Presidential Secretariat of Sri Lanka

சனாதிபதி

இலங்கையின் சனாதிபதியும் ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவருமானவர்

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2022 ஜூலை மாதம் 21 ஆம் திகதி  இலங்கையின் சனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவிவகித்துள்ளார். சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், 1993–94 காலப்பகுதியில் முதற் தடவையாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்கா குமாரதுங்க சனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த, பிரதமராக பதவியேற்றார். 2015 ஜனவரியில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உருவான கூட்டரசாங்கத்தின் பிரதமராக அவர் பதவியேற்றார். அவரது இந்நியமனம் 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 2018 அக்டோபரில் அவரை சட்டவிரோதமாக பதவியிலிருந்து அகற்றிய பின்னர், 2018 டிசம்பர் மாதம் மீண்டுமொருமுறை அவரை பிரதமராக நியமிப்பதற்கு சனாதிபதி சிறிசேன நிர்ப்பந்திக்கப்பட்டார். 2019 நவம்பரில், ஐ.தே.க.வின் சனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். 2022 ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவைத் தடுத்துநிறுத்த, தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வழங்குவதற்காக ஓர் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்குமாறு சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 2022ஆம் ஆண்டு மே மாதம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் 1946 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான அரசியற் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். அவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து (2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை ஒரு பத்து மாத இடைவெளியைத் தவிர) அனைத்துப் பாராளுமன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய இலங்கையின் மிகவும் மூத்த, அனுபவமிக்க ஒருவராவார்.

அரசியல் ஆரம்பம்

பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், 1949 ஆம் ஆண்டு பிறந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள், உண்மையாகவே புதிய சுதந்திர யுகத்தின் ஒரு தலைவராவார். தொழிலால் ஓரு வழக்கறிஞரான அவர், தனது பல்கலைக்கழக நாட்களிலிருந்து ஐ.தே.க.வின் இளைஞர் அணியில் பணியாற்றி, 1977 இல் (28 வயதில்)  பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் மிகவும் இளமையான அமைச்சராக இருந்த அவர், சனாதிபதி ஜயவர்தன அவர்களின் கீழ், வெளிவிவகார பிரதி அமைச்சராகப் பதவி வகித்தார். அவரது அதீத திறமைகள் மற்றும் பணியாற்றவதற்கான  தனித்துவமிக்க இயலுமை ஆகியவற்றை மதித்து மிக விரைவிலேயே அவர் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்புகள் அமைச்சராக அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டார். பிற்காலத்தில் அவருக்குக் கல்வி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு, ஓர் அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சனாதிபதி; பிரேமதாசவின் கீழ் சபை முதல்வராக நியமிக்கப்பட்டார். கைத்தொழில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

ஆரம்ப கால சாதனைகள்

1977 இலிருந்து 1994 வரை, ஐ.தே.க.வில் அடுத்தடுத்து பதவிக்கு வந்து பதினேழாண்டு காலப்பகுதியில் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதி என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நாட்டின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செலுத்தினார். பாடசாலைக் கல்வியின் தர ரீதியான வளர்ச்சியை நோக்காகக் கொண்டு 1980 களில் தீவிர சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். இதனால் அவரை நாட்டிற்குக் கிடைத்த மிகச் சிறந்த கல்வி அமைச்சராகப் பலரும் கருதுகின்றனர். அச்சீர்திருத்தங்களுள் ஆங்கிலம் முதலிய பாடங்களைத் தரமுயர்த்தியமை மற்றும் தொழில்நுட்ப, கணனித் திறனை அறிமுகம் செய்தமை ஆகியன அடங்கும். இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) இன் வாயிலாக கல்விச் சேவையை தொழில்வாண்மைத்துவப்படுத்தினார். இலங்கை ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குமுகமாக அவர் தேசியக் கல்வி நிறுவகத்தையும் (NIS)  கல்வியியல் கல்லூரிகளையும் தாபித்தார். மகரகமவில் இளைஞர் சேவைகள் நிலையம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி நிறுவனமான தேசிய இளைஞர் கூட்டமைப்பு (NYC)  ஆகியவற்றையும் நிறுவினார். பயிலுநர் பயிற்சியளித்தலுக்கு வழிவகுத்தார். இது தேசியப் பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA)  மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் தாபிப்பிற்கு இட்டுச் சென்றது. ஆக்க, ஊக்குவிப்பு, திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டு இளைஞர் மன்றங்கள் (Yovun Samaja) மற்றும் இளைஞர் முகாம்கள் ஆகியவற்றின் மூலம் அவர் இலங்கை இளைஞர்களுக்கு வலுவூட்டினார்.

