Follow Us:

Friday, Aug 01
ஜூலை 31, 2025

மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவோம்

மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கு மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அதேபோன்று நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மாலைதீவு தேசிய பல்கலைக்கழக (MNU) கேட்போர் கூடத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற மாலைதீவில் உள்ள இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மாலைதீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், நாட்டில் வசிக்கும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் இலங்கை தொழில்வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெறப்பட்ட ஆணையின் முக்கிய எதிர்பார்ப்பான புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் நிறைந்த அரசியல் கட்டமைப்புக்கு பதிலாக, நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே இடத்தில் தேக்கமடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் அனைவருக்கும் சமமாகச் செயற்படுத்தப்படும் சட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இன்றைய தலைமுறை அனுபவிக்கும் சிரமங்களை அடுத்த சந்ததிக்கும் உரித்தாக்காமல் அவர்களுக்கு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பி, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகள் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த மாலைதீவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.

மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாங்கள் சந்தித்தோம்.ஜனாதிபதி என்ற வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய முதல் நாடு மாலைதீவு. இங்குள்ள பலர் நமது நாட்டை மிகவும் முன்னேற்றகரமான நாடாக மாற்றவும், நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் விரும்புவதாக கருதுகிறேன்.

நம் நாட்டைப் பற்றி நாம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மதிப்பீடுகள் இருப்பது போதுமானதல்ல. அதை உண்மையாக்க, நாம் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், நமது நாட்டை சிறப்பாக மாற்றுவதற்குத் தேவையான அரசியல் மாற்றம், அரசியல் சக்தி, உங்கள் அனைவரின் ஆதரவுடன் எங்களிடம் வந்தது. இதற்கு முன்னர் நான் உங்களுக்கு கூறியது போல், நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை சிறிதளவும் வீழ்ச்சியடைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். புதிய அரசியல் மாற்றத்திற்காக மக்கள் ஏன் எங்களைத் தெரிவுசெய்தார்கள்?

முன்னர் நமது நாட்டில் செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும், ஏழைகள் மற்றும் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் உள்ள நாடாக இருந்தது. எனவே, நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் விரும்பினார்கள். மேலும், குடிமக்களுடன் இணைந்து செயல்படும் அரசியல் அதிகாரத்திற்குப் பதிலாக, குடிமக்களுக்கு மேலால் அதிகாரம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள் உள்ள பதவிகள் வகிக்கும் மற்றும் அசிங்கமான அரசியல் கலாச்சாரம் நம் நாட்டில் இருந்தது. எனவே, மக்கள் இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, தங்களுக்கு நெருக்கமான ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மக்கள் விரும்பினர். மேலும், நாடு முழுவதும் புரையோடிப்போயுள்ள மோசடி, ஊழல், லஞ்சம் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க வேண்டிய அவசியம் இருந்தது.

மேலும், நமது நாட்டில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மிகவும் தோல்வியுற்ற மற்றும் தவறான பொருளாதார நடைமுறைகள் காரணமாக, நமது நாடு பெரும்பாலும் பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்திருந்தது. இந்த நாட்டு மக்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையுடன் இருந்தனர். பல பகுதிகளில் புதிய மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினர். இந்த நாட்டு மக்கள் உலக வரலாற்றில் மிகவும் ஆழமான அரசியல் பாய்ச்சலைக் குறிக்கும் வகையில் அரசியலில் எங்களை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைத்தனர். கடந்த தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு அரசியல் இயக்கம், அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

அதன் போது ஒவ்வொருவரும் அந்த அரசியல் மாற்றத்திற்கு பங்களித்தனர். அதனால் இன்று நான் ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கிறேன். நீங்கள் மற்றும் எங்கள் நாட்டு மக்கள் செய்த பங்களிப்பினால் அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பாரிய அதிகாரம் கிடைத்துள்ளது. இந்த அதிகாரம் செல்வத்தால் உருவாக்கப்படவில்லை, இந்த அதிகாரம் எங்களிடம் இருந்த ஒரு ஊடக பலத்தினால் உருவாக்கப்படவில்லை, இந்த அதிகாரம் எங்களிடம் இருந்த பலத்தினால் உருவாக்கப்படவில்லை. இந்த அதிகாரம் நமது பரம்பரை அல்லது குடும்ப பின்னணியின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. இந்த முழு அதிகாரமும் நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது. எனவே, ஜனாதிபதியாக, அமைச்சரவையாக, நாம் கைவிட முடியாத ஒரு மீற முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளோம். நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்.

