்காசியா,அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் புதிய சந்தைக்குள் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோல் அவசியமான வசதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாம் ஐரோப்பிய சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இன்னும் இரு வாரங்களில் அமெரிக்க குழுவொன்று எம்முடன் பேச்சுவார்தைக்காக இலங்கை வரவுள்ளது. அதனால் உலக சந்தை மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும்.
நாம் புதிய பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் கட்டமைப்போம். பசுமைப் பொருளாதாரத்திலும் பங்குப் பரிவர்த்தனை இருக்கும். அதற்குள் புதிய முறைமைகள் காணப்படும். அதேபோல் கடல்வழிப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அது தொடர்பில் லண்டனிலுள்ள விசேட சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடி சட்டங்களை உருவாக்கி வருகிறோம். நாம் புதிய பொருளாதார முறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமா முடங்கிக் கிடக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
இன்னும் 10-15 வருடங்களாகின்ற போது, இங்குள்ள பலரும் 25-35 வயதை அடைந்திருப்பீர்கள். அதனால் உங்களுடைய எதிர்காலம் தொடர்பில் இன்றிலிருந்தே தீர்மானிக்க வேண்டும். அதற்கு அவசியமான அறிவை நாம் பெற்றுத்தருவோம். அதற்கான வேலைத்திட்டத்தினையே இப்போது ஆரம்பித்திருக்கிறோம்.
தற்போது 100 பாடசாலைகள் மாத்திரமே இந்த வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த எண்ணிகையில் அதிகரிப்புச் செய்யப்படும். பங்குச் சந்தை, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு இயலுமை இருக்குமாயின் இந்த செயற்பாடுகளுடன் தொடர்ந்து கைகோர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்று அல்லது இரண்டு சங்கங்களை பொறுப்பேற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குங்கள்.
இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக 10 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில் கிடைக்கும். அதனை தவிர்ந்த எந்தவொரு தொகையினையும் இந்த திட்டத்திற்காக செலவிட வேண்டாம். இதனை ஒரு இலட்சத்திற்கு மட்டுப்படுத்துங்கள். வருட இறுதியில் எந்த பாடசாலை சிறப்பாக செயற்பட்டுள்ளது என்பதை தேடியறிவோம். வேலைத்திட்டத்தினை சரியான முறையில் நிறைவு செய்யும் பாடசாலையின் 10 மாணவர்களுக்கும் விடயம் சார்ந்த ஆசிரியருக்கும் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.
அதனாலேயே அந்த தொகையை ஒரு இலட்சத்திற்கு மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது. வறுமையான பகுதியாக இருந்தாலும் வளர்ச்சியடைந்த பகுதியாக இருந்தாலும் செலவு 1 இலட்சம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கும் அந்த வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். அதனூடாக புதிய பொருளாதார பாதைக்குள் பிரவேசிக்க முடியும். அதேபோல் 2048 இல் அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பொறுப்புக்களை உங்களிடத்தில் கையளிக்கிறேன். இதற்கு பங்களிப்பு வழங்கி ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.
நுகவெல கல்லூரிக்குள் நுழைந்த போது எனக்கு மற்றுமொரு விடயம் நினைவில் வந்தது. முன்னாள் கல்வி அமைச்சர் சீ.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கர அவர்களே மத்திய கல்லூரிகள் தொடர்பிலான யோசனையை அரச மந்திரிகள் சபையில் சமர்பித்து நிறைவேற்றினார். அதன் பலனாக பாராளுமன்ற தேர்தலில் ஹொரனை மக்கள் அவருக்கு தோல்வியை பரிசளித்தனர்.
அதுவே கல்வி அமைச்சர்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைமையாகும். அதற்காக அடுத்த அரசாங்கத்தில் டீ.எஸ் சேனநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். ஏ.டி நுகவெல கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அவர் 50 மத்திய கல்லூரிகளை நிறுவ உதவினார். நுகவெல மத்திய கல்லூரிக்கு மேலதிகமாக மேலும் 49 மத்திய கல்லூரிகளை உருவாக்கியமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் உருவாக்கிய பாடசாலையொன்றில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதும் மகிழ்ச்சிகுரியதாகும் என்றார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த :
1999 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வின் பலனாக 2003 ஆம் ஆண்டில் STEM கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகின் 100 நாடுகள் அந்த கல்வி முறையை பின்பற்றுகின்றன. நாமும் தற்போது அந்த முறையை ஆரம்பித்துள்ளோம். பின்னர் அதற்குள் மேலும் ஒரு அங்கம் இணைக்கப்படும்.STEAM கல்வி முறைக்குள் வணிக மற்றும் நுண்கலை விடயப்பரப்புக்களும் உள்ளடக்கப்படும்.
