Presidential Secretariat of Sri Lanka

தனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு…

 இரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்…
 கல்விச் சேவை வரியை திருத்துவது குறித்து கவனம்….
 சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க
அனுமதி…

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில
இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள்
பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின்
எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.
அதுபற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இருவேறுபட்ட நேரங்களில் 500
மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன்
அனுமதி வழங்கினார்.

கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் வகுப்புகளை மீண்டும்
ஆரம்பிப்பதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள்
தொடர்பாக நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற
கலந்துரையாடலின்போதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 தொற்று காரணமாக
க.பொ.உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றக்கூடிய மாணவர்கள் 05
மாதங்களுக்கு மேலாக கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இது போன்ற சூழ்நிலையையே
எதிர்கொண்டுள்ளனர். இவ்விடயங்களை பரிசீலித்து குறித்த பரீட்சைகள் நடத்தப்படும்
திகதிகளை மாற்றியமைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயும்படியும் தனியார் வகுப்பு
ஆசிரியர்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர்
பரீட்சைக்கான திகதிகளை தீர்மானிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு
ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு
முடியாத நிலை பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் பல
சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளனர். அவைபற்றி தனது கவனத்தை செலுத்திய
ஜனாதிபதி அவர்கள், பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும்போது வினாக்களின்

எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தெரிவு செய்வதற்கான
சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான இயலுமையை பரிசீலிக்குமாறு பரீட்சைகள்
ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய கல்விச் சேவை வரி 24% வீதமாகும். அதனை திருத்தி அமைப்பது தொடர்பாக
தனியார் வகுப்பு ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள்
ஏற்றுக்கொண்டார்.
தனியார் வகுப்பு பிரச்சாரத்திற்கான துண்டு பிரசுரங்களை சுகாதார
விதிமுறைகளுக்கேற்ப விநியோகிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அனுமதி வழங்கினார்.

க.பொ.த உயர் தரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை வகுப்புக்களை
நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்கள், கொவிட் ஒழிப்பிற்கும் மற்றும் நாட்டின் அனைத்து துறைகளையும்
முன்னேற்றுவதற்கும் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை தொழில்சார்
கல்வியியலாளர்கள் சங்கம் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக தனியார் வகுப்பு
ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சர் டளஸ் அலகப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, கல்வி
அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற
மேஜர். ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பரீட்சைகள் ஆணையாளர்
நாயகம் பி.சனத்பூஜித, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட
தனியார் வகுப்பு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில்
கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular