ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலோபாய இலக்குகளை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் நிறுவன செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் அந்த செயல்பாட்டில் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதான சவாலாக இருக்கும் சட்டங்களைத் திருத்தும் பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தற்போதைய ASYCUDA கட்டமைப்பு மற்றும் அதன் குறைபாடுகள், தேசிய ஒற்றைச் சாளர சேவை(National Single Window), இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை துல்லியமாகப் பதிவு செய்வதில் உள்ள சவால்கள், வரி விலக்குகள், வருமானத்தை துல்லியமாக அடையாளம் காண்பது போன்றவற்றுக்கு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பெறக்கூடிய தீர்வுகள் மற்றும் தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டன.
மேலும், தற்போதைய இலத்திரனியல் வணிகப் (e- commerce) பிரச்சினை தொடர்பாகவும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது. நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித மற்றும் நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்டஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அப்போன்சு, சுங்கப் பணிப்பாளர் நாயகம் பீ.பீ.எஸ்.சி. நோனிஸ் மற்றும் நிதி அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு என்பவற்றின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.