Follow Us:

Friday, Dec 13
நவம்பர் 18, 2024

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும்

-தேசிய மக்கள் சக்திக்கு வலுவான ஆணையை வழங்க ஆர்வமாக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி .

-இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் கிடையாது.

– தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் இலக்கை அடைய அனைத்து மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அவசியம்

– இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அறைகூவல். அவர்களுக்கு இந்த சுதந்திரம் அவசியம்

நமது வெற்றி எவ்வளவு பெரியதோ, அதே போல பொறுப்பின் எடை அதே அளவானது

அதற்காக ஒன்றுபட்டுச் செயற்படுவோம்!

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதேஅளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

குறிப்பாக இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவமான திருப்புமுனை செப்டம்பர் 21 ஆம் திகதி நிகழ்ந்தது.நீண்டகால எமது நாடு பயணித்த பாதையை மாற்றியமைப்பதற்கு மக்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்மானம் எடுத்தனர்.அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் செப்டம்பர் 21 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த மாற்றத்திற்காக எமது நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் வடக்கிற்கு எதிராக தெற்கு அரசியலும் தெற்கிற்கு எதிரான வடக்கு அரசியலும் தான் அரசியல் வரைபடத்தில் பொதிந்திருந்தது. அல்லது ஒவ்வொரு மக்கள் குழுக்களிடையில் சந்தேகம் அவநம்பிக்கை, குரோதம் என்பவற்றை தூண்டும் அரசியலே காணப்பட்டது.

ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், இனியும் எமது நாட்டுக்கு பிரித்தாலும் அரசியல் செல்லுபடியற்றது என்பதை காட்டுகிறது. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்தத் தேர்தலால் முடிந்துள்ளது.அதற்காக தேசிய மக்கள் சக்திக்கு பலம் வாய்ந்த மக்கள் ஆணையை வழங்குவதற்காக ஆர்வம் காட்டிய அர்ப்பணித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

அதே போன்று எமக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்தாலும் நாம் எதிர்பாக்கும் பணிகள் மற்றும் நோக்கங்கள் அவர்களினதும் நோக்கமாகும் என்பது திண்ணம்.பிரித்தாலும் அரசியலை எந்தப் பிரஜையும் விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயகத்தை முடக்குவதை எந்த அரசியல்வாதியும் விரும்புவர் என்று கருதவில்லை.இவ்வாறான சாதகமான விடயங்கள் அனைத்து பிரஜைகளின் மனங்களிலும் பொதிந்துள்ளது.

எமக்கு வாக்களித்தவர்கள் சாதகமான விடயத்தை தேர்தலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.எமக்கு வாக்களிக்காதவர்களிடமும் எமது எதிர்பார்ப்புகள் உள்ளன என நாமும் முழுமையாக நம்புகிறோம்.எனவே இனியும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் இந்தத் தேர்தலினால் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் நாட்டில் இல்லை.

தேசிய மக்கள் சக்தியின் மூலம் இந்த நாடு விரும்பிய இலக்குகளை அடைவதற்கு இந்த மக்கள் அனைவரின் ஆதரவும் நம்பிக்கையும் எங்களுக்குத் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், இந்த நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு அமைதியான முறையில் நிலைநிறுத்துவது, மற்றவர்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதை நாம் தேர்தல் முடிவுகளின் பின்னர் காட்டியுள்ளோம்.

இந்நாட்டு மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக நான் கருதுகிறேன். ஆனால் அந்த அனுபவம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கும் அனுபவம் என்று நாங்கள் கருதுகிறோம். அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னரும், தேர்தல் காலத்திலும் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எமது ஆட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அது அவர்களின் உரிமையாகும். அத்துடன், இத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாகும்.

இத்தேர்தலில் பல தனித்துவங்கள் உள்ளன, அளவுரீதியாக நோக்கினால் , இலங்கை வரலாற்றில், பொதுத் தேர்தலொன்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.அரசியல் கட்சியென்ற ரீதியில் பெற்ற பாரிய வெற்றியாகும். தேர்தல் வரலாற்றில் ஒரு அரசாங்கம் அடைந்த முதல் வெற்றியாகும். மறுபுறம், இது மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வெற்றியாகும். அவ்வாறான வெற்றியொன்று நமக்கும் நமது குடிமக்களுக்கும் எப்படி கிடைத்தது. நம் நாட்டிற்கு அந்த மாற்றங்கள் தேவை.

நமது நாட்டுக்கு பல்வேறு வகையான வெற்றிகள் கிடைத்த போதெல்லாம், நமது பொதுவான இயல்பு தோல்வியுற்றவரின் அல்லது மற்ற தரப்பினரின் மனதை நோகடிக்கும் மற்றும் காயப்படுத்தும் வரலாற்றைக் கண்டுள்ளோம். ஆனால் இந்த தேர்தலின் பின்னர் நிரந்தரமாக புதிய அரசியல் கலாசாரத்தை எமது நாட்டுக்கு உருவாக்கியுள்ளோம். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அதனை தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாத்துள்ளோம்.

சம்பவங்கள் நடக்கலாம். மற்றொரு கட்டத்தில், அமைதியான ஜனநாயகம் இருக்கலாம். மற்ற சமயத்தில், மோதல் நிலைமை இருக்கலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மட்டுமே அது சரி செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஜனநாயகத்திற்காக நாம் திறந்துள்ள கதவுகளும், பொதுமக்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நமது கடமையும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தினால் அவை வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும்.

ஆனால் அதனை தொடர்ச்சியாக பேணினால் அவை வெறும் சம்பவங்களாக மாறிவிடாது. எனவே, இந்த ஜனநாயகத்தில், குடிமக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து, அவர்களை உயர்த நிலைக்குக் கொண்டு வருவது நமது பொறுப்பாகும் . இது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாளில் வாழும் இலங்கையர்கள் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தனர். தேர்தல் வரலாற்றில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டிய மற்றொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை மிஞ்சும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தலையீடும் பங்களிப்பும் செயற்பாடும் இத்தேர்தலில் கொடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன்.

அவர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிவுகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடியதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.பொதுவாக தேர்தலின் போது அரசியலின் மிக முக்கியமான பகுதி நமது கருத்தையும் நிலைப்பாடுகளையும் சமூகத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை நாம் அறிவோம். அதனைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதில் ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் சில பணிகளைச் செய்தோம்.சமூக ஊடகங்களில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து முன்னெடுத்த புதிய தலைமுறையொன்றும் இருந்தது. அந்த இளம் தலைமுறையினரின் விசேட எதிர்பார்ப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வெறும் பந்தயம், போட்டி, வெற்றி தோல்வியை பகிர்ந்து கொள்ளும் போட்டி என்பன வெளிப்படுத்தப்படவில்லை.இது புதிய இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் வெளிக்காட்டியது. எனவே நாம் அதற்கு கடப்பட்டுள்ளோம். அது முக்கியமானது என்று நான் கதுதுகிறேன். எனவே, இந்த வெற்றியை அடைய பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒருவிடயம் இருக்கிறது. பெரும் நம்பிக்கையுடன் இந்த மக்கள் எழுச்சி பெற்றதன் இரகசியம் என்ன? நீண்டகாலமாக எமது நாட்டுக் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர். நம் நாட்டின் குடிமக்கள் சட்டத்தின் முன் அநாதரவாகவும் ஒடுக்கப்பட்டும் இருப்பது வழமையான காட்சியாகும். மேலும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழுவினர் உள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் மனிதத் தூசியாகி விட்டனர். போதிய உணவின்றி, சரியான வீடின்றி, ஆரோக்கியமாக வாழ வாய்ப்பில்லாமல் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்று உள்ளது.

மேலும், அவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் தங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியுமா? எனவே தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில்துறையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அழுத்தங்களை எதிர்கொண்டனர் . மேலும், தாம் பேசும் மொழியின்படி, பின்பற்றும் மதத்தின்படி, அவர்களின் கலாச்சாரத்தின்படி ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது. எப்போதும் தாம் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் ஒதுக்கப்பட்ட மக்கள் என்று நினைக்கிறார்கள்.அவர்கள் இலங்கையில் சம உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் குழுவென கருதுகிறார்கள். எனவே, அத்தகைய துன்புறுத்தல் இருந்தது.

ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்கள் குழுக்களை அவதானித்தால், அவர்களுக்கே உரித்தான, அவர்களுக்கே தனித்துவமான பல அடக்குமுறைகளை பொதுமக்கள் எதிர்கொண்டனர். சட்டத்தை அமுல்படுத்த முயலும் அரச அதிகாரிகள் இந்த அடக்குமுறைக்கு பலியாகி இருப்பதை நான் அறிவேன். அதுதான் உண்மை நிலை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தின் அழைப்பாகும். அவர்கள் இந்த சுதந்திரத்தை எதிர்பார்த்தனர். இந்த பல்வேறு வழிகளிலுமான அடக்குமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்த தேர்தல் முடிவு சுதந்திரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. எனவே அந்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்த எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, ஒவ்வொரு துறையிலும் முழு சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

தொழில் வல்லுநர்களாகிய நாம் அவர்களின் அறிவுக்கு ஏற்ப தங்கள் பங்கை சரியாகச் செய்ய வழங்கப்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு அவர்களின் பங்கைச் செய்ய நாம் வழங்கும் சுதந்திரம், பொருளாதாரத்தில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு நாம் வழங்கும் சுதந்திரம், தமது மதம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் படி நாம் வாழ்வதற்கான உரிமை போன்ற அனைத்தையும் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதனால்தான் இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறோம்.