பின்னர், கைத்தொழில், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் (1989–1994) என்ற  வகையில், அவர் 1989 இல் இலங்கையின் இரண்டாவது சுற்று பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்குப் பொறுப்பாகவிருந்தார். அது நிதிச் சட்டவிலக்கு மற்றும் கிராமப் புறங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுதல் ஆகியவற்றின் மூலம் கைத்தொழில் ஊக்குவிப்பு ஆகியவற்றின் மீது கவனத்தைக் குவித்தது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தோடு, இன்போ ஸ்ரீ லங்கா கண்காட்சியை ஆரம்பித்து இலங்கையை ஐவு யுகத்திற்கு அறிமுகப்படுத்தியதோடு, நாட்டை இணையத்தோடு இணைக்க 1993 இல் ஐக்கிய அமெரிக்காவின் உப சனாதிபதி ஏ.ஐ.கோருடன் ஒப்பந்தமும் செய்துகொண்டார். அவரது கைத்தொழில்மயமாக்கல் மூலோபாயம் சனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் கருத்திட்டத்திற்கு இட்டுச்சென்றது. ஊக்குவிக்கப்பட்ட ஏனைய கைத்தொழில்களுள் இறப்பர் கையுறைகள் மற்றும் வாகன, கைத்தொழில் டயர்கள் ஆகியவற்றிற்கு பெறுமதி சேர்த்தல் அடங்கியிருந்தது.

1977 இல், இத்தீவில் மிகக் குறைவாக அபிவிருத்தியடைந்த தொகுதிகளுள் பியகம ஒன்றாக இருந்தது. பியகம தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் அதனை கார்பெட் இடப்பட்ட வீதிகள், மின்சாரம், நீர், துப்பரவேற்பாடு, பாடசாலைகள், சமூக நிலையங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் ஆகியன கொண்ட ஒரு மாதிரி புறநகர்ப் பகுதியாக மிளிரும் வண்ணம் மிகச் சிறப்பாக அபிவிருத்தி செய்தார். அவரது பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் பியகம இன்று முன்னணி ஏற்றமதி மைய பிராந்திய பொருளாதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. அது, களனி ஆற்றின் ஒரு புறத்தே பலவிதமான கைத்தொழில்களில், ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பளிக்கும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தையும் (1985), மறுபுறத்தே சீத்தாவக்க முதலீட்டு வலயம் (1993) மற்றும் பல உற்பத்தி பிரதேசங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தைக் கொண்டுள்ளது.

பிரதமர் ரணில்

1993 இல் சனாதிபதி பிரேமதாசவின் அகால மறைவினையடுத்து, டீ.பீ. விஜயதுங்கவின் குறுகிய சனாதிபதிப் பதவிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத விதமாக பிரதமராக நியமிக்கப்பட்டார். எந்தவொரு சவாலுக்கும் எப்போதும் தயாராகவே இருந்த இவ்விளம் பிரதமர், அவ்வுயரிய பதவிக்கான பொறுப்பை ஏற்கத் துணிந்து எழுந்து நின்றார். இம்முக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டின் சட்டம், ஒழுங்கு, உறுதிப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தியமைக்காக அவர் பாராட்டப்பட்டார். இக்குறுகிய காலப்பகுதியில் அவர் பொருளாதாரத்தை வலுப்படுத்த வழிநடத்தினார். நாடு சகாப்தத்தின் அதியுயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அப்போது பதிவு செய்தது. அவர் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதோடு, எல்.ரீ.ரீ.ஈ.யை (தமிழீழ விடுதலைப் புலிகள்) எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு புதிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தைக் கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்

1994 இல் ஐ.தே.க. தேர்தல் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரானார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி, காலத்துக்குக் காலம் நிறுவன மற்றும் அடிமட்டங்களில் பலசுற்று விரிவான மீள் கட்டமைப்புகளை மேற்கொண்டுள்ளது. பிரதிநிதித்துவத்தில் அதிக நியாயமானதொரு சமநிலையை உறுதிப்படுத்துமுகமாக, அதிலும் குறிப்பாக இனத்துவம், பால்நிலை, இளைஞர் என்று வரும்போது, கூடிய சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு கட்சியை சனநாயக மயப்படுத்துமுகமாக அவர் செயற்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

