Follow Us:

Wednesday, Jul 30
ஜூலை 29, 2025

கொழும்பு 03 மகாநாம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது

கொழும்பு 03 மகாநாம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் இன்று ( 29) நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சிக்கு இணைந்த வகையில் மகாநாம கல்லூரிக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.

இங்கு, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வை ஆரம்பித்த பின்னர், சபாநாயகர் நியமனம், சபாநாயகர் பதவிப் பிரமாணம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஆகியவையும் இடம்பெற்றன. மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் இலங்கை வங்கிக் கணக்குகளைத் திறத்தல் ஆகியவையும் இதற்கு இணையாக இடம்பெற்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சி என்றும், நீங்கள் மாணவர் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதும் ஜனநாயக ரீதியிலாகும் என்றும் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே இங்கு தெரிவித்தார்.

அதன் இறுதி நோக்கம் மற்றும் இலக்கு மக்களுக்காக நின்று மக்களுக்கு சேவையாற்றுவதாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், நீங்கள் எதிர்கால தலைவர்கள் என்றவகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே இதன்போது எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், குறித்த பாடசாலைக்கு அடையாளப் பரிசாக பெறுமதியான மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு ‘Vision’ சஞ்சிகையும் வழங்கப்பட்டது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, இலங்கைப் பாராளுமன்றத்தின் பணியாட்டொகுதிப் பிரதானி மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, இலங்கைப் பாராளுமன்றத்தின் பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் மற்றும் பதில் பணிப்பாளர் தகவல் தொடர்பு ஜயலத் பெரேரா, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகளின் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, அதன் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பொது மக்கள் சேவை அதிகாரி துமிந்த விக்ரமசிங்க, கொழும்பு மகாநாம கல்லூரியின் அதிபர் பிரபாத் ஐ. விதானகே, மாணவர் பாராளுமன்றப் பொறுப்பாளர் கலாநிதி ஜானகி மதவனஆரச்சி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top