Presidential Secretariat of Sri Lanka

பாதுகாப்பான நாட்டை உறுதிசெய்வதற்கும் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் இரண்டு ஜனாதிபதி செயலணிகள்

பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களினால் 2020 ஜுன் மாதம் 02 ஆம் திகதி செவ்வாய் கிழமை அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கி, நீதி மற்றும் சட்டத்தின் ஆணையை பாதுகாக்கும், ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாடு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பொருளாதார முறைமையை தாபிக்கும் போது நாட்டின் பாதுகாப்பு முக்கிய அம்சமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.

சிறுவர் தலைமுறை நாட்டின் எதிர்காலமாக கருதப்படுகிறது. முழு சமூகத்திலும் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினை, பொருளாதார மந்தநிலையுடன் இணைந்த சமூக வீழ்ச்சியின் முக்கிய காரணியாகும். இதிலிருந்து சமூகத்தை விடுவிப்பது முக்கிய தேவையாகும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அவர்களினால் பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டீ.எம்.எஸ். திஸாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வு பிரதாணி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வு தகவல் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, இராணுவ புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். ஹேவாவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கெப்டன் எஸ்.ஜே.குமார, விமானப்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் எயார் கொமாண்டர் எம்.டி.ஜே. வாசகே, பொலிஸ் விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.சீ.ஏ. தனபால மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

சுதந்திர சமாதான சமூக இருப்புக்கு இடையூரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பிரச்சினைக்கு ஆளானவர்களை அதிலிருந்து தடுத்தல், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற இடங்களின் ஊடாக நாட்டிற்குள் போதைப்பொருள்கள் கொண்டுவரப்படுவதை தடுத்தல், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழித்தல், போதைப்பொருள் காரணமாக ஏற்படும் ஏனைய சமூக சீரழிவுகளை தடுத்தல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.

ஏனைய நாடுகளில் இருந்து இலங்கையினுள் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத செயற்பாடுகள், சமூக விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து அதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளுடன் தொடர்புட்ட சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து அவற்றை தடுத்தலும் ஏனைய பொறுப்புகளாகும்.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தாபிக்கும் அறிவித்தல் தனியான வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு சிறப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நாடு. ஒரு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகள் அந்நாட்டின் தனித்துவத்தையும் வரலாற்றையும் எடுத்துக்காட்டும் மூலாதாரமாகும். இந்த மரபுரிமைகள் இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளினால் அழிவுக்கு உட்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இந்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருளியல் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த நாயக தேரர், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவை தலைமை சங்கநாயக்க தேரரும் அரிசிமலை ஆரண்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய பனாமுரே திலகவங்ஸ நாயக தேரர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திஸாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில குணவர்தன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸாநாயக மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் கண்ட இடங்கள், தொல்பொருள்களை பாதுகாத்தல், மீளமைத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான நிகழ்ச்சித்திட்டமொன்றை இனம்கண்டு நடைமுறைப்படுத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை இனம்காணுதல் மற்றும் தெளிவாகவும் நிரந்தரமாகவும் நிலப் பிரதேசத்தை ஒதுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல், அக்காணிகளின் கலாசார முக்கியத்துவத்தை பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல் மற்றும் அம்மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.

(English) Recent News