Presidential Secretariat of Sri Lanka

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு…

  • மதுரங்குளி விவசாய தொழிநுட்ப நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது….
  • முன்மாதிரி பாடசாலைக்கு விளையாட்டு மைதானம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதி அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்து மதுரங்குளி பாலச்சோனை விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார். 900 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்காய், மரக்கறிகள் உள்ளிட்ட பல பயிரினங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 ஏக்கர்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையும் ஜனாதிபதி அவர்களின் பாராட்டைப் பெற்றது.

இத்தாலி அரசாங்கத்தினால் பேராயர் வண.கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைத்த நன்கொடை ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழிநுட்ப நிறுவனத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார். 50 மாணவர்கள் தங்கி இருந்து பயிற்சி பெறக்கூடிய வகையில் நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு இங்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கார்தினல் ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டார்.

கொழும்பு பேராயர் மாளிகையின் கண்காணிப்பின் கீழ் நிறுவனம் நிர்வகிக்கப்படும். பயிற்சி நிலையத்தின் பாதிரிமாருடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

மதுரங்குளி மாதிரி பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவ தளபதிக்கு அறிவித்த ஜனாதிபதி அவர்கள், உடனடியாக அதனை நிர்மாணித்துக் கொடுக்குமாறு குறிப்பிட்டார்.

வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துத் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார். வீதிகள் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் பல பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவற்றுக்கு உடனடியாக தீர்வினையும் வழங்கினார்.

மதுரங்குளி பாலச்சோனை முதல் தலுவ பிரதேசத்திற்கு பயணித்த ஜனாதிபதி அவர்கள், வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பீட்ரூட், புகையிலை, மிளகாய் மற்றும் வெங்காய பயிர் நிலங்களை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளை ஊக்குவித்தார்.

தலுவ நிர்மலபுர காற்று விசையின் மூலம் இயங்குகின்ற மின் நிலையத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். பேராயர் வண.கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சின்தக்க மாயாதுன்னேவும் இதன்போது இணைந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular