Follow Us:

Tuesday, May 06
மே 6, 2025

வியட்நாமுக்கான தனது அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

வியட்நாமுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த அரச விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த அரச விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து வியட்நாம் அரச பிரதானிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

மேலும், ஜனாதிபதி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடனும் (To Lam) கலந்துரையாடினார். கடந்த 55 ஆண்டுகளாக உயர்ந்த அரசியல் நம்பிக்கை, நெருக்கமான மக்கள் உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பாரம்பரிய நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சியை இரு நாடுகளும் இதன்போது வலியுறுத்தின.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும், வலுவான ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியில் இன்னும் வலுவாகப் பேணுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

மேலும், ஜனாதிபதி வியட்நாம் போர் வீரர்கள் நினைவிடம் மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவரும் சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் அவர்களின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த அரச விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விங்குரூப் (Vingroup),
சன் குழுமம் (Sun group), எப். பி. டி. கூட்டுத்தாபனம் (FPT Corporation), சொவிகொ (SOVICO) குழுமம்
ரொக்ஸ் (ROX) குழுமம் ஆகிய வியட்நாமில் உள்ள பாரிய அளவிலான தொழிலதிபர்களுடன் பல கலந்துரையாடல்களை நடத்தினார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ​​தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரையின் புதிய போதி மதிலையும் திறந்து வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சிறப்புரையாற்றினார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் இணைந்தார்.

Top