வெளியே நிறைய கோசங்கள் எழுப்பப்படுவதை நான் அறிவேன். இவை அனைத்தும் தோல்வி, அதிகாரம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் தோல்வியின் வெளிப்பாடே அன்றி இது யதார்த்தம் அல்ல. உண்மை என்னவென்றால், நாம் மெதுவாக ஆனால் சீராக நம் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம். நமது நாடும் நமது மக்களும் எதிர்கொள்ளும் இந்த சவால்களிலிருந்து நம் நாட்டையும் நமது மக்களையும் விடுவிப்போம்.

நமது நாட்டில் மிகவும் வலுவான சட்டம் செயல்படுத்தப்படுவதைப் பார்ப்பதே உங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. முன்னர் நமது நாட்டில் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது? அதிகாரத்தினால் சட்டம் வளைக்கப்பட்டது. சட்டம் மிதிக்கப்பட்டது. ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று நாங்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறோம். யாரையும்

தனிப்பட்ட முறையில் பழிவாங்க எங்களுக்கு தேவையில்லை. இருப்பினும், குடிமக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நல்லெண்ணம் எங்களிடம் உள்ளது. அதிகாரம், செல்வம், பதவிகள் ஆகியவை சட்டத்திற்கு உட்பட்டவையா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அளவுகோல்கள் அல்ல.

நமது நாட்டிற்கு ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் அவசியம். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் சட்டத்திற்கு பயப்பட வேண்டும். நமது நாட்டில் சட்டத்திற்கு பயம் இல்லாத ஒரு காலகட்டம் இருந்தது. குடிமக்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களாகவும், சட்டத்திற்கு பயம் உள்ளவர்களாகவும் நம் நாடு படிப்படியாக மாற்றப்பட வேண்டும். மோசடியில் ஈடுபடுவதற்கும் லஞ்சம் வாங்குவதற்கும் நாம் பயப்பட வேண்டும். இருப்பினும், பெரும் செல்வத்தை குவிப்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருப்பதற்கான ஒரு கருவியாக மாறிவிட்டது. அரச சொத்துக்களும் அரச பணமும் பெரிய அளவில் வீணடிக்கப்பட்ட ஒரு சகாப்தம் உருவாக்கப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமமான ஒரு அரசை நாங்கள் உருவாக்கி வருகிறோம். லஞ்சம் பெறுவதை ஒருபுறமிருக்க, லஞ்சம் வாங்குவது பற்றி யோசிப்பதற்குக் கூட பயப்படும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவோம்.

சிறைச்சாலைப் பிரதானி அண்மையில் கைது செய்யப்பட்டாரென்பதை நீங்கள் அறிவீர்கள். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பொலிஸ்மா அதிபர் காவலில் உள்ளார். ஏராளமான முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் மற்றும் தங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ப சட்டத்தை கையாண்டனர். இன்று, நாங்கள் பதவியைப் பார்க்காமல் சட்டத்தை செயல்படுத்துகிறோம். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையின் முக்கிய எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றி வருகிறோம்.