மீண்டும் மீண்டும் பிரதமர்

2001 இல், ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியை ஆட்சி அதிகாரத்தை நோக்கி வழிநடத்தி, 2001 முதல் 2004 வரை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அரசின் அதியுயர் பீடத்தில் எதிர்க் கட்சியிலிருந்து வந்த ஒரு சனாதிபதியும், பாராளுமன்றத்தில் அமளிதுமளிப்படுத்தும் ஒரு எதிர்க்கட்சியும் இருந்தபோதும், முழு நேர மின்சாரத்தை மீள ஏற்படுத்தியமை, -1.55% என்ற ஒரு வளர்ச்சி வீதத்திலிருந்து நலிவுறும் பொருளாதாரம் 2002 இல் 3.96% என்ற வளர்ச்சி வீதத்தை அடையும் வண்ணம் அதற்குப் புத்துயிர் ஊட்டியமை, நாட்டில் நிலவிய பல இனத்துவத் தடைகளை உடைத்தெறிந்தமை, போரிடும் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை சமாதானப் பேச்சுக்களுக்காக பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்தமை, இலங்கைக்கான சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணம் மற்றும் நிதி ஆதரவு ஆகியவற்றை பலப்படுத்தியமை ஆகியன ரணில் விக்கிரமசிங்கவின் மிகவும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளாகும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 2004 இல் முதற்தடவையாக நாடு அரிசியில் சுய நிறைவடைந்தது.

இன்னொரு சிறு காலப்பகுதி எதிர்க்கட்சியில் இருந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க 2015 ஜனவரி 15 ஆம் திகதி சனாதிபதி சிறிசேன சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதமராகப் பணியாற்றினார். ஒரு சில மாதங்களின் பின்னர், அவர் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகத் தொடர்ந்து பணியாற்றினார். இம்முறையும் 2018 ஆம் ஆண்டிலிருந்து தன்னுடன் முரண்பாடுடைய ஒரு சனாதிபதியின் கீழ் அரச விவகாரங்களை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது. சனாதிபதி சிறிசேனவின் தலையீடுகள் இருந்தும், இக்காலத்தில் அடையப்பெற்ற குறிப்பிடத்தக்க சாதனைகளுள் நல்லாட்சியை நிறுவுவதற்கான பல சட்டவாக்க மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அடங்கியிருந்தன. அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் வாயிலாக சனாதிபதி பதவியின் பலமான அதிகாரங்களை நீக்கி, பாராளுமன்ற சனநாயக முறைமைக்குத் திரும்பி வருதல் இதில் அடங்கும். ஏனைய சட்டங்களுள் தண்டனைச் சட்டக்கோவையின் குற்றவியல் அவதூறு ஏற்பாடுகளை நீக்கியமை, தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம், தேசிய கணக்காய்வுச் சட்டம், செயலூக்கமிக்க பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் ஆகியன அடங்கும். (நாட்டின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி, மேம்படுத்தி) சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் உரிய நடைமுறையை உறுதிப்படுத்துமுகமாக பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் உள்ளுரதிகார சபைகள் மட்டத்தில் குறைந்த பட்சம் 25மூ மகளிர் பிரதிநிதித்துவ பங்கீட்டிற்கு வழிவகுத்து அரசியலில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், 2015 இல், 62 ஆண்டுகளின் பின்னர் முதற் தடவையாக ஒரு மிகையைக் காட்டிநிற்கும் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டத்திற்கு வழிகோலின. இது 2019 இல் மீண்டும் ஏற்பட்டது. ஏனைய சாதனைகளுள் (நாடு தழுவிய ஓர் அவசர மருத்துவ சேவையை நிறுவி : சுவசரிய) சுகாதார மற்றும் கல்வித் துறைகளை தரமுயர்த்தியமை, இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியமை மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தியமை ஆகியன அடங்குகின்றன.

2020 ஆகஸ்ட் மாதம் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.க.வும் தோற்கடிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் அக்கட்சி ஒரேயொரு போனஸ் ஆசனத்தையே தக்கவைத்தது. தேசியப் பட்டியலில் கட்சி மீண்டும் அவரை பாராளுமன்றத்திற்கு நியமித்தபோது அவர் ஏறக்குறைய அரசியலிலிருந்தே ஓய்வுபெற்றிருந்தார். ராஜபக்ச ஆட்சியின் பொருளாதார தவறுகள், திறனற்ற நிர்வாகம் மற்றும் கொவிட் பெருந்தொற்று ஆகியவற்றினால் அதிகரித்து வரும் நெருக்கடியைத் தணிப்பதற்கு அவர் தனது நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்பதாலேயே அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

குடும்பம்

ரணில் விக்கிரமசிங்க, 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். 1995 இல் ஆங்கில தலைமைப் பேராசிரியரும் களனிப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை கற்கைகளுக்கான நிலையத்தின் தாபகப் பணிப்பாளருமான மைத்திரி விக்கிரமசிங்க அவர்களை மணமுடித்தார். பால்நிலை மற்றும் மகளிர் கற்கைகளில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளர்/பேச்சாளர் ஆகிய அவரது ஆக்கங்கள் ஆராய்ச்சி, கற்பித்தல்/பயிற்சி, கொள்கை அபிவிருத்தி, சார்புரை, செயற்பாட்டியல் ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகின்றன.

