Follow Us:

Wednesday, Jul 23
ஜூலை 22, 2025

கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்

கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தால் அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (22) வாய்ப்பு கிடைத்தது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்துடன் இணைந்ததாக, “Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு ரீதியான பெறுமதி குறித்தும் மாணவ மாணவிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார விசேட உரை நிகழ்த்தியதோடு, புதிய சமூக மாற்றத்துடன் நாட்டை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் நாட்டின் முழு சமூகத்திற்கும் சுய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மாறிவரும் சமூகத்தை பரந்த பார்வையுடன் பார்த்து புதிய உலகத்திற்குத் தேவையான மாற்றத்தை உருவாக்கும் ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், சிறு வயதிலிருந்தே மாணவர்களிடம் மேம்பட்ட மனநிலையை உருவாக்குவது நாடு எதிர்கொள்ளும் ஒரு சவால் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் என்பது புள்ளிகள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய சூரியபண்டார, தொடர்ந்தும் பழைய கல்வி முறையுடன் நாட்டை இனி முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்றும், புள்ளிகளைக் கொண்டு குழந்தைகளை மதிப்பிடும் முறையை புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் மாற்ற வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பாடசாலைகளுக்கு பெறுமதியான மரக் கன்றுகளும் ‘Vision’ சஞ்சிகையும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவி பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன மகா கல்லூரியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Top