நமது நாட்டில் அரசியல் அதிகாரத்தை ஆக்கிரமித்திருந்த மோசடி மற்றும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். முதல் முறையாக, பொதுமக்களின் பணத்தில் ஒரு சதம் கூட திருடாத ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்பதற்கு நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். அரசியல் அதிகாரத்தை ஆக்கிரமித்திருந்த லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்தை நாங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டோம். ஆனால் பழக்கத்தில் இயங்கும் ஒரு அரச இயந்திரம் உள்ளது. உள்நாட்டு வருவாய் திணைக்களத்திற்கு வரி செலுத்தாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். மிகவும் பணக்காரர்களாகவும்

ஆடம்பரமான வர்த்தகர்களாகவும் தம்மைக் காட்டிக் கொண்டு, அரசு வங்கிகளுக்கு பணம் செலுத்தத் தவறியவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது.

மோசடி மற்றும் ஊழலைச் செய்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளைத் தவிர்க்கும் போக்கு காணப்படுகிறது. நல்லவர்களின் சொத்துக்களை ஏலம் விட ஆர்வமாக இருக்கும் வங்கிக் கட்டமைப்பு, அரசியல் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. எனவே, மோசடி மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கம் எமது மக்களுக்கு உள்ளது. அது தற்பொழுது அரசியல் அதிகாரத்திற்குள் செயற்படுத்தப்படுகிறது. எஞ்சிய பகுதியையும் நாம் செய்வோம்.

மேலும், மோசடி மற்றும் ஊழல் செய்தவர்களை தண்டிக்கும் தேவை இந்த நாட்டு மக்களுக்க இருந்தது. ஊழல் செய்பவர்களை தண்டிப்பது ஜனாதிபதியின் பொறுப்பல்ல. ஊழல் செய்பவர்களை தண்டிக்க சட்டங்கள் தேவை. பொதுச் சொத்துரிமை சட்டம் என்ற மிகவும் வலுவான சட்டம் எங்களிடம் உள்ளது. பொதுமக்களின் சொத்தில் ரூ. 25,000 க்கு மேல் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு பிணை கிடையாது.

பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின்படி, ஒருவரால் தான் சம்பாதித்த செல்வம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதைக் காட்ட முடியாவிட்டால், அந்தச் செல்வத்தை பறிமுதல் செய்யலாம். மேலும், ஏப்ரல் 8 ஆம் திகதி, சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.

எனவே, லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க தேவையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த நோக்கத்திற்காக இருக்கும் நிறுவனங்களை நாம் செயல்படுத்த வேண்டும். லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குத் தேவையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான நிறுவனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன, அலுவலக தேவைகளுக்கான கட்டிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு உயர்ந்த சம்பள மட்டத்தை வழங்க திட்டங்களை வகுத்துள்ளோம். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு அதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவது மக்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இன்று அந்த கலாச்சாரத்தை நாங்கள் மாற்றி வருகிறோம். ஜனாதிபதி என்ற வகையில், எனக்கு ஒரு பொறுப்பு உள்ளது. மேலும், அமைச்சர்களாக, அரச

அதிகாரிகளாக, தூதுவர்களாக, இந்த அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். முன்னர் அரசியல் அதிகாரம் இவை அனைத்திற்கும் மேலாக இருந்தது. நம் நாட்டு மக்கள் சில சமயங்களில் அதையே எதிர்பார்த்தனர். ஆனால் இன்று, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற நாம் அனைவரும் போராடி வருகிறோம். எனவே, நம் நாட்டில் இருந்த, மக்களை விட உயர்வாக இருந்த அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக, மக்களுடன் தோளோடு தோள் நின்று அரசியல் அதிகாரம்,அரச பொறிமுறை பொதுமக்கள் என்பவற்றை ஒன்றிணைத்த ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம்.

மேலும், மக்களின் முதன்மை எதிர்பார்ப்புகளில் ஒன்று நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகும். பொருளாதாரம் வலுவாக இல்லாவிட்டால், சட்டத்தின் ஆட்சி, நல்ல கலாச்சாரம் அல்லது குற்றங்கள் குறைவாக உள்ள ஒரு அரசை உருவாக்குவது கடினம். எனவே, நம் முன் இருந்த மிகப்பெரிய சவால் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதாகும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் வங்குரோத்தடைந்த நாடு. இலங்கை வரலாற்றில் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட பொருளாதார வரலாற்றைப் பற்றி எழுதினால், 2022-2023 க்கு ஒரு தனி அத்தியாயம் எழுதப்படும். இது இந்த நாட்டின் பொருளாதார வரலாற்றிலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாத ஒன்று.

