அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வதால் செயல்திறன் மற்றும் பயனுள்ள சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
உலக நாடுகளை பார்க்கும் போது அரச நிறுவனங்களை வழிநடத்தும் நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளதையும் அரச நிறுவனங்களை வழிநடத்தாத நாடுகள் அபிவிருத்தி கண்டுள்ளதையும் அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அபிவிருத்திக்கான பிரவேசத்தின் போது அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு” என்ற தலைப்பில் நிதி அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற அறிவியல் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாங்க முடியாக சுமையாக மாறியிருக்கும் அரச ஊழியர்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், செயற்பாட்டளர்கள், ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் மேற்படி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் புகையிரத திணைக்களத்தை நடத்திச் செல்வதற்காக 2010-2020 வரையில் 333 பில்லியன் ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டிருப்பதாகவும் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.
மக்கள் பணத்தை அதிகளவில் செலவிட்டு நடத்திச் செல்லப்படும் மேற்படி நிறுவனங்களை உரிய வகையில் முகாமைத்துவம் செய்திருக்கும் பட்சத்தில் வருடாந்தம் 30 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சேமித்திருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மறுசீரமைக்கும் எந்த நோக்கமும் அரசாங்கத்திடம் இல்லையென சுட்டிக்காட்டிய அவர், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிடவும் அதிக தொகையை அடுத்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர;
இலங்கை மின்சார சபை மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்குள் 4000 ஊழியர்களுக்கான தட்டுப்பாடு தற்போதும் காணப்படுகின்றது. இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களை கொண்டு தற்போது வழங்கப்படும் சேவைகளை முன்னெடுக்கூடியதாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 3292 ஆகவும் தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2100 ஆகவும் காணப்படுவதோடு, 1192 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
மின்சார சபைக்காக அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 24000 ஆக காணப்படுகின்ற போதிலும் தற்போதும் 21000 ஊழியர்கள் மாத்திரமே சேவையில் உள்ளனர். அதன்படி அங்கும் 3000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இந்த நிலைமைகளை பயன்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டாமல் நாட்டின் நிலையான அபிவிருத்தியை கருத்தில் கொண்டே தீர்மானங்கள மேற்கொள்கிறோம்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி பேராசிரியர் சிரிமல் அபேவர்தன :
மறுசீரமைப்பின் ஊடாக பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துகொள்ளும் அதேநேரம், நல்லாட்சியினூடாக பொதுமக்களின் செயற்பாடுகள்,சட்டம், ஒழுங்கு என்பவற்றிலும் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
அரச நிறுவனங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை. இருப்பினும் அதற்குள் நிதி ஒழுக்கம், வெளிப்படைத் தன்மை, செயல்திறன், வீண் விரயம், மோசடி போன்ற பலவீனங்கள் காணப்படுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளிலும் பொருளாதார நிலைமை அவ்வண்ணமே உள்ளது என்பதால் அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வதன் வாயிலாக பொருளாதார முன்னேற்றத்திற்கான உந்துதல் ஏற்படும். அத்தோடு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் வகையில் மக்களையும் கட்டமைக்க வேண்டும்.