Presidential Secretariat of Sri Lanka

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நாளை வடக்கில்…..

வட மாகாணத்தின் “கிராமத்துடன் கலந்துரையாடல்” முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெறும். போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகம் இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது “கிராமத்துடன் கலந்துரையாடல்” 17வது நிகழ்வாகும்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளை (03) முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்நிகழ்வில் மாவட்டத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

வவுனியா நகரில் இருந்து 38 கிலோ மீற்றர் தூரத்தில் கிழக்கு மற்றும் தெற்கில் அனுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவிற்கும் மேற்கில் நந்திமித்திர கிராமத்தையும் எல்லையாகக் கொண்டு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவு அமைந்துள்ளது. போகஸ்வெவ 1, போகஸ்வெவ 2, கம்பிலிவெவ, வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம் மற்றும் வெஹரதென்ன ஆகிய கிராமங்கள் இதில் அடங்குகின்றன. 478 குடும்பங்கள் வசிக்கின்ற வெடிவைத்தகல்லு கிராமத்தின் சனத்தொகை 1520 ஆகும். நெல், சேனைப் பயிர்ச் செய்கை இம்மக்களின் பிரதான வாழ்வாதாரமாகும்.

வெடிவைத்தகல்லு மற்றும் அதனை சூழவுள்ள கிராம மக்கள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் இதில் பிரதானமானவையாகும். 2010 ஆம் ஆண்டின் பின்னர் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள், வீடுகள், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படாமை, குடிநீர், பயிர்ச் செய்கைக்கான நீர் பற்றாக்குறை, விவசாய பிரச்சினைகளுடன் யானைகளின் அச்சுறுத்தலுக்கும் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வருகின்றனர். காணி உறுதி தொடர்பான பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்வது, குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைத்தல், போகஸ்வெவ வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல், உர களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணித்தல் போன்றவை கிராம மக்களின் ஏனைய வேண்டுகோள்களாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வை திட்டமிட்டதன் நோக்கம் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் தாமும் கிராமத்திற்கு சென்று மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக பிரச்சினைகளை அவதானித்து, அவற்றை கேட்டு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ஆகும். விவசாயத்தின் அடிப்படையிலான பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய முக்கியமான உறுதிமொழியாகும்.

தற்போது நாட்டின் மக்கள் தொகையில் 75 வீதமான கிராமிய மக்கள் நீண்டகாலமாக பல்வேறு பொருளாதார, சமூக பிரச்சினைகளுடனேயே வாழ்கின்றனர். காணி பற்றாக்குறை, சிக்கலற்ற காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமை, குடிநீர் மற்றும் பயிர்ச் செய்கைக்கான நீரை பெற்றுக்கொள்ள முடியாமை, வீதி மற்றும் போக்குவரத்து சிக்கல்கள், சுகாதார மற்றும் கல்வி பிரச்சினைகள், யானை மனித மோதல், அதிகாரிகளின் கவனயீனம் போன்றவை அவற்றில் முதன்மையானதாகும். கிராமிய மக்கள் தமது பிரச்சினைகளை இனங்கண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அப்பிரச்சினைகள் இந்நிகழ்வில் தீர்த்து வைக்கப்படும். உடனடியாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் பின்னர் கவனத்தில் எடுத்துக்கொள்ள குறித்து வைத்துக்கொள்ளப்படும்.

கிராமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒருதரப்பு நியாயங்களை மட்டும் கவனத்தில் கொண்டு புரிந்துகொள்வது தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை தாமதப்படுத்தும் என்பதே ஜனாதிபதி அவர்களின் கருத்தாகும். அதிகாரிகள் ஒரு முறையிலும் கிராமத்தினர் வேறு ஒரு முறையிலும் பிரச்சினையை காண்கின்றனர். பிரச்சினையின் எல்லா பக்கத்தையும் சரியாக இனங்கண்டு கொள்வதன்மூலம் தீர்வை பெற்றுக்கொடுப்பது இலகுவானதாகவும் உடனடியாக அத்தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை நடைபெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வுகளில் இவ்வாறே பல பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தது.

2020 செப்டெம்பர் 25ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகலை, காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

(English) Recent News

Most popular