நமது நாடு வங்குரோத்து நாடாக மாறியதால், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கை நொறுங்கத் தொடங்கியது. வங்குரோத்து நிலையின் விளைவுகள் காரணமாக, இலங்கைக்கு முதலீடுகள் வருவது நின்றுவிட்டது. மேலும், செயல்படுத்தப்பட்டு வந்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டன. பணவீக்கம் சுமார் 70% அளவினை எட்டியது.

மருந்துகள், எரிவாயு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியது. ஒரு நாடாகவும், சமூகமாகவும், நமது நாடு நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளை நாம் எதிர்கொண்டோம். அந்தப் பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த முடிவுகளில் பங்கேற்றவர்கள் அல்ல.

நன்றாக செயற்படும் ஒரு நாடு நமக்குக் கிடைக்கவில்லை. நின்றுபோன ஒரு நாடே நமக்குக் கிடைத்தது. அதன்படி, இந்த தேங்கிக் கிடந்த நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதைக் கண்டறிவதே எமது முதல் படியாக இருந்தது. நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

நாங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்தோம். இந்தப் பொருளாதார மாற்றத்தில் அது மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

நாம் 2022 ஆம் ஆண்டு முதல் கடனை திருப்பிச் செலுத்தாத நாடாக மாறிவிட்டோம். இருப்பினும், 2024 டிசம்பர் 21 ஆம் திகதி நாங்கள் கடன் பெற்றுள்ள நாடுகளுடன் 2028 முதல் எமது கடன்களை திருப்பிச் செலுத்துவோம் என்று இணக்கப்பாட்டை எட்டினோம். இப்போது நாம் உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டுள்ளோம்.

அதன்படி, தடைபட்ட திட்டங்களை படிப்படியாக மீண்டும் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் நமது நாட்டிற்கு அளித்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். இது நிறுத்தப்பட்ட ஒரு நாட்டின் முதல் படியாகும்.

மேலும் எங்களுக்கு டொலர்கள் தேவை. எங்களுக்கு டொலர்கள் கிடைக்கும் மூன்று முக்கிய காரணிகள் உள்ளன என்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறோம். முதல் குழு வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களான நீங்கள். இந்த ஆண்டு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக டொலர்களை அனுப்பிய ஆண்டாக இருக்கும் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். நாட்டிற்கு டொலர் வருமானத்தை ஈட்டும் இரண்டாவது விடயம் சுற்றுலாத் துறையாகும். இந்த ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாகவும், சுற்றுலாத் துறையிலிருந்து அதிக டொலர் வருவாமானம் ஈட்டும் ஆண்டாகவும் இருக்கும்.

மூன்றாவது விடயம் ஏற்றுமதி வருமானம். ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு இலங்கை அதிக ஏற்றுமதி வருவாயைப் பெற்ற ஆண்டாக இருக்கும். இதன் மூலம், பொருளாதாரத்தில் மிகவும் வலுவான ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுமார் ஒரு வருடமாக டொலரின் பெறுமதியை 300 ரூபாயில் பேண முடிந்தது.

நம் நாட்டில் வாகன இறக்குமதி 05 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. நாங்கள் வாகன சந்தையைத் திறந்தோம். நேற்று வரை, வாகன இறக்குமதிக்காக 1200 டொலர் மில்லியன் மதிப்புள்ள LC-களைத் திறந்துள்ளோம். ஆனால் டொலரின் பெறுமதி நிலையாக உள்ளது. அது பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சத்தை பிரதிபலிக்கிறது. மேலும், வெளிநாட்டு நேரடி முதலீடு பொருளாதாரத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இந்த

ஆண்டு, இதுவரை, இலங்கை முதலீட்டு சபை மூலம் 563 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 101% அதிகமாகும். குறிப்பாக, துறைமுக நகரத்தில் 04 புதிய திட்டங்களுக்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் போன்று துறைமுக நகரம் அதிக அளவு முதலீட்டைப் பெற்றுள்ளது.

