விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
விவசாய, கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் தனித்தனி கலந்துரையாடல்களை நடத்திய ஜனாதிபதி, அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து தரவுத்தளமொன்றைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது நாட்டை தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளில் பரந்த அளவில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
விவசாயம், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் கிராமிய வறுமையை ஒழித்து, கிராமப்புற மக்களை பொருளாதாரத்தில் இணைக்கும் அரசாங்கத்தின் முக்கிய திட்டம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேவேளை உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளை கைத்தொழில்களாக மேம்படுத்த இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது என்றும், சம்பந்தப்பட்ட திட்டங்களின் நன்மைகள் மக்களுக்குச் செல்கிறதா என்பதை ஆராய்ந்து தேவையான பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
விவசாயம், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.