Presidential Secretariat of Sri Lanka

‘இராணுவத்தினருக்கு ஒழுக்கம் மிக முக்கியம்…’- 316 கெடெட் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் இதயமாகக் கருதப்படுகிறது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த ஜனாதிபதி அவர்கள், “எளிமையான பணிகளில்கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும். ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது” எனக் குறிப்பிட்டார்.

நீங்கள் ஒரு தலைவராக உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களே. சூப்பர் வீரர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான சாதாரண மக்களிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவது ஒரு தலைவரின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும். பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி எனவும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்விடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், இராணுவ நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், விடைபெற்றுச் செல்லும் அதிகாரிகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த 316 கெடெட் அதிகாரிகள் இன்று விடைபெற்று வெளியேறினர்.

இலங்கை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து 02 வருடங்களும் 09 மாத காலமும் “இராணுவ கல்வி இளங்கலைப் பட்டப் பாடநெறியை” தொடர்ந்த 73 பேரும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 150 பட்டதாரிகளும், 61 தொண்டர் கெடெட் அதிகாரிகளும், 15 பெண் தொண்டர் கெடெட் அதிகாரிகளும், சேம்பியா, மாலைதீவு மற்றும் ருவண்டா குடியரசுகளில் இருந்து வருகை தந்து பயிற்சிகளைப் பெற்ற 06 கெடெட் அதிகாரிகளும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பயிற்சிப் பெற்ற இலங்கை மாணவப் படை அதிகாரிகள் 05 பேரும் இதில் அடங்குவர்.

மகளிர் தொண்டர் கெடெட் அதிகாரி பாடநெறி எண். 17இல் முதலாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி திறன் விருது எச்.ஏ.டி.பிரபாஷ்வரி, தொண்டர் கெடெட் அதிகாரி பாடநெறி எண் 60இல் முதலாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி திறன் விருது மற்றும் அனைத்துப் அம்சங்களிலும் மிகவும் சிறந்த கெடெட் அதிகாரிக்கான கெளரவ வாள், ஏ.எம்.டி.டி.என். பெரேராவுக்கு கிடைக்கப்பெற்றது.

அத்துடன், பயிலிளவல் கெடெட் அதிகாரி பாடநெறி எண் 89 பீ – முதலாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி திறன் விருது ஆர்.டி.எல்.ஏ.சில்வா, பயிலிளவல் கெடெட் அதிகாரி பாடநெறி எண். 89 பீ – அனைத்து அம்சங்களிலும் அதிவிசேட கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ வாள் எச்.இ.ஏ.ரன்ஜுல, நிரந்தர கெடெட் அதிகாரி பாடநெறி 90இல் முதலாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி திறன் விருது மற்றும் அனைத்து அம்சங்களிலும் அதி விசேட கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ வாள் டி.ஆர்.சி.டி. பத்திநாயக்க, நிரந்தர கெடெட் அதிகாரி பாடநெறி இலக்கம் 89இல் முதலாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி திறன் விருது மற்றும் அனைத்து அம்சங்களிலும் அதி விசேட கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ வாள் டி.எம்.எம். ருக்ஷான், சிறந்த வெளிநாட்டு கெடெட் அதிகாரிக்கு வழங்கப்படும் கௌரவ பிரம்பை மாலைதீவைச் சேர்ந்த ஏ.ஆதம் ஆகியோரும் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றமைக்கு அடையாளமாக, மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி அவர்கள், குழுப் புகைப்படங்களுக்கும் தோற்றினார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஏனைய இராணுவத் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News