Presidential Secretariat of Sri Lanka

“நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்ல ஒன்றிணையுங்கள்…” “குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டுவதை நிறுத்துங்கள்…”

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டுவதை நிறுத்துங்கள்…”

9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி தெரிவிப்பு.

  • சவால்களுக்கு மத்தியிலும் அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டவில்லை
  • பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமையளித்தோம்
  • பாதாள உலகக் கோஷ்டி மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை முற்றாக இல்லாதொழிப்போம்
  • எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவிக்கிறேன்
  • அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, வடக்குகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
  • அரசியல் நோக்கங்களுக்காக வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த வேண்டாம்
  • உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க பாராளுமன்றத்தில் விவாதங்களை நடத்துங்கள்
  • வரலாற்றில் எதிர்கொண்ட அனைத்துச் சவால்களும் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன

நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்வதற்கு, பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியேயும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள், இனியேனும் அதனை நிறுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டேயில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (18) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதோடு, மரியாதை அணிவகுப்புகள், வாகன மற்றும் குதிரைப்படைத் தொடரணிகள் எவையும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வந்த ஜனாதிபதி அவர்களை, நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கல கீதம் இசைத்து வரவேற்றனர்.

தனது சிம்மாசன உரையை ஆற்றிய ஜனாதிபதி அவர்கள், “உலகப் பெருந்தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் கடினமான நேரத்தில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்ற வேண்டிய தேசிய பொறுப்பு, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது. 05 வருடக் காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில், உலகளாவிய தொற்றுப் பரவல் காரணமாகப் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது. இருப்பினும், அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்ற மறக்கவில்லை” என்றார்.

எவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படினும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை முதன்மையாகக் கருதி, அதற்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டுக்குள் பாரியளவில் வியாபித்திருந்த பாதாள  உலகக் கோஷ்டிகளை ஒழிக்க, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை எப்போதும் சர்வதேசச் சட்டங்களையும் மரபுகளையும் மதிக்கும் நாடாகும். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், எவ்வகையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இனவாதத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் கௌரவம் மற்றும் உரிமைகளைச் சமமாகப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் தேவையாக உள்ளதென்றும் கூறினார். எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் வசதிகளை வழங்குவதே நல்லிணக்கம் மற்றும் அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகக் கருதப்படுகிறது என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு அரசியல் நோக்கங்களைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச முதலீடுகள் தொடர்பில் தவறான விளக்கங்களைக் கொடுத்து, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் யாராவது செயற்பட்டால், அது இந்நாட்டுக்குச் செய்யும் பாதகச் செயலாகும். நாட்டின் அபிவிருத்திக்கு, புதிய முதலீடுகளின் தேவை தற்போது அதிகமாகவே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கான புதிய முதலீடுகளை ஈர்க்க, எதிர்காலத்தில் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அரச பல்கலைக்கழகங்களின் திறனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாட்டில் உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு இடமளிப்பது தொடர்பிலான  விவாதத்துக்கு, இந்தப் பாராளுமன்றத்துக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இந்த நாடு, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழும் மக்களுக்கே சொந்தமானது. நாங்கள் இந் நாட்டின் தற்கால பாதுகாவலர்கள் மட்டுமே. இன்று நாம் எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதிலேயே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாம் அனைவரும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

(ஜனாதிபதி அவர்கள், 9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் போது ஆற்றிய முழுமையான உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை

18.01.2022

 

2022 இல் உதித்த புத்தாண்டை முன்னிட்டு உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனநாயக ரீதியாக அதியுயர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் பல்வேறு அரசியல் கருத்துக்களினூடாக நாட்டு மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளீர்கள்.

இதனால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய மிகவும் விசேடமான ஓர் குழுவினராவீர்கள்.

உங்களைப் போன்று ஜனநாயக வழிமுறையினூடாக மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நானும் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காத மக்கள் தொடர்பாகவும் பொறுப்பு கூறும் கடமை எனக்கு உள்ளது.