மேலும், வங்கி வட்டி விகிதம் ஒரு முக்கியமான காரணியாகும். வங்கி வட்டி விகிதம் 30%-35% அதிகரித்தது. அது மிகவும் மோசமான சூழ்நிலை. யாரும் இவ்வளவு வட்டி விகிதத்தில் கடன் பெற்று வியாபாரம் செய்ய மாட்டார்கள். அதனால் பணம் நிலையான வைப்புத்தொகைக்குச் சென்றது. அல்லது அது திறைசேரி பத்திரங்கள் மற்றும் திறைசேரி பிணைமுறிகளில் வைப்புச் செய்யப்பட்டது. வங்கிகள் அரசாங்கத்திற்கு கடன் கொடுக்கத் தொடங்கின.

நீண்ட காலமாக, நம் நாட்டில் அரசாங்கத்தின் கணக்கு எதிர்மறையான நிலையில் இருந்தது. நாட்டில் டொலர் கையிருப்பு மட்டுமல்ல, மத்திய வங்கி தற்போது ஒரு டிரில்லியன் ரூபாய் கையிருப்பையும் பேணுகிறது. வங்கி வட்டி விகிதம் மிக நீண்ட காலமாக ஒற்றை இலக்கத்தில் பேணப்படுகிறது. இது பொருளாதாரத்தில் மிக முக்கியமான காரணியாகும்.

வெளிநாட்டு கையிருப்பு தற்போது 6.3 டொலர் பில்லியனாக உள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் 7 டொர் பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு கையிருப்புக்களை சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம். 2028 ஆம் ஆண்டாகம்போது நாம் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப ஆண்டில், அதிக சுமை இருக்காது. 2032 ஆம் ஆண்டில் நாம் சில அதிகரிப்பைப் பெறுவோம். எனவே, எமக்கு 06 வருடங்கள் நன்றாகத் தயாராக காலம் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான எமது தொடர்பின்படி, 2028 ஆம் ஆண்டில் வணிகக் கடன்களைப் பெற முடியும். ஆனால் வணிகக் கடன்களை எடுக்காமல் நமது டொலர் இருப்புக்களை வலுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். வணிகக் கடன் ஏன் நம்மை இந்த நெருக்கடியில் சிக்க வைத்தது? இலங்கை முதன்முறையாக சந்தைக்குச் சென்று 2007 இல் வணிகக் கடனைப் பெற்றோம். 2007 முதல் 2015 வரை ஆட்சி செய்த அரசாங்கம் 3.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள வணிகக் கடனைப் பெற்றது. அதிக வட்டி விகிதத்தில் பெறப்பட்ட இந்தக் கடன்களால் நாங்கள் கடன் பொறியில் சிக்கிக்கொண்டோம். 2015-2019 பொருளாதார நிபுணர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், நாங்கள் 12.5 பில்லியன் டொலர் வணிகக்

கடன்களை பெற்றோம். அதிக வட்டி விகிதத்தில் இந்த குறுகிய கால கடன்களை எங்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

2027 ஆம் ஆண்டில் நாம் கடன்களைப் பெற முடிந்தாலும், எந்தவொரு வணிகக் கடனையும் எடுக்காமல் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனை அடைவதே நமது சிறந்த முயற்சி. எனவே, 2028 இல் கடன் நெருக்கடி வரும், நாடு வீழ்ந்துவிடும் என்று கூறினாலும், அது எதுவும் நடக்காது. இலங்கையில் பொதுவாக வரவுசெலவுத்திட்ட ஆவணத்தில் அரசாங்க வருமானம் என்று மதிப்பீடு சேர்க்கப்படும். கடந்த ஆண்டைத் தவிர, அதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்கப்படும் வருமானம் பெறப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு, இலங்கையில் முதல் முறையாக, மதிப்பிடப்பட்ட வருவாயை விட அரசாங்கம் அதிக வருவாயை ஈட்டுகிறது. இந்த வழியில், நாங்கள் பொருளாதார வெற்றிகளை அடைந்துள்ளோம்.

