எமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, அரசாங்கத்தின் சமூக-பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் “இலங்கைக்கான ஆராய்ச்சி முன்னுரிமைகள் – 2026” அறிக்கை, இன்று (28) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய அபிவிருத்தியின் புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் இந்த அறிக்கையை, தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜி.டபிள்யூ.ஏ. ரொஹான் பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.
தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்த தற்காலிகக் குழு இதற்கான தலைமைத்துவத்தை வகித்தது. அதன் இணைத் தலைவர்களாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் அமெரிக்காவின் தேசிய புத்தாக்க அகாடமியின் சிரேஸ்ட உறுப்பினருமான பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜி.டபிள்யூ.ஏ. ரொஹான் பெர்னாண்டோ ஆகியோர் செயற்படுகின்றனர்.
பல்வேறு துறைசார் 26 நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய 15 அமைச்சுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உப குழு உறுப்பினர்களின் கூட்டு முயற்சியின் பயனாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான அதன் திசை தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கிறது. விவசாயம், எரிசக்தி, கல்வி, டிஜிட்டல் மாற்றம், தொழில்நுட்பம், சுகாதாரம், கைத்தொழில், சுற்றுலா மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற பல முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை நாட்டின் நீண்டகால சமூக-பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடன் இணைப்பதற்குத் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதல் ஒருங்கிணைப்பு அறிக்கை இதுவாகும்.
இந்தப் பணியானது, விரைவில் நிறுவப்படவுள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையின் (NRDP) முக்கிய பணிகளில் பிரதானமானது என்பதோடு அதுவரை இந்த செயல்முறை இந்த குழுவால் தற்காலிகமாக மேற்கொள்ளப்படுகிறது. NRDP வகுக்கப்பட்ட பிறகு, இந்த ஆராய்ச்சி முன்னுரிமை செயல்முறை மிகவும் பரந்த அளவிலும் விசேட கவனம் தேவைப்படும் அம்சங்களை அடையாளம் கண்டும் செயற்படுத்தப்படும். ஆராய்ச்சி அடிப்படையிலான முடிவுகளை மேற்கொள்வதன் மூலம், உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மிகுந்த செயற்திறன் மற்றும் மூலோபாய ரீதியாக பங்களிப்பது இதன் பிரதான குறிக்கோளாகும்.