எனவே, பாராளுமன்றத்திலும் அதன் வெளியிலும் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தனது கடமைப் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து வெற்றி பெறுவதற்கு எனக்கு உதவுமாறு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவால்களை எதிர்நோக்கிய காலகட்டமாக அமைந்தது. ஒட்டு மொத்தமான உலகையே ஒரேயடியாக தாக்கிய கொவிட் 19 உலகளாவிய தொற்று நோயை எம்மால் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த தொற்று நோய் காரணமாக உலகில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் அனைத்து நாடுகளும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கினர். சிறிய பொருளாதாரமொன்றைக் கொண்டுள்ள இலங்கையை அது கடுமையாக பாதித்தது. பல தடவைகள் நாட்டை முடக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கும் நேர்ந்தது. இதனால் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. நாட்டுக்கு அந்நிய செலவாணியை கொண்டு வந்த சுற்றுலாத்துறை, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆடை தொழில்துறை போன்ற முக்கிய துறைகள் அனைத்தும் இந்த தொற்று நோயினால் பெரும் இடையூறுகளை எதிர்நோக்கின. உலகளாவிய ரீதியிலான இத் தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டவிதிமுறைகளை அமுல்படுத்த நேர்ந்ததினால் பல தொழில் முயற்சிகள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுவோரின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டது. மக்களின் பொதுவான வாழ்க்கையும் பல தடைகளை எதிர்நோக்கியதனால் சமுதாயத்தில் உளரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டிருந்தன.

கொவிட் 19 உலகளாவிய ரீதியிலான தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பாரிய செலவுகளை மேற்கொண்டது. அடிக்கடி நாடு முடக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் வருமானங்களை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். உலகளாவிய ரீதியிலான இத் தொற்று நோய் காரணமாக வருமானங்களை இழந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் கடன் மீள் செலுத்தலை பிற்போடுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். குறைக்கப்பட்ட எந்தவொரு வரியையும் நாங்கள் மீண்டும் அதிகரிக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு எவற்றையும் நாங்கள் குறைக்கவில்லை.

எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கி அதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசு மேற்கொண்டது. நாடு முழுவதிலும் தனிமைப்படுத்தும் நிலையங்கள் மற்றும் சிகிச்சையளிப்பு நிலையங்கள் தாபிக்கப்பட்டதுடன், வைத்தியசாலைகளுக்குப் புதிதாக 35,000 ற்கும் அதிகமான படுக்கைகளை வழங்கினோம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான உணவு நிவராண பொதிகளை வழங்கினோம்.

கொவிட் 19 உலகளாவிய ரீதியிலான இத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே ஒரு வழி தடுப்பு ஊசி வழங்குவதே என்பதை நாம் புரிந்து கொண்டோம். அதன்படி பாரிய செலவுகளை மேற்கொண்டு நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்று 16 வயதிற்கு மேற்பட்டோருக்கு அந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். தற்போது இந்த உலகளாவிய ரீதியிலான தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாங்கள் ஒரு திருப்திகரமான நிலையில் உள்ளோம்.

இலக்கு வைக்கப்பட்ட சனத்தொகையில் 85% வீதத்தினருக்கும் அதிகமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கி இந்த நோயைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது. தற்போது அனைத்து மக்களையும் இலக்காகக் கொண்டு மூன்றாவது பூஸ்ட்டர் தடுப்பூசியையும் வழங்கி வருகின்றோம்.

இந்த உயர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றது. எனினும், நாங்கள் அனைவரும் நாட்டின் நன்மையையே பிரார்த்திக்கின்றோம். உலகளாவிய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படும் பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவருக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பினை நிறைவேற்ற எம்முடன் இணைந்து செயற்படுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

குறுகிய கால பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதுடன், எமது அடிப்படை கடமைப் பொறுப்பு எங்களால் நாட்டு மக்களுக்கு முன்வைக்கப்பட்ட பெரும்பாலான மக்களினால் அனுமதிக்கப்பட்ட நீண்டகால அடிப்படையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இடையறாது முன்னெடுத்தலாகும். இதன் அடிப்படையிலேயே நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி தங்கியுள்ளது. இதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது முன்னுரிமை கடமைப் பொறுப்புக்களை மறந்துவிடக் கூடாது.

நாங்கள் ஈராண்டுக்குள் ஒரு குறிப்பிடத்தக்களவிலான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களுக்கு உறுதியளித்து இருந்தோம். எனினும், முதல் ஈராண்டுகளில் உலகளாவிய தொற்று நோயினால் பாரிய இடையூறு ஏற்பட்டது. எனினும் எமது கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதை நாங்கள் மறக்கவும் இல்லை, தட்டிக் கழிக்கவும் இல்லை.

2019ஆம் ஆண்டில் நான் ஜனாதிபதியாக நியமிக்கப்படும் போது மக்களுக்கு இருந்த அடிப்படை பிரச்சினை தேசிய பாதுகாப்பு என்பதை பலர் இன்று மறந்து விட்டனர். தற்போது நாங்கள் நாட்டின் பாதுகாப்பினை உறுதிபடுத்தியுள்ளோம். இன்று மக்கள் மத்தியில் பயங்கரவாதம் தொடர்பான அச்சம் கிடையாது.

பாதாள உலகக் கோஷ்டியின் நடவடிக்கைகள் அன்று பாரியளவில் வியாபித்து இருந்தது. சிறைச்சாலை பஸ் வண்டிகள் மீது துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட ஒரு யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். வீதியில் பயணித்த பொதுமக்கள் பாதாள உலக கோஷ்டியினரின் மோதல்களில் சிக்கி உயிரிழந்த யுகத்தையும் நாம் கடந்து வந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இந்த நிலைமையை மாற்றியமைத்துள்ளது.

போதைப்பொருள் தொல்லை அன்று பாரிய ஒரு பிரச்சினையாக இருந்தது. நாட்டின் இளைஞர்கள் பாரியளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு இருந்தனர். வெளிநாடுகளுக்கு கூட போதைப்பொருட்களை வழங்கும் கோஷ்டிகள் இலங்கையில் உருவாகி எமது நாடு சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர நிலையமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுத்தோம். எமது பாதுகாப்பு படையினர், புலனாய்வுப் பிரிவினர் துல்லியமாக செயற்பட்டு இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். போதைப்பொருள் தொல்லையை முற்றாக ஒழிப்பதற்கு நாங்கள் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அயல்நாடுகளின் புலனாய்வு துறையினரும் எமக்குத் தேவையான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பொலிசாருக்கு பாரிய பொறுப்புள்ளது. மக்களுக்கு அச்சம், பீதி இல்லாமல் வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதற்கு பொலிசார் தொடர்ச்சியாக மக்களது பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காக நாங்கள் பொலிஸ் துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்.

எந்தவொரு பகுதியில் வாழும் மக்களுக்கும் பொலிஸ் நிலையங்களிலிருந்து சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு முழுவதிலும் சுமார் நூற்றிற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்களை நாங்கள் புதிதாக நிறுவியுள்ளோம். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான வாகன வசதிகளையும் வழங்கியுள்ளோம். அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துள்ளதுடன், பயிற்சிகள், செயலமர்வுகள் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் அறிவு மற்றும் சிந்தனை ரீதியிலான மாற்றங்களைச் செய்துள்ளோம்.

செயலிழந்த நிலையில் காணப்பட்ட சூழல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினை நாங்கள் மீண்டும் வழுவடையச் செய்துள்ளோம். பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையேயான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் வகையில் மக்கள் பாதுகாப்பு கடமைகளில் பொதுமக்களின் பங்களிப்பினையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சமுதாய பொலிஸ் இராஜாங்க அமைச்சினையும் தாபித்துள்ளோம்.

