Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட MCC மீளாய்வு இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்கு

“மிலேனியம் சவால்” MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து குழுவின் அறிக்கை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

நிபுணர் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள், முன்மொழிவுகளை ஆராய்ந்து 06 மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் MCC உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாக அறிக்கையை கையளித்த குழுவின் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்தார். இதன் கீழ் 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருப்பினும், அதற்கான கணக்கு விபரங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பகுப்பாய்வுக்குப் பொறுப்பான அரசாங்கத்தின் மைய நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் பல்துறை பகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கவில்லை என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். சட்ட ரீதியாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதென காணி ஆணையாளர் விளக்கியுள்ளார்.

இத்திட்டம் ஒரு பாராளுமன்ற சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கு எதிரான ஒரு கருத்தை அல்லது முன்மொழிவை முன்வைப்பது உடன்படிக்கைக்கு எதிரானதாகும் என்றும் பேராசிரியர் குணருவன் குறிப்பிட்டார்.

பிரதிநிதிகள் இருவருக்கு எந்தவொரு நிபந்தனையையும் கடிதம் ஒன்றின் மூலம் மாற்றுவதற்கு முடியும். அத்தகையதொரு தீர்மானம் பாராளுமன்றத்தின் இறைமையை மீறுகின்ற ஒரு விடயமாகும். சட்டமா அதிபருக்கு அரசாங்கத்தின் சார்பாக கருத்து தெரிவிப்பதற்கோ அல்லது நீதிமன்றத்திற்கு செல்லவோ முடியாத ஒரு பின்புலம் இதன்மூலம் உருவாகியிருப்பதாகவும் திரு.குணருவன் மேலும் சுட்டிக்காட்டினார்.

MCC உடன்படிக்கையை நடைமுறைப்படுத்திய ஏனைய நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்தும் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும் என தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எந்தவொரு வெளித்தரப்பினதும் தலையீடு இன்றி நடுநிலையான அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு சந்தர்ப்பமளித்தமை குறித்து குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அனைத்து விடயங்களையும் கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், அறிக்கையின் பரிந்துரைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருமாரு ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் ஒன்றிற்கேற்ப ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயரத்ன மற்றும்  பட்டைய கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

குழுவின் இடைக்கால அறிக்கை பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

(English) Recent News

Most popular