ஆனால் பொருளாதாரத்தின் உயர்மட்டத்தில் அடையப்பட்ட இந்த சாதனைகளை கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்ற சவாலை நாம் எதிர்கொள்கிறோம். மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை என்றால், தரவுகளில் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுவது பயனற்றது. ஆனால் உயர் பொருளாதார தரவுகளில் ஸ்திரத்தன்மையை உருவாக்காமல், கீழ் மட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது பற்றி சிந்திக்கக்கூட முடியாது. எனவே, முதல் படியாக நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தியுள்ளோம். இன்று, முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருகிறார்கள். நாட்டில் அந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இப்போது அதன் பலன்கள் நாட்டு மக்களுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் அதில் கவனம் செலுத்துவோம்.

நாட்டில் ஒரு நல்ல அரச பொறிமுறை செயல்பட வேண்டும். நமது முழு அரச பொறிமுறையும் வீழ்ச்சியடைந்து இருந்தது. வாகனங்கள், உபகரணங்கள் பழமையானவை, கட்டிடங்கள் பாழடைந்துவிட்டன. இந்த இடிபாடுகளிலிருந்து நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை. எனவே, எதிர்கால வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கத்தை நவீனமயமாக்குவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

டிஜிட்டல் மயமாக்கலை நாம் மிகவும் வெற்றிகரமாக முடித்து வருகிறோம். நமது நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை மிக முக்கியமான படியாகும் என்று

கூற வேண்டும். மேலும், டிஜிட்டல் மயமாக்கலுடன், ஆட்சிமுறை மிக முக்கியமான நிலைக்கு உயர்த்தப்படும். நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக இந்த 04 ஆண்டுகளுக்குள் இந்த டிஜிட்டல் மாற்றத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு கல்வி மிக முக்கியமான துறையாகும். எனவே, பாடசாலை கட்டமைப்பில் ஒரு பாரிய நவீனமயமாக்கலை எதிர்பார்க்கிறோம். நமது கல்வி முறை தவறானது. நமது கல்வி ஒருவழிப் பாதையில் உள்ளது. கல்வி பரந்த அளவில் திறந்திருக்க வேண்டும். பாடசாலைக்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளையும் தொழில்திறன் அல்லது கல்வித் திறன்கள் இல்லாமல் பாடசாலையை விட்டு வெளியேற நாங்கள் இடமளிக்க மாட்டோம். எனவே, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கல்வியில் ஒரு பெரிய திருப்பத்தை நாங்கள் எடுத்து வருகிறோம்.

மேலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, அவர்கள் ஈடுபட்டுள்ள பொருளாதாரத் துறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் இலாபகரமான தொழில்களாக மாற வேண்டும். விவசாயத்தின் பழைய சகாப்தம் முடிந்துவிட்டது. இன்று, விநியோகச் சங்கிலி சிறு, பெரும்போகங்களுக்கு மட்டுப்பட்டில்லை. மாறாக தொடர்ச்சியான விநியோகச் சங்கிலியாக உள்ளது. அதன்படி, நாம் புதிய பயிர்ச்செய்கை திட்டங்களை நோக்கி நகர வேண்டும். அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம். எங்கள் உற்பத்திகள் நாட்டிற்கு வெளியே செல்ல வேண்டும்.