நாங்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றை மதிக்கும் ஓர் நாடாக விளங்குகின்றோம். கடந்த காலங்களில் எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லப்பட்ட தவறான கருத்துக்களை சீர்செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு விதத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு எமது அரசு உடந்தையாகவிருக்கவில்லை. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் அங்கீகரிப்பதும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் வாழும் அனைத்துச் சமூகங்களும் பயங்கரவாதம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. 2009ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, நாட்டில் மீண்டும் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த கடந்த கால ஞாபகங்களை ஒருபுறம் வைத்து அனைத்து சமூகங்களும் சமாதானத்துடனும், சகவாழ்வுடனும் வாழக்கூடிய பாதுகாப்பான நாடொன்றை உருவாக்குவது எமது நோக்கமாகும். இதற்காக அனைவரும் இன, மத, அரசியல் வேறுபாடுகளின்றி ஒன்றிணைதல் வேண்டும்.

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளோம்.

யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக கையேற்கப்பட்டிருந்த காணிகளில் 90% வீதமானவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ஆரம்பித்திருந்தேன். அந்த பிரதேசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அமைதியான சூழலொன்றை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளதனால் எதிர்வரும் நாட்களில் மீதியாகவுள்ள காணிகளையும் விடுவிக்க எங்களுக்கு இயலும்.

யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றோம். நாட்டில் வாழும் அனைத்து பிரசைகளும் கௌரவத்துடன் வாழ்வதற்கும் அவர்களது அனைத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனால் குறுகிய அரசியல் நோக்கங்கள் அடிப்படையில் மக்களை ஒருவர் மீது ஒருவரை ஏவி விடுவதை தற்போதாவது நிறுத்துமாறு, அவ்வாறான அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுகின்றோம்.

நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் சிலருக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நான் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுத்திருந்தேன். அதேபோன்று 1978ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் அதற்கான திருத்தங்களை கொண்டு வர நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் தொடர்பாக நியாயமான பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள ஓர் நாடாகும். வல்லரசுகளுக்கிடையிலான மோதல்களில் சிக்குவதற்கு எமக்கு எத்தகைய தேவையும் கிடையாது. நாங்கள் எமது அயலவர்களை கௌரவிப்பதுடன், அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவது எமது கொள்கையாகும்.

யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது. சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள், சுய தொழில்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள், மக்களுக்கு சுத்தமான குடிநீர், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன வசதிகள், வாழ்வதற்குத் தேவையான வீடுகள், வைத்தியசாலைகள், நெடுஞ்சாலைகள் உட்பட மேலும் பல அடிப்படை வசதிகள் அவர்களுக்குத் தேவையாகவிருந்தது. அனைத்து சமூகத்தினருக்கும் எத்தகைய பராபட்சமுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவது நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பது அரசின் கொள்கையாகும்.

இதனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளிடம் நான் ஓர் வேண்டுகோளை விடுகின்றேன். பல்வேறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.

ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக சட்டத்தின் ஆதிக்கமும் வெளிப்படைத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கடும் நம்பிக்கையாகும். சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குவதை நாங்கள் பலப்படுத்தல் வேண்டும். நான் ஜனாதிபதியானதன் பின்னர் நீதித்துறையிலும், சட்டமாஅதிபர் திணைக்களத்திலும் இடம்பெறும் நியமனங்கள் தொடர்பாக எத்தகைய அரசியல் தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றத்துறையில் அனைத்து உத்தியோகத்தர்களும் திறமை மற்றும் சேவைமுதிர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக எனது அரசு தனது அர்ப்பணிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அனைவருக்கும் நீதி, நியாயம் வழங்கக் கூடிய மக்களுக்கு சுமையில்லாத ஒரு செயற்றிறன்மிக்க நீதித்துறை ஒன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றது. எனினும் தற்போது நீதித்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது. அரசியல் யாப்பில் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக பல மனுக்கள் கூட சில சந்தர்ப்பங்களில் பத்து வருடங்களுக்குள்ளாவது விசாரித்து நிறைவு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் உள்ளன. சிறுவர்கள் மீது குற்றம் இழைப்பவர்களுக்கு தண்டனை வழங்க பல வருடங்கள் எடுக்கின்றன. காணிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் பெரும்பாலும் ஒரு பரம்பரையை தாண்டிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் சட்டம் மற்றும் அதன் நடைமுறை தொடர்பாக மக்கள் மத்தியில்  நம்பிக்கையீனம் ஏற்பட்டிருப்பது ஓர் ஆச்சரியமான விடயமல்ல.

