Presidential Secretariat of Sri Lanka

மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை ஒன்று வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு

  • நாட்டிற்கு அவசியமான சோளத்தை உள்நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை ஒன்றை வழங்கி பயிர்ச் செய்கையாளர்களை பாதுகாக்க வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் மற்றும் மிளகு பயிர்ச் செய்கையாளர்களை பாதுகாப்பதற்காக அவற்றை இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக சந்தை வாய்ப்புக்களை கண்டறிந்து ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் உயர் விலை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (03) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

மஞ்சள் மற்றும் மிளகு தேவையை உள்நாட்டு பயிர்ச் செய்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக ஏற்றுமதி செய்வதற்கும் முறையான திட்டமொன்றை தயாரித்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டின் வருடாந்த சோளத்திற்கான கேள்வி 05 இலட்சம் மெற்றிக் டொன்களாகும். அதனை நிறைவு செய்துகொள்வதற்கு பயிரிடப்பட வேண்டிய நிலத்தின் அளவு ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஹெக்டெயர்களாகும். தற்போது 80,000 ஹெக்டெயரில் சோளம் பயிரிடப்படுவதோடு, அடுத்த வருட இறுதியில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஹெக்டெயர்களில் பயிரிடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

100 கிராமங்களில் மஞ்சள் மற்றும் இஞ்சியை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, குருந்துகஹ, ஹெதெம்ம பிரசேத்தில் ஏற்றுமதி வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மிளகாய் பயன்பாட்டிற்கு பதிலாக மக்கள் மத்தியில் மிளகு பயன்பாட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு வெற்றிலை பிரதானமாக பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கொவிட் நோய்த் தொற்று காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வை கண்டறியுமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

பல்கலைக்கழகங்கள் மூலம் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் மற்றும் அவை சார்ந்த பெறுமதி சேர்க்கப்படும் உற்பத்திகள் தொடர்பான ஆய்வுகளை விரிவுபடுத்துவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கரும்பு கைத்தொழில் மற்றும் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை மேம்படுத்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பயிர்ச் செய்கையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(English) Recent News