Presidential Secretariat of Sri Lanka

க்லாஸ்கோ நகருக்கு ஜனாதிபதி சென்றடைந்தார்…

COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டு நேரப்படி இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அம்மையார், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்.
காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் நடைபெறும்.

நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

(English) Recent News