இந்த நாட்டு மக்களுக்கு இதனை விட சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும். இந்த வெற்றியை அடைவதில் பொது மக்களின் பெரும் ஈடுபாடு இருந்ததை நாம் அறிவோம். எங்களுடைய அரசியல் இயந்திரத்துடன் தொடர்பில்லாத, எங்களைச் சந்திக்காத, எங்களுடன் கதைக்காத, ஊர், இடம் தெரியாத ஏராளமான மக்கள் எங்களுக்காகப் பாடுபட்டனர். பஸ்ஸில், ரயிலில், பணியிடத்தில், நிகழ்வுகளில் எங்கள் வெற்றிக்காக பெருமளவானவர்கள் பங்களித்தனர். இந்த வெற்றிக்காக நாங்கள் நீண்ட காலமாக போராடினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக போராடினோம்.

இங்குள்ள பலர் தங்கள் இளமைக் காலத்திலிருந்தே இந்தக் கனவுக்காகப் போராடியதை நான் அறிவேன். இந்தப் போராட்டத்தில், அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல, இந்த வெற்றிக்காக அவர்களின் உயிரையும் கூட தியாகம் செய்தனர். அது மட்டுமின்றி, ஆரம்பத்தில் மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் இந்த இயக்கத்தைப் பாதுகாக்க தலையிட்டோம். சிலர் நடுவழியில் சென்றுவிட்டனர். பாதியில் விட்டு சென்றாலும், இந்த வெற்றியை அடைவதற்கு, ஆரம்பத்தில், நடுவில், எந்த கட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். அவைகளும் இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஃஃஃஃ
எனவே, எங்களுக்கு இரு வகையான பொறுப்புகள் உள்ளன. ஒன்று பொது மக்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்கான பொறுப்பு. இரண்டாவது இயக்கம் தொடர்பான பொறுப்பு. அதிகாரம் என்பது மிகவும் விசேடமான ஒன்று என்று நாங்கள் கருதுகிறோம். அதிகாரத்தில் இருந்து அதிகாரம் பிறப்பிக்கப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து மேலும் அதிகாரம் வளர்க்கிறது. ஆனால் சிலர் அதிகாரத்தை மோசடி என்று கூறுகின்றனர். அந்த எல்லையற்ற அதிகாரமானது எல்லையில்லாத அளவு மோசமானது என்கிறார்கள். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இதுபோன்ற அதிகாரங்கள் உருவாக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அந்த அதிகாரங்களின் இறுதி முடிவை எடுத்துக் கொண்டால், அவை மக்களுக்கு நியாயமான பெறுபேறுகளை கொண்டு வரவில்லை. அந்த அதிகாரங்கள் எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தப்பட்டன. எல்லையில்லா அதிகாரம் கிடைத்திருப்பதால் அந்த எல்லையற்ற அதிகாரம் நம்மை எங்கே தள்ளும் என்ற சந்தேகம் சமூகத்தில் உருவாக்கி இருக்கிறது.

கொஞ்சமாவது சந்தேகம் கொள்ளும் அனைவருக்கும், நாம் சொல்வது ஆம் எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். ஆனால் இந்த அதிகாரத்தின் எல்லைகளையும், இந்த அதிகாரம் நமக்குக் கையாளக் கொடுத்துள்ள எல்லையின் அளவையும் நாங்கள் அறிவோம். அதிகாரம் இருக்கிறது. ஆனால் அந்த அதிகாரத்திற்கு நமக்கு வரம்புகள் உண்டு. நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகாரத்தில் ஒரு நோக்கம் இருக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட நல்ல இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் பொறுப்பு நீண்ட காலமாக அந்த அதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது. யாருக்கு? ஒருபுறம், குடிமக்களுக்கான பொறுப்பு. மறுபுறம் இயக்கத்திற்கான பொறுப்பு. எனவே, சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்காக எந்த வகையான அதிகாரத்தை உருவாக்கினாலும், இந்த அதிகாரத்தை நாம் கையாள்வதில் நாம் பொறுப்புக் கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

எமக்கு பொறுப்பு உள்ளது.பிணைப்பு இருக்கிறது. எனவே, ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு ஒரு சாதாரண குடிமகனை விட பாரிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கெல்லாம் அது புரியும். நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்களிடம் அந்த வரம்புகள் உள்ளன. உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. உங்களிடம் ஒரு பிணைப்பு உள்ளது. அதனைப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும், இங்கு அமைச்சரவைக்கு மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கும் பலர் புதியவர்கள். ஆனால் நாங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளோம். நீங்கள் ஒரு தொழிற்துறையைப் போலவே வேகமாக பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் செயற்பாட்டாளராக பணியாற்றியுள்ளீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள், பாராளுமன்றத்திற்கு புதியவர்கள், ஆனால் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. பணியாற்றுவதில் புதியவர்களல்ல,