புதிய பொருளாதார வாய்ப்புகளையும் நாம் உருவாக்க வேண்டும். அரசாங்கம் வழங்க வேண்டிய வசதிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக நமக்கு வலுவான பொதுப் போக்குவரத்து சேவை தேவை. நமது நாட்டு குடிமக்கள் தங்கள் போக்குவரத்து வசதிகளுக்காகச் சுமக்கும் செலவு மிக அதிகம். எனவே, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

மேலும், வலுசக்தி துறை ஒரு முக்கியமான துறையாகும். நீண்ட காலமாக, களனிதிஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையங்கள் நெப்தா மற்றும் கருப்பு எண்ணெயில் இயங்கி வருகின்றன. விரைவில் அதை LNG க்கு மாற்றுவோம். அதன்படி, வலுசக்தி செலவுகளைக் குறைக்க முடியும். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல துறைகளும் உள்ளன. சுகாதாரத் துறையில், சில இடங்களில் மருந்துப் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆனால் அது நிதிப் பிரச்சினை அல்ல. நமது கொள்வனவு முறையில் சிக்கல் உள்ளது. அண்மையில், கொள்வனவுத் துறையில் உள்ள அனைவரையும் அழைத்தேன். பொதுவாக, எங்களிடம் சுமார் 6,000 டெண்டர்கள் இருக்கும். இந்தப் பிரச்சினை எளிதானது

அல்ல. எனவே, விரைவில் கொள்வனவு ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, மருந்துகளை வாங்குவதற்கான புதிய கொள்வனவு செயல்முறையை நோக்கி செல்வோம். இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கியுள்ளோம். இருப்பினும், அடுத்த ஆண்டுக்கான ஏராளமான டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 200 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மருத்துவர் இருக்கும் வகையில் ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவிலும் ஒரு சமூக சுகாதார மையம் நிறுவப்படும். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் 60 மில்லியன் பேர் சிகிச்சை பெறுகிறார்கள். மக்கள் தொகை 20 மில்லியன். அதாவது ஒவ்வொரு நபரும் மூன்று அல்லது நான்கு முறை சிகிச்சைக்கு வந்துள்ளனர். நமக்கு வலுவான சமூக சுகாதார சேவை அவசியம்.

சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டை எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளாக நாங்கள் கருதுகிறோம். அப்போதுதான் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். இந்த செலவுகளின் சுமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், குடிமக்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். அந்த வகையில் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். இந்த அரசாங்கம் மிகச் சிறந்த திட்டத்துடன் செயல்படுவதால், நமது நாட்டை அது இருக்கும் இடத்திலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அந்தப் பயணத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள். அதிகாரத்தைப் பெறவும் அதனைப் பாதுகாக்கவும் நீங்கள் செய்த பணிக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்பதைக் கூற வேண்டும். மாலைதீவில் யாராவது திடீரென இறந்தால் உடலைக் கொண்டு செல்வதில் உள்ள சிரமம் குறித்து நாங்கள் குறிப்பாகக் கவனம் செலுத்துகிறோம். உலகில் எங்கு வாழ்ந்தாலும், ஒவ்வொரு இலங்கை குடிமகனையும் கவனித்துக்கொள்வது நமது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மாலைதீவு ஜனாதிபதி எங்களுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க ஒப்புக்கொண்டார்.

நாம் பிறந்த நாட்டை விட சிறந்த நாட்டையும், நாம் அனுபவித்த அதே துன்பங்களை நம் குழந்தைகள் அனுபவிக்காத நாட்டையும், நம்மை விட அதிக நம்பிக்கைகள் மற்றும்

அபிலாஷைகளைக் கொண்ட எதிர்கால தலைமுறையையும் உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். அதற்கான அரசாங்கம் இதுதான். நமக்குத் தெரியாததைக் கேட்கிறோம். நாம் இயற்கையான மனிதர்களே அன்றி, ஏழு மூளைகளைக் கொண்ட சிதைந்த மக்கள் அல்ல. நமது சிறப்பு உள்வாங்கும் திறன்கள் ஆகும்.

தெரிந்தவர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்குகிறோம். எங்களுக்கு எந்த போட்டியும் இல்லை. அதனால்தான் எங்கள் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் இன்று தன்னார்வத்துடன் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது அந்தத் திறன்களைக் கொண்ட அனைவரின் பொறுப்பாகும். இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நாங்கள் இந்தப் பயணத்தில் செல்கிறோம். அதற்கு உங்கள் பங்களிப்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன்.

Top