வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஒதுக்கி நாட்டின் எதிர்கால வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது
ஜனாதிபதி
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு மகா தேவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல மகா பெரஹெரா, பண்டைய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பான முறையில் நிறைவடைந்ததாக தெரியப்படுத்தும் ஆவணத்தை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல நேற்று (09) மாலை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவிடம் வழங்கினார்.
ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தலதா மாளிகை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகாதேவாலயங்கள் மற்றும் வெளியூர் தேவாலயங்களின் நிலமேகளுடன் இணைந்து, பாரம்பரியத்தின் படி ஜனாதிபதிக்கு அந்த ஆவணத்தை கையளித்தனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் நிலமேக்களும் நீண்டகால பாரம்பரியத்தின்படி குழு புகைப்படம் பிடிக்கும் நிகழ்வில் இணைந்தனர். பெரஹெராவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.
வெளிதேவாலாயங்களுக்கு எசல பெரஹெரா நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கரங்களினால் வழங்கிவைக்கப்பட்டதோடு மத்திய மாகாண கலாச்சார அமைச்சினால் தொகுக்கப்பட்ட “புனித தலதா கலாச்சாரம்” என்ற நூலின் 20 ஆவது தொகுதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
இலங்கை மக்கள் பௌத்த கலாச்சாரத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். அதை கைவிட முடியாது, அதைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அந்த பாரம்பரியத்தில் மிக முக்கியமான நிகழ்வாக ஸ்ரீ தலதா கலாச்சாரம் கருதப்படுகிறது என்றும் கூறினார்.
உலகிற்கு வெற்றிகளைக் கொண்டு வந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய மாற்றத்தை நாடென்ற வகையில் நாம் உள்வாங்க முடிந்ததா என்று மீண்டும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும், நமக்குப் பின்னால் இருந்த பல நாடுகள், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த நூற்றாண்டின் வெற்றிகளை தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைவாகப் பெற்றுத் தந்தன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்படி, உலகின் எதிர்காலத்தை கைப்பற்றவும், சில சமயங்களில் நமது வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் நாம் தோல்வியடைந்துள்ளோம்.நமது தனித்துவமான எதிர்காலத்தையும் வளர்ச்சிப் பாதையையும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற சவால் மற்றும் கருத்தாடல் இன்று நம் முன் உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நமது தனித்துவமான பயணத்தைக் கண்டுபிடிப்பதிலும், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சாதனைகள் மற்றும் வரலாற்று பாரம்பரியத்தையும் உள்வாங்க வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த தலதா பெரஹெரா விழா ஒரு புதிய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு மைல்கல் என்றும், அத்தகைய கலாச்சார விழா நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு ஈர்ப்பாக பொதுமக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
“இந்த பெரஹெராவை கண்டுகளித்த போது, ஏராளமான இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் ஊர்வலத்தில் பயணிப்பதைக் கண்டேன். இதைப் பார்ப்பது நமது நாட்டிற்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சியையும் தைரியத்தையும் தருகிறது. அதே நேரத்தில், இளம் சிறுவர்களும் முதியவர்களும் மிகுந்த ஆற்றலுடன் நடனமாடுவதைக் கண்டேன். இந்தக் கலாச்சார நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு தேசமாக நாம் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். அதற்காக, நமது வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பொது மக்கள் இயல்பாக இணைவதற்கும் படிப்பதற்கும் சூழலை உருவாக்குவோம்.”
நாட்டின் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒரு அரசியல் அதிகாரமாக வழங்கக்கூடிய மிக உச்ச ஆதரவு, தேவாலயங்கள் உள்ளிட்ட நிறுவன கட்டமைப்பிலிருந்து அரசியலை அகற்றி, அவற்றை வரலாற்றுப் பாதுகாவலர்களின் பாரம்பரியமாக மாற்றுவதாகும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார். இந்தக் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசாங்கம் வழங்கும் நிதியுதவி தெளிவாக வேறுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் ஆண்டு தோறும் நடைபெறும் எசல மகா பெரஹெராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கிய மல்வத்த-அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினருக்கும், பெரஹெராவிற்கு தங்களை அர்ப்பணித்த தியவடன நிலமே, நான்கு மகா தேவாலயங்களின் நிலமேக்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் உட்பட அழைக்கப்பட்ட விருந்தினர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.