எனவே இந்த அமைச்சரவையினால் புதுவிதமான முன்மாதிரிகள் பலவற்றை மக்களுக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறோம். நாடு எதிர்பார்க்கும் சாதனைகளை முன்னெடுக்க இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையால் முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் சிறப்பாக வழிநடத்தி பாடுபட்டால் அந்த இலக்கை அடையலாம். அதற்கான திறமை உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது.நீங்கள் மோசடியற்றவர்கள். நீங்கள் நேர்மையானவர் என்று தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். இந்தப் பணியை நிறைவேற்றும் தைரியம் உங்களுக்கு இருக்கிறது.

எனவே, இந்தப் பணியை நேர்மையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையுடன் தான் நாம் செயல்படுகிறோம். மேலும், ஒரு சமயத்தில் அரசியலில், அரசியல் நோக்கங்களுக்காக இயக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்காக பங்காற்ற வேண்டியிருந்தது. எங்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தன. அந்த நோக்கங்களை அடைவதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் பாடுபட்டோம். நமது கோசங்கள், நமது செயல்பாடுகள், இவை அனைத்தும் அதிகாரத்தைப் பெறும் போராட்டத்தின் போக்கில் தான் இருந்தன. நாம் முட்டிமோதி இந்த நாட்டு மக்களுக்கு இந்தத் தேவையை உணர்த்தியுள்ளோம். அதுதான் பெறுபேறு. அரசியல் வெற்றி கிடைத்துள்ளது. எம்மை இனி அரசியல் கோஷங்களால் மட்டும் அளவிடக் கூடாது.

செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னரும், நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னரும், எங்கள் கோஷங்களின் அடிப்படையில் தான் எம்மை அளவிட்டார்கள். ஆனால், நவம்பர் 14ஆம் திகதிக்குப் பிறகு, ஆட்சியில் நாம் சிறப்பானவர்களா இல்லையா என்ற காரணிக்கமையவே அளவிடுவர். முன்பெல்லாம் நமது அரசியல் செயல்பாடு நல்லதா கெட்டதா என்பதை வைத்து அளவிடப்பட்டது. இனிமேல் நமது ஆட்சி நல்லது கெட்டது என்ற காரணியால் எம்மை அளவிடுவர்.

எனவே, எமது நீண்டகால முயற்சிகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்கள் எதிர்பார்த்த இலக்குகளையும் வெற்றியடையச் செய்வதற்கு
நல்லாட்சி அவசியமாகும். இனியும் நாம் கோஷங்களாலும் சித்தாந்தங்களாலும் அளக்கப்படப் போவதில்லை. இன்றிலிருந்து நமது கோஷங்களுக்கு எவ்வளவு உயிர் கொடுக்க முடிந்துள்ள ஆட்சி என்பதை வைத்து அளவிடப்படுவோம்.

எனவே,எங்கள் வெற்றி பாரியது என்பதோடு வெற்றி ஊடாக ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பின் பாரமும் அதற்கு சமமானது. சில சமயங்களில் வெற்றிக்காக போராடுவோம் என்றும், வெற்றிக்குப் பிறகு திறமையுள்ள குழுக்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கும் என்றும் எமக்குக் கூறப்பட்டது. ஆனால் நல்லதோ கெட்டதோ வெற்றிக்காக போராட வேண்டியிருந்தது. வெற்றிக்குப் பிறகு அந்தப் பணியில் வெற்றிபெறும் முன்னோடிகளாகிவிட்டோம்.

எனவே அனைத்தும் உங்கள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள்தான் பிரதானம். உங்களால் எந்த அளவிற்கு உங்கள் துறைகளை திறம்பட நிர்வகித்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடியும்? தனிப்பட்ட போக்குகள்,பொறுப்புகள் என்பவற்றை எந்தளவு உங்களால் நிறைவேற்ற முடியும்? இந்த அடிப்படையில் தான் நமது அடுத்த வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.

செப்டம்பர் 21 மற்றும் நவம்பர் 14 ஆகிய இரு கட்டங்களிலும் நாம் சித்தியடைந்துள்ளோம். அடுத்து, நாங்கள் சித்தியடைவோமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உங்கள் வகிபாகம் பெரியது. சிறந்த ஆட்சிக்கான உங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் அர்ப்பணிப்பினால் தான் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். அதற்காக ஒன்றுபட்டு செயற்படுவோம். அதற்காக ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

Top