Presidential Secretariat of Sri Lanka

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அரச நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி பணிப்பு

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டது.

பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்ற போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அடுத்த வருடத்தில் அடையவேண்டிய இலக்குகளை இவ்வருடத்திலேயே திட்டமிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்கள் தனியார் துறையின் புதிய நிர்மாணத்துறை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தனியார் துறையுடன் போட்டியிடக் கூடிய வகையில் தரத்தையும் நியமங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகளும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அது பற்றி கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களும் அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.பி.எம் சந்தன உள்ளிட்ட பணிப்பார் சபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular