இலங்கை சுங்க நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் உலக வங்கி மற்றும் இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் (15) நடைபெற்றது.
சுங்க நவீனமயமாக்கல் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம் நிறுவப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உலக வங்கிப் பிரதிநிதிகள் குழு பாராட்டியது.
மேலும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான சர்வதேச நிறுவன ஆதரவையும் நிபுணர் ஆலோசனையையும் வழங்க உலக வங்கிக் குழு ஒப்புக்கொண்டதுடன், சுங்கக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான கருத்துகளும் பரிமாறப்பட்டன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவை வரி வருமானத்தை வசூலிப்பதில் முன்னணிப் பங்கு வகிப்பதுடன், அந்த நிறுவனங்கள் அரசு அதிகாரத்தின் கீழ் பேணி, உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், குறித்த நிறுவனங்களில் செய்ய வேண்டிய கொள்கை மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை அடையாளம் கண்டு, அரசுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம் நிறுவப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, உலக வங்கியின் பயிற்சி முகாமையாளர் ஷாபிஹ் ஏ. மொஹிப் (Shabih A Mohib),இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம் பணிப்பாளர் டபிள்யூ. எல். சி. திலகசிறி, சுங்க அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.