எந்தவொரு கல்வி முறையும் ஒழுங்குமுறை அடிப்படையில் சாத்தியமானாலும் நடைமுறையில் எவ்வாறு சாத்தியமாகும் என்ற பிரச்சினைகள் தோன்றும். மாணவர்களுக்கு காசோலைகள், பரிவர்த்தனை பத்திரங்கள் பற்றிய தெரிவு பெருமளவில் தெரிவு இல்லை. இலங்கைக்குள் எந்த அளவிற்கு வணிக வங்கிகள் காணப்பட்டாலும் வணிக கல்வி பயிலும் மாணவர்கள் வங்கிக்கு சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பில் அறியமாட்டார்கள். குறைந்தளவில் சுற்று நிருபங்களை கூட கண்டதில்லை. மூலதனச் சந்தை குறிப்பிட்ட சிலருக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக முதலீட்டு தெரிவுடன் கூடிய மாணவர்களை பாடசாலைகளில் உருவாக்க முடியும் என்றார்.
இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர,
மண்ணில் விதைக்கப்படும் சிறு விதையும் பெரும் விருட்சமாகலாம். அந்த கூற்றுக்கு அமையவே பாடசாலைகளுக்குள் மூலதனச் சந்தைப் பற்றிய சங்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை ஆரம்பிக்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலைகளுக்குள் மூலதனச் சந்தைப் பற்றிய சங்கம் ஒன்றை கட்டியெழுப்பும் திட்டம் தயாரிக்கப்பட்டது. உயர்தரப் பரீட்சையில் வணிக துறையில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய 100 பாடசாலைகளை தெரிவு செய்து இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ரஜீவ பண்டாரநாயக்க:
ஜனாதிபதியின் எண்ணகருவுக்கு அமைவாக ஆரம்பிக்கப்படும் நூறு மூலதனச் சந்தைப் பற்றிய சங்களையும் எதிர்கால முதலீடுகளாக கருத முடியும். நான்கு தேசிய நிறுவனங்கள் இதற்காக ஒன்றுபட்டுள்ளமையினால் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தனியாகச் செய்யக்கூடியவைகளை விடவும் ஒன்றுபட்டு செய்யக்கூடிய விடயங்கள் அதிகமாகும். இந்த எண்ணக்கருவை செயற்படுத்துவதால் இத்துறைசார் பங்குதாரர்களை அதிகரித்தல், கல்விசார் கூட்டிணைவை ஏற்படுத்தல், நிதிசார் கல்வி நாமங்களை உருவாக்குதல் போன்ற விடயங்களுக்கு அடித்தளம் இடப்படும்.
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பைசால் சலே,
மூலதனச் சந்தையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது, நிதிசார் அறிவு மிகவும் அவசியமாகும். வலயத்தின் நிதிசார் அறிவு தொடர்பில் பார்க்கும் போது குறைந்த மட்டத்திலேயே உள்ளது. மூலதனச் சமூகம் ஒன்றை கட்டமைப்பதால் பாடசாலைகளிலேயே அது பற்றிய தெரிவுகளை மாணவர்கள் பெற்றுகொள்ள முடியும். அதேபோல் மாணவர்களுக்குள்யேயும் இதுபற்றிய உந்துதல் ஏற்படும். பாடசாலைகளில் 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இது தொடர்பான அறிவை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் நேரடி ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வுகளை நடத்தவுள்ளோம். பாடசாலைக் கல்விக்குள் மேற்படி விடயங்களை உள்ளீடு செய்ய ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரின் உதவியை எதிர்பார்க்கிறோம் என்றார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கொழும்பு பங்குச் பரிவர்த்தனையின் தலைவர் தில்ஷான் விஜேசேகர உள்ளிட்டவர்களுடன் அரசாங்க அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.