Follow Us:

Tuesday, Jul 29
ஜூலை 29, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம்

– ஜனாதிபதி

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பங்காளிகளாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு நேற்று (Dr. Mohamed Muizzu) (28) இரவு குரும்பா மோல்டீவ்ஸ் (Kurumba Maldives) விடுதியில் வழங்கிய விசேட இராப்போசன விருந்தில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் நெருங்கிய நண்பராகவும் பிராந்திய பங்காளியாகவும் நீண்டகால உறவுகளைக் கொண்ட அழகிய மாலைதீவுக்கு வருகை தர முடிந்தமையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவு மற்றும் வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

இலங்கையின் நெருங்கிய நண்பராகவும் பிராந்திய பங்காளியாகவும் நீண்டகால உறவுகளைக் கொண்ட அழகிய மாலைதீவுக்கு வருகை தர முடிந்தமையை கௌரவமாகக் கருதுகிறேன்.

முதலில், எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்காக மாலைதீவு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாலைதீவுக்கான எனது விஜயம், நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் நீண்டகால நட்புறவையும், நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் மரியாதையையும், நமது பொதுவான விருப்பங்களையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்து சமுத்திரத்தில் அண்டை நாடுகளாக, நமது இரு நாடுகளின் எதிர்காலப் பாதைகளும் பின்னிப் பிணைந்துள்ளன. காலப்போக்கில் நம் மக்களிடையே உருவாகியுள்ள பரஸ்பர நல்லெண்ணம், புரிதல் மற்றும் உறவு ஆகியவை ஒரு தனித்துவமான பிணைப்பை உருவாக்கியுள்ளன. இன்று, இந்த உறவுகள் பல துறைகளில் இராஜதந்திரம் மற்றும் தீவிர ஒத்துழைப்பு மூலம் தொடர்ந்து போசிக்கப்படுகின்றன.

இந்த மாதம் நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இது எனது வருகைக்கு குறிப்பிடத்தக்க பெறுமதியை சேர்ப்பதுடன், இந்த தனித்துவமான நிகழ்வை நினைவுகூர மாலைதீவிற்கு வருகை தரக் கிடைத்தமையை ஒரு உண்மையான பாக்கியமாக நான் கருதுகிறேன்.

1965 ஆம் ஆண்டு மாலைதீவுகள் சுதந்திரம் பெற்றது, தெற்காசிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறித்தது. இலங்கையில் மாலைதீவு சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு வசதி செய்ததன் மூலம், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்ததில் இலங்கை பெருமை கொள்கிறது.

சுதந்திர மாலைதீவின் தேசிய கீதத்திற்க புகழ்பெற்ற இலங்கை இசையமைப்பாளரான மறைந்த பண்டித் டபிள்யூ.டி. அமரதேவ இசையமைத்தார் என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

மேதகு ஜனாதிபதி அவர்களே, எங்கள் கூட்டுச்செயற்பாடு பிராந்திய அண்டை நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக இருந்தாலும் சரி, நீலப் பொருளாதார முயற்சிகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது பலதரப்பு அமைப்புகளில் ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, அமைதியான, வளமான மற்றும் நிலையான இந்து சமுத்திர பிராந்தியத்தை உருவாக்க மாலைதீவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை உறுதிபூண்டுள்ளது.

தனது ஆங்கில ஆசிரியரும்,பெளதீக ஆசிரியரும் இலங்கையர்கள் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார். அது தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு வழிகளில் பங்களித்த ஆசிரியர்களாக பல தலைமுறைகளுக்கு அறிவை வழங்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மாலைதீவில் இலங்கையர்கள் பெறும் மரியாதை தொடர்பில் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இலங்கையை தங்கள்

இரண்டாவது வீடாகக் கருதி, எங்கள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பது, மருத்துவ சிகிச்சை பெறுவது அல்லது எங்கள் நாட்டில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பலை அனுபவிப்பது போன்ற மாலைதீவு நாட்டினரையும் நாங்கள் பாராட்டுகிறோம். அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றைய நாட்டி ல் வசிக்கும் வெளிநாட்டினர் மட்டுமல்ல, நமது நாடுகளை இணைக்கும் பாலங்களாகவும் உள்ளனர்.

சுற்றுலா என்பது நமது இரு நாடுகளின் பொருளாதாரங்களின் முக்கிய பகுதியாகும். இலங்கை சுற்றுலா தலமாகத் தேர்ந்தெடுத்த முதல் பத்து நாடுகளில் மாலைதீவும் ஒன்றாகும். கடந்த ஆண்டுகளில் மாலைதீவு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வளர்ச்சியைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரண்டாவது வீட்டில் அனுபவத்தைப் பெற இலங்கைக்கு வருகை தருமாறு மாலைதீவு சுற்றுலாப் பயணிகளை நாங்கள் அழைக்கிறோம்.

மேதகு ஜனாதிபதி அவர்களே, எதிர்காலத்தை நோக்கி நாம் பார்க்கும்போது, நமது இரு நாடுகளும் நண்பர்களாக மட்டுமல்லாமல், ஒரு பொதுவான பார்வை மற்றும் ஒரு பொதுவான நோக்கத்தால் ஒன்றுபட்ட பங்காளர்களாகவும் முன்னோக்கிப் பயணிப்போம் என்று நான் நம்புகிறேன். இந்த வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புக்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்விற்குப் பிரார்த்திக்கும் அதே வேளை மாலைதீவை மிகவும் வளமான தேசமாக மாற்றுவதற்கு உங்களின் மனஉறுதிக்காக பிரார்த்திக்கிறேன் !

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெரத் மற்றும் இலங்கை தூதுக்குழு என்பன இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top