Follow Us:

Sunday, Aug 31
ஆகஸ்ட் 30, 2025

ஜனாதிபதி தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத் துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடனான 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

– ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கப்படும்

– ஜனாதிபதி

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கைத்தொழில்களை சிரமப்படுத்துவதற்காக அன்றி, வசதிகளை வழங்குவதற்காகவே அரசாங்கங்கள் இருப்பதாகவும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுப்பதில் சம்பந்தப்பட்ட துறையினருடன் தொடர்பைப் பேணுவதைப் போன்றே அவற்றை செயல்படுத்த போதுமான காலஅவகாசத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்ற விவசாயம் மற்றும் உணவுத் துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடனான 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், ஏற்றுமதி, வரிச் சலுகைகள், மீள்சுழற்சி மற்றும் கைத்தொழில்களின் செயல்பாட்டைப் பாதிக்கும் சட்ட நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

நுகர்வோருக்கு தரமான, விவசாய மற்றும் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குவது மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றதோடு அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளும் ஆராயப்பட்டன.

ஒவ்வொரு பொருளின் விலையும் உற்பத்தியாளரால் தீர்மானிக்கப்படுகிறது.ஆனால் விவசாயப் பொருட்களைப் பொறுத்தவரையில் விவசாயத் துறையின் ஒழுங்கின்மை காரணத்தால் வாங்குபவர்களால் விலைகளை நிர்ணயிக்க வழிவகுத்துள்ளது. மேலும் உற்பத்தியை நுகர்வோரிடம் சென்றடைவதில் முறையான தன்மை இல்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விவசாயப் பயிர்கள், பால் மற்றும் விலங்குப் பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கு தனியார் துறையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்க்கும் பொறுப்பு தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதற்காக ஒரு அரசாங்கமாக ஒரு புதிய வழிமுறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும், கால்நடைத் துறை ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிற்துறையாக மாறத் தவறியதால் அதன் உற்பத்தித்திறனை அடைய முடியாமல் போனது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கால்நடைக் கைத்தொழில்களின் மேம்பாடு மற்றும் உற்பத்தி விநியோகத்தை முறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விவசாயம் மற்றும் உணவுத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல முன்னணி வர்த்தகர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Top