Follow Us:

Friday, Aug 01
ஜூலை 31, 2025

மாலைதீவு வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்

மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றத்தில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

மாலைதீவில் உள்ள JEN Maldives Malé ஹோட்டலில் நடைபெற்ற இந்த வர்த்தக மன்றத்தின் நோக்கம், முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் தொழில்துறைகளில் முதலீட்டிற்கு உகந்த நாடாக இலங்கையை முன்னிலைப்படுத்துவதும், மாலைதீவு வர்த்தக சமூகத்தை இந்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதுமாகும்.

மாலைதீவு வர்த்தக சமூகத்தினரிடையே உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆற்றலை வலியுறுத்தினார். 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, வலுவான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச ஆதரவு மூலம் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதன்படி, நிலவிய அதிக பணவீக்கம் போன்ற பொருளாதார சவால்கள் தற்போது வெற்றிகொள்ளப்பட்டுள்ளன என்றும், அந்நியச் செலாவணி கையிருப்பு வலுப்பெற்றுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கை தற்போது தெளிவான மற்றும் நிலைபேறான பொருளாதாரப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக மாலைதீவு வர்த்தக சமூகத்தினரிடம் தொடர்ந்தும் தெரிவித்தார்.

மேலும், 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய அரசாங்கம் அமைந்துள்ளதாகவும், இதனால், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ” வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத ஒரு சமூகமும் சிறந்த ஆட்சியும் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்து மாலைதீவு முதலீட்டாளர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சுற்றுலாத் துறை, உணவு தயாரிப்பு, மீன்பிடித் தொழில்துறை, ஆதன விற்பனை, நகர உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) போன்ற துறைகளில் உள்ள மிகப்பாரிய முதலீட்டு வாய்ப்புகளை குறிப்பாக வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், மாலைதீவு தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயல்படுத்திய உத்திகளை பாராட்டிய ஜனாதிபதி, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதில் பங்குதாரர்களாக செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டாகும்போது 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாலைதீவு முதலீட்டாளர்கள் புதிய ஹோட்டல் திட்டங்களில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மீன்பிடித்துறை, மீன்வளர்ப்பு மற்றும் விவசாய தயாரிப்பு போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் இரு நாடுகளும் நன்மை பயக்கும் பலன்களை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் AI, IoT மற்றும் இயந்திரம் சார் கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாகப் புரிந்துகொள்ளும் திறன்களைக் கொண்டிருப்பதால், இந்தத் துறையில் புதிய முதலீடுகளுக்கு பெரும் சாத்தியமும் திறனும் இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகம், நகர அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சொகுசு வீட்டுத் திட்டங்கள் போன்ற நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையில் சாதகமான முதலீட்டுச் சூழல் உள்ளதாகவும், முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், நிதி, சுகாதாரம், கல்வி மற்றும் புத்தாக்க வர்த்தகங்களுக்கான மையமாகவும், நவீன நிதி மற்றும் வணிக நகரமாகவும், கொழும்பு துறைமுக நகர் தொழில்முனைவோருக்கு மிகப் பாரிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

மாலைதீவு இலங்கையின் அண்டை நாடு மட்டுமல்ல, நெருங்கிய நண்பர் மற்றும் நம்பகமான பங்காளியும் கூட என்று கூறிய ஜனாதிபதி, இலங்கையில் முதலீடு செய்து இலங்கையின் எதிர்காலப் பயணத்தில் இணையுமாறு மாலைதீவு வர்த்தகர்ளுக்கு அழைப்பு விடுத்தார்.

மாலைதீவின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத்தும் (Mohamed Saeed) இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சிலின் தலைவர் சுதேஷ் மெண்டிஸும் நிகழ்வில் இணைந்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

பின்னர், கேள்வி பதில்(Q&A) அமர்வு நடைபெற்றதுடன், இதன் போது வர்த்தகர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதியும் குழுவினரும் பதிலளித்தனர்.

விருந்தோம்பல், உணவு மற்றும் பானங்கள், சுகாதார சேவைகள், நிர்மாணம், கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாலைதீவு முன்னணி வர்த்தகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன், இந்த துறைகளில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களிடையே உரையாடலை உருவாக்குவதற்கும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த தளமாக இருந்தது.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உட்பட இந்நாட்டுத் தூதுக்குழுவும், மாலைதீவுக்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் மற்றும் உயர் ஸ்தானிகராலய அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top