மொனராகலை விஜயபாகு கல்லூரி மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (09) கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துடன் இணைந்து, “Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் ரீதியான பெறுமதி குறித்தும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, நாட்டின் எதிர்காலத்திற்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் வகிபாகம் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
தமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் ஆராய்வதன் மூலம் வாழ்வின் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என இங்கு மாணவர்களுக்கு சுட்டிக்காட்டிய உடுகமசூரிய, ஒரு பாட அறிவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், ஒவ்வொரு துறை தொடர்பிலும் ஆராய்ந்து புத்தாக்கத் துறையை வெல்லும் திறனை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் இங்கு விளக்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டிய பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, அடையாளப் பரிசாக குறித்த பாடசாலைக்கு பெறுமதியான மரக் கன்றுகளையும் வழங்கிவைத்தார்.
ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. என். எம் குமாரசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, அதன் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் மொனராகலை விஜயபாகு கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.