Presidential Secretariat of Sri Lanka

இரத்தினபுரி மாவட்டத்துக்கான ‘யத்திவர சுரக்ஷா’ புலமைப்பரிசில்களை ஜனாதிபதி வழங்கினார்…

  • சமன் விஹாரைக்கு வருகைதந்த மக்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கு மாணவர்களுக்கு, “யத்திவர சுரக்ஷா” புலமைப் பரிசில்களை சப்ரகமுவ மஹா சமன் விஹாரை புண்ணியஸ்தலத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) முற்பகல் வழங்கினார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்து, அதனைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அலுவலகத்தின் பௌத்த விவகாரப் பிரிவு, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

இதன் கீழ், பிள்ளைகளை பௌத்த சாசனத்துக்கு அர்ப்பணித்தல், பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் சுகாதாரக் காப்பீடு, பிக்கு மாணவர்களுக்கான நடைமுறை ரீதியிலான பௌத்தக் கல்விச் சான்றிதல் பாடநெறி, உளப்பாங்கு வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச மொழிப் பாடநெறிகளுக்கு உதவி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மொழிகள் பீடம், பிக்குகளுக்கு ஆங்கிலம், தமிழ், சீனமொழி, ஹிந்தி, ஜப்பான் மற்றும் ஜேர்மன் மொழிப் பாடநெறிகளைத் தொடர்வதற்கு சந்தர்ப்பம் வழங்குகிறது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்கவின் மேற்பார்வையில், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதனை அடையாளப்படுத்தும் வகையில், சர்வதேச மொழிகள் டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்கு தகுதி பெற்ற பதினொரு பிக்கு மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

இரத்தினபுரி மஹா சமன் விஹாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்களை, விஹாரையில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் வரவேற்றதுடன், அவர்களுடன் ஜனாதிபதி அவர்கள் உரையாடி நலன் விசாரித்தறிந்தார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணாயக்கார, பவித்ரா வன்னியாரச்சி, டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட, முதித்த. டி சொய்சா, அகில எல்லாவல, விஹாரையின் பஸ்நாயக்க நிலமே மிகார ஜயசுந்தர, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular