இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது ஒரு தூதுவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களுடன் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகப் பிரதானிகளை வாழ்த்திய ஜனாதிபதி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தி உடனடியாகத் தலையிடுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், எனவே நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறிப்பாக வெளிநாட்டு வருமானம் ஈட்டுவதில் முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 04 துறைகளில், தூதரகங்களுக்கு விசேட பொறுப்பு இருப்பதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொருளாதாரத்தின் வெளிப்புற ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கிய காரணியாக இருக்கும் அனைத்து அந்நிய செலாவணி வழிகளும் தூதரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகளைச் செய்வது காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட புதிய இராஜதந்திரிகள் பின்வருமாறு.
01. இந்தோனேசியத் தூதுவர் – திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன
02. பிரேசில் தூதுவர் – திருமதி. சி.ஏ.சி.ஐ. கொலொன்ன
03. மாலைதீவு உயர்ஸ்தானிகர் – எம்.ஆர். ஹசன்
04. துருக்கியின் தூதுவர் – எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ
05. நேபாளத் தூதுவர் – திருமதி ருவந்தி தெல்பிடிய
06. தென் கொரியாவின் தூதுவர் – எம்.கே. பத்மநாதன்
07. ஓமான் தூதுவர் – டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.