Presidential Secretariat of Sri Lanka

பெரஹர விழாக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் பற்றாக்குறை ஜனாதிபதியின் கவனத்திற்கு …

பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் பற்றாக்குறை காரணமாக பெரஹர விழாக்களின் போது எழும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள மகா சங்கத்தினர் இப்பிரச்சினைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

பெரஹர விழாக்கள் பண்டைய காலங்களிலிருந்து  இடம்பெற்றுவரும் சமய மற்றும் கலாச்சார மரபுரிமையாகும். பௌத்த கலாச்சார அம்சங்களை பாதுகாப்பது மகா சங்கத்தினரை போன்றே அரசாங்கத்தினதும் கடப்பாடாகும் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

பெரஹர விழாவுக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் பற்றாக்குறை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

மகா சங்கத்தினர் மற்றும் பழக்கப்படுத்தப்பட்ட யானை உரிமையாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஸ்ரீ தளதா மாளிகை எசல பெரஹர மற்றும் ஏனைய வரலாற்று பெரஹர திருவிழாக்களுக்கான யானைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

1980 களில், இலங்கையில் இவ்வகை யானைகளின் எண்ணிக்கை 300 முதல் 350 வரை இருந்தன. தற்போது அது 107 ஆகும். அவற்றில் சுமார் 80 யானைகள் 50 வயதுக்கு மேற்பட்டவையாகும். பெரஹர ஊர்வலத்திற்கு யானைகளுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது.

பெரஹர ஊர்வலத்திற்கு ஏற்ற யானையொன்றுக்கு பயிற்சி அளிக்க சுமார் 3 ஆண்டுகள் ஆகும் என்று இந்த யானைகளின் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பழங்காலத்தில் இருந்து, நாட்டின் அரச தலைவர்கள் விகாரைகளுக்கு யானைகளை வழங்கியுள்ளனர். மியன்மார், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் இராஜதந்திர அடிப்படையில் விகாரைகளுக்கு யானைகளை பரிசாக வழங்குவது ஒரு பாரம்பரியம் என்றும் மகா சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

யானைகளின் பராமரிப்பும் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என்றும், இறந்தபின்னரும் அவற்றுக்கு செய்யப்படும் மரபுகள் இன்று வரை தொடர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பெரஹர கலை மற்றும் கலாச்சாரத்திற்காக நாட்டிற்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தேவை என்பதை தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். யானைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான நிபந்தனைகளை வகுக்கும் போது உரிமையாளர்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன தேரர், களணி ரஜமகா விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய கொள்ளுபிட்டியே மகிந்த சங்கரக்கித தேரர், கங்காராம விகாராதிகாரி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பெரஹர யானை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிலங்க தேல, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News