- புதிய பொருளாதார பார்வையுடன் அத்தியாவசிய மறுசீரமைப்புகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்றார் – சாகல ரத்நாயக்க.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
நிதி, சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார பார்வையுடன் ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற ” 2024 வரவு செலவுத்திட்டம்” கருத்தரங்கில் சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஜனாதிபதியின் தொழிற்சங்க இணைப்புப் பிரிவு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையை வலுசக்தி ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் மற்றும் மணிக் கணக்கில் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது அமுல்படுத்தப்பட்ட வரிக் கொள்கையால், அரச வருமானம் சரிவு, தவறான விவசாயக் கொள்கை, வரிக் கோப்புகள் குறைப்பு போன்ற காரணிகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
கொவிட் நோய்த்தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், அந்நியச் செலாவணியும் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து நடந்த போராட்டத்தால், பொருளாதாரச் சரிவு உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. மக்கள் தொழில்களை இழந்தனர். இவ்வாறானதொரு நெருக்கடி நிலையிலேயே தற்போதைய ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றார்.
அவர் விவசாயக் கொள்கையை மாற்றி அரிசி உற்பத்தியைப் பெருக்கினார். இதனால் உணவுத் தட்டுப்பாடு குறைந்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் புதிய வேலைத் திட்டத்திற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி, நிதி சீர்திருத்தங்கள், சட்ட மறுசீரமைப்புகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் இறங்கியது. புதிய வரி விதிப்பினால் மக்கள் மீது சில அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கையில் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. இலங்கை மீது சர்வதேச நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத் துறையைக் கட்டியெழுப்ப புதிய சீர்திருத்த முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் பொருளாதார வேலைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்தும் இருப்பில் கையிருப்பை உருவாக்கும் ஆற்றல் கிடைத்துள்ளது. 2022இல் 2.1 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு இன்று 4.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
2022 இல் 77% ஆக இருந்த பணவீக்கத்தை இன்று 4% ஆகக் குறைக்க அரசாங்கத்திற்கு முடிந்தது. ஒரு அரசாங்கம் செயற்பட, அதன் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% ஆக இருக்க வேண்டும். 2023 இல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 11% அரச வருமானத்தைப் பெற முடிந்தது.
அரச வருமானத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும். அதன்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் வரி வருமான வலையமைப்பைத் தயாரிப்பதன் மூலம் அரசாங்க வருமானத்தை திட்டமிட்ட வகையில் அதிகரிக்க முடியும். அதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த பொருளாதார திட்டத்தை அடுத்த ஓராண்டில் நடைமுறைப்படுத்தினால் ஒட்டுமொத்த மக்களுக்கும் நிவாரணம் வழங்க முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் 2024 வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்தி முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்குவதுடன் நகர்ப்புற மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அஸ்வெசும நிவாரணம் வழங்க அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையை நவீனமயமாக்குவதற்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் 80 கிகாவோட் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் கூட இலங்கையின் மொத்த மின்சார பாவனைக்கு 15 கிகாவாட்களே தேவைப்படுகின்றன. எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்து இலங்கையை வலுசக்தி ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து தேசிய பொருளாதாரத்திற்கு வருமானம் ஈட்டும் திட்டங்களும் உள்ளன. இவ்வாறான அனைத்துப் விடயங்களுடன் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பொருளாதார ரீதியில் வலுப்பெறும் வாய்ப்பு உண்டு.” என்று தெரிவித்தார்.
மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க,
ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டம் தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பல தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை எழுச்சி பெறும் நாடாக மாறி வருகின்றது. பொதுமக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்த அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். வரவு செலவுத் திட்டங்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. அரச அதிகாரிகளின் முதிர்ச்சியும் அனுபவமும் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க,
2022 மார்ச் மாதத்தில் இலங்கை தனது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. மக்களின் உயிருக்கு ஆபத்து அவர்களின் சொந்த வீடுகளையே எட்டியது. இலங்கையில் இது போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக இதற்கு முன் எந்த தகவலும் இல்லை.
2022 இல் ஏற்கனவே பெற்ற வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் எந்த நாடும் எம்முடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை. எனவே, எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடங்கியது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேற்கொண்டு புதிய பொருளாதார நிலைமையை உருவாக்கினார்.
அவரது பொருளாதாரத் திட்டம் மூலம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முடிந்தது. தற்போது சர்வதேச சமூகம் இலங்கையின் பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியமும் ஓரளவு புரிந்துகொண்டுள்ளது.
ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில், முடங்கிய பொருளாதாரத்தை ஒரே இரவில் மீட்டெடுக்க முடியாது. அதற்கான முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
உத்தேச புதிய பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முதல் படியை இந்த வரவு செலவுத் திட்டம் எடுத்துள்ளது.
ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அஸ்வெசும நிவாரணத்தை அமுல்படுத்துதல், காணி வழங்குதல், வீடு வழங்குதல் போன்ற சாதகமான பொருளாதார முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2% ஆக இருக்கும் என்று கணிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய,
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். 2024 வரவு செலவுத் திட்டம் என்பது இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆவணம் ஆகும். மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும், இந்த உத்தேச வரவு செலவுத் திட்டம் பற்றி சமூகத்தில் சரியான கருத்தாடல் இடம்பெறாவிட்டால், முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளை இவ்வுலகில் யதார்த்தமாக்க முடியாது.
இதுவரை வற் வரி திருத்தம் குறித்து பல தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. VAT 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே வற் விதிக்கப்பட்ட பொருட்களுக்கு 3% அதிகரித்துள்ளது. ஆனால் 0% முதல் 18% வரை அதிகரித்த ஏனைய பொருட்களும் உள்ளன.
மேலும், விதிக்கப்பட்ட வரி 18% என்றாலும், வரி சீர்செய்தல் காரணமாக, அதை விட VAT குறைவான சதவீதத்தால் அதிகரித்த பொருட்களும் உள்ளன. எனவே, இந்த VAT குறித்து சமூகத்தில் சரியான கருத்தாடல் நடைபெற வேண்டியது அவசியம்.” என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த,
வற் வரி முறையாக அரசாங்கத்திற்கு கிடைப்பதில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வற் வரி முறையாக வசூலிக்கப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பொருளாதாரத்தில் சேரும் சாத்தியம் உள்ளது. ஆனால் தற்போது அந்த வரியிலிருந்து 2% சதவீதம் மட்டுமே பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறது.
அது தொடர்பான தேடலின்போது மூன்று முக்கிய வரி இழப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் இழப்பு என்னவென்றால், வர்த்தகர்கள் வரி வசூல் செய்கிறார்கள் ஆனால் அதை அரசாங்கத்திற்கு வழங்குவதில்லை. இரண்டாவது வரி இழப்பு, அதிகாரிகளின் முறைகேடுகளால் ஏற்படும் வரி இழப்பு ஆகும். மூன்றாவது வரிக் இழப்பு வரி விலக்குகள் மூலம் ஏற்படுகிறது. இந்த வரி இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.
2019 முதல் பகுதியில், VAT 15% ஆக இருந்தது. 2020 இல் இது 8% சதவீதமாக குறைக்கப்பட்டது. இது 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதே விகிதத்தில் இருந்தது. VAT 8% ஆக குறைக்கப்பட்டாலும் 2020 இல் பொருட்களின் விலை குறையவில்லை. 15% வற் வரியை வைத்து இந்த மூன்று ஆண்டுகளில் சரிந்த பொருளாதாரத்தில் ஏற்றத்தை உருவாக்குவதும் சாத்தியமற்றது. எனவே, வற் வரியை 18 % சதவீதமாக திருத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் கபில சி. சேனாரத்ன, மேல்மாகாண செயலாளர் உட்பட கொழும்பு மாவட்ட அரச அதிகாரிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.