பாடசாலை கட்டமைப்பை முறைமைப்படுத்துதல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்துக
– ஜனாதிபதி
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் எமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பை முறைமைப்படுத்துதல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும், ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில், அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் விரும்பிய இலக்குகளை அடைய தேவையான முதலீடுகளைச் செய்யுமாறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
நாடு முழுவதும் பரந்து காணப்படும் தொழிற்கல்வி திட்டங்களுக்குப் பதிலாக, கல்வி அமைச்சின் தொழிற்கல்வி பிரிவின் தலையீட்டின் மூலம் ஒரு தேசிய தொழிற்கல்வித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (29) காலை ஜனாதிபதி செயலகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய 03 துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.
“இலங்கை அடையாளத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறமையான பிரஜைகள் மூலம் உலகளாவிய சமூகத்தில் தலைசிறந்த நிலையை அடைதல்” என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் கல்வி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன் போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டு உதவியின் கீழ் பாடசாலைக் கட்டமைப்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டம் (GEMP), இரண்டாம் நிலைக் கல்வித் துறை அபிவிருத்தித் திட்டம் (SESIP) போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
நீண்ட காலமாக பாடாசலைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தி உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
பாடசாலை போசாக்கு உணவுத் திட்டம், புலமைப்பரிசில், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள், சுரக்ஷா காப்புறுதித் திட்டம், பின்தங்கிய பாடாசலைகள் மற்றும் பிரிவேனாக்களின் மாணவர்களுக்கு காலணிகள் வழங்குதல், பெண் மாணவர்களுக்கு சுகாதார நப்கின்கள் வழங்குதல், தொழில்நுட்ப பாட புலமைப் பரிசில் திட்டம், ‘சுஜாத தியனி’ புலமைப்பரிசில் திட்டம் மற்றும் ‘சுபக’ புலமைப்பரிசில் திட்டம் போன்ற நலன்புரித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2026 ஜனவரி 05 ஆம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்குவதற்கு முன்பு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்ட புதிய நிர்மாணப்பணிகள் குறித்தும் தனித்தனியாக ஆராயப்பட்டது.
அடுத்த ஆண்டு, பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளை விரிவுபடுத்துதல், வசதியான கற்றல் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்த்துதல் மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப பட்டப்படிப்பு திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களை மீளாய்வு செய்வதன் மூலம் புதிய கல்வித் திட்டங்களைத் தயாரிப்பதாக இதன்போது அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
தொழில் கல்வித் துறையை நெறிப்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 2026-2030 காலகட்டத்தில் 50 தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்குதல் மற்றும் 09 திறன் மையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்ணான்டோ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.