Follow Us:

Tuesday, Sep 02
செப்டம்பர் 1, 2025

அரசு நிறுவனங்களை புத்துயிர் பெறச் செய்யும் வகையில் செப்டெம்பர் 01 முதல் 04 வரை ‘செயிரி வாரம்’

அரச சேவையின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து அரச நிறுவனங்களையும் இலக்காகக் கொண்டு, ‘கிளீன் ஶ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், செப்டெம்பர் 01 முதல் 04 வரை ‘செயிரி வாரம்’ என்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு அமைதியான, ஆரோக்கியமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பணிச்சூழலை உருவாக்குவதாகும். உற்பத்தித்திறன் தொடர்பான 5S திட்டத்திற்குரிய ‘செயிரி’, என்பது ஒரு நிறுவனத்திற்குத் தேவையான மற்றும் தேவையற்றவற்றைக் கண்டறிந்து தேவையற்றவற்றை அப்புறப்படுத்துவதைக் குறிக்கிறது. அதன்படி, அரச நிறுவனங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட இடத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவது இதில் முக்கிய பணியாக இருக்கும்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, இந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் இரண்டு மணி நேரம் நிறுவனங்களில் சுத்திகரப்பு செய்வதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் செலவிடப்பட வேண்டும். கட்டிடங்களின் உட்புற மற்றும் வெளிப்புற சூழலைப் பராமரிப்பதிலும், நிறுவனத்திற்கான வீதிகளின் நுழைவாயில்கள் மற்றும் வீதி ஓரங்களை அழகாக வைத்திருப்பதிலும், குறிப்பாக மாற்றுத்திறனாளி சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படும்.

மேலும், பயன்படுத்த முடியாத இன்வெண்டரிப் பொருட்கள், பழைய வாகனங்கள் மற்றும் ஆவணங்களை முறையான வழிமுறையின்படி அப்புறப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ‘செயிரி வாரத்தை’ ஒரு முறை மட்டும் செயற்படுத்தி நிறுத்தாமல் அதன் ஊடாக உருவாகும் ஒழுங்கமைக்கப்பட்ட சூழலை தொடர்ந்து பேணுவதற்காக நிரந்தர வழிமுறையைத் தயாரித்து அதற்கான அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்குமாறும் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top