Follow Us:

Friday, May 16
மே 16, 2025

உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்ப்பித்து கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறனுடன் பங்களிப்பு வழங்குக

– மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2024 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டில் உற்பத்திப் பொருளாதாரம் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்ததுடன், மாவட்ட மட்டத்தில் ஒதுக்கப்பட்ட அந்த நிதி ஒதுக்கீடுகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் திறமையின்மைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடந்த சில வருடங்களாக கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இன்மையால் கிராமப்புற மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உரிய கால எல்லைக்குள் சரியான முறையில் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது ஒவ்வொரு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து, துறைசார் அமைச்சர்களையும் அதில் இணைத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ,அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Top