அவர் எஸ்மன்ட் மற்றும் நளினி விக்கிரமசிங்க தம்பதிகளின் இரண்டாவது மகனாவார். அவருக்கு தத்தமது தொழில்களிலும் ஆர்வம்; சார்ந்த துறைகளிலும் சிறந்து விளங்கும் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். எஸ்மன்ட் விக்கிரமசிங்க ஒரு புகழ்பெற்ற பத்திரிகை ஜாம்பவானும் ஒருமுறை சர்வதேச பத்திரிகை நிறுவகத்தின் தலைவராக இருந்தவருமாவார். 1965 இல் அவருக்கு சுதந்திர தங்கப்பேனை விருது (பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாப்புக்கு கணிசாமானதொரு பங்காற்றிய தனிமனிதர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த விருது) வழங்கப்பட்டது. நளினி விக்கிரமசிங்க டீ.ஆர். விஜேவர்தனவின் (நாட்டின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரும் அசோசியேட்டட் நியுஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட் என்ற இலங்கையின் மிகப் பெரிய வெளியீட்டகத்தை நிறுவிய பத்திரிகைத்துறை பேராளருமானவர்) மகளாவார். அவர் 1950 களிலிருந்து 1980 கள் வரை சிங்;கள நாடகம், கைப்பணித்திறன், கலாசாரம் ஆகியவற்றிற்குப் புத்துயிரளிக்கக் கணிசமானளவு பங்களிப்பாற்றிய ஒரு கலைப் போசகராவார்.

கல்வி மற்றும் ஏனைய நாட்டங்கள்

ரணில் விக்கிரமசிங்க தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்று, 1972 இல் இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். அதன் பின்னர்; ஐந்தாண்டு காலம் அவர் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2014 இல், ஐக்கிய அமெரிக்காவின் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்திலுள்ள மசசூசெட்ஸ் தொழில்நுட்பவியல் நிறுவகத்தில் (MIT)  அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் றொபட் ஈ வில்ஹெம் புலமையாளராக இருந்தார். 2017 இல், நாட்டிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய அரசியல் சேவையை கௌரவித்து அவுஸ்திரேலியாவின் டேக்கின் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டமொன்றை வழங்கியது. ஆசிய பசுபிக் ஜனநாயக ஒன்றியத் தலைவராக (2015–2022) அவர் நியமிக்கப்பட்டதோடு, சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் ஒரு பிரதித் தலைவராகவும் (பதவிவழி) இருந்து வருகிறார்.

அரசியலுக்கு அப்பால், அவர் இந்து சமுத்திரப் பிராயந்தியத்தில் சிறப்புக் கரிசனை கொண்ட ஒரு சர்வதேச அறிஞர் குழாமாகிய பூகோள அரசியல் திட்ட வரைபாளர் (GC) அமைப்பின் போசகராக உள்ளார். புஊ பூகோள அரசியல் ஒழுங்கை மீள வரையும் இந்து சமுத்திர பிரதேசம், பசுபிக் சமுத்திர பிரதேசம் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட நிலப்பகுதிகள் ஆகியவற்றில் பூகோள அரசியல் மற்றும் பூகோள பொருளியல் பற்றிய கற்கை, ஆராய்ச்சி, பகுப்பாய்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

பற்றுறுதியும்; ஆர்வங்களும்

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வரலாற்று புகழ்பெற்ற விகாரைகளில் ஒன்றான களனி விகாரையின் பரிபாலன சபையின் தலைவராகப் பணியாற்றியுள்ளதோடு, கங்காராமய, வாலுக்காராமய, வெரகொடல்ல (சேதவத்த) விகாரைகளின் ஒரு பரிபாலகராகவும் உள்ளார். இலங்கை வரலாறு, இலக்கியம், உலக அரசியல், பௌத்தம் ஆகியன தொடர்பாக அவர் பரந்தளவில் எழுதியும் உரையாற்றியும் உள்ளார். ஓர் ஆர்வமிக்க வாசகராக அவர் பிராந்திய அரசியல், சர்வதேச விவகாரம், உலக வரலாறு ஆகியன தொடர்பான நூல்களையும் தனது மிக விருப்பிற்குரிய ஐபேட் இல் வலைத்தள கட்டுரைகளையும் மிக ஆர்வமாக வாசிப்பார். அவர் சிங்கள இசை, மேற்கத்தேய சங்கீதம், இசைநாடகம், பாலிவுட் பாடல்கள் ஆகியவற்றைப் போற்றி ரசிப்பார். ரணில் விக்கிரமசிங்க இலங்கை மற்றும் சர்வதேச உணவு வகைகளை விரும்பி உண்பதோடு, தனது துணைவியாரோடு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்வதிலும் பேரின்பம் அடைகிறார்.

(English) Recent News