சட்டத்தின் தாமதம் காரணமாக பல இன்னல்களை அனுபவிக்கும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதோடு, முதலீட்டு கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்குத் தேவையான சட்டரீதியான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை பல அரசுகள் உணர்ந்திருந்த போதிலும் அவை தொடர்பான சட்ட மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முன்னர் ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

எனினும் எனது அரசு ஆட்சிபீடமேறியதன் பின்னர் சட்டத்துறையில் காணப்படும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிகவும் நம்பிக்கையான முறையில், செயற்றிறன் மிக்க வகையில் நீதி, நியாயம் வழங்கும் செயற்பாட்டு முறையொன்றை தாபிப்பதற்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீதிமன்றங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும், காலம் கடந்த சட்டதிட்டங்களை இற்றைப்படுத்துவதற்கும், டிஜிட்டல் மயமாக்கும் நிறுவனங்களுக்கிடையிலான செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், ஐந்தாண்டு திட்டத்தினூடாக பல விசேட மாற்றங்களைச் செய்துள்ளோம்.

பல வருடங்களாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆரம்பிக்க முடியாதிருந்த அனைத்து சட்டத்துறை பிரிவுகளையும் ஓரே கூரையின் கீழ் கொண்டு வரும் ‘அதிகரன பியச’ வேலைத்திட்டத்தையும், நீதித்துறை கட்டமைப்பினை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான திட்டங்களையும் நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். 2022ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமான நீதித்துறை கட்டமைப்பினை உள்வாங்கும் வகையில் இந்த டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை விஸ்தரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நாற்பத்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஏனைய நீதிமன்றங்களிலும் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்துள்ளோம்.

சட்டத்துறையில் காணப்படும் தாமதங்களுக்குத் தீர்வாக புதிதாக சிறு உரிமைகளுக்கான நீதிமன்றங்கள் மற்றும் முதலீட்டு நீதிமன்றங்களைத் தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பணச்செலவுகளை மேற்கொண்டு நீதிமன்றங்களை நாடிச்செல்வது இலகுவான காரியமல்ல. இதனால் சிறு வழக்குகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் மாற்று வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி காணிகள் மற்றும் நிதி தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு விசேட இணக்கச்சபைகளை தாபிப்பதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம். 2022ஆம் ஆண்டில் விசேட இணக்கச்சபைகளை நிறுவவுள்ளோம். அதேபோன்று கொழும்புக்கு வரையறுக்கப்பட்டிருந்த கடன் நிவாரண சபைகளை முறையாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதற்கும் அதற்கு முன்னோடியாக காலி, கம்பஹா, குருநாகல் ஆகிய பிரதேசங்களில் அவற்றை ஆரம்பிப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

இதற்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், அரச இரசாயன பகுப்பாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களில் ஆளணியினரின் எண்ணிக்கையை அதிகரித்து நீதித்துறையை மிகவும் செயற்றிறனுடன் இயங்க வைக்கக் கூடிய வகையில் அவற்றின் ஆற்றலை விருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றவியல் கட்டளைச் சட்டம், சிவில் வழக்குகள் தொடர்பான கட்டளைச் சட்டம், வர்த்தக கட்டளைச் சட்டம் ஆகிய துறைகளில் மிகவும் பரந்தளவிலான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதன் ஊடாக இதுவரை 98ற்கும் அதிகமான சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்துள்ளோம்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கையை சர்வதேச அங்கீகாரம் உள்ள பெரிதும் கவனத்தை ஈர்க்கக் கூடிய கேந்திர நிலையமாக மாற்ற தேவையான சட்ட பின்புலத்தை நாங்கள் உருவாக்கி வருகின்றோம்.

1994ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து விரிவான முறையில் மக்களின் கருத்தைப் பெற்று மக்கள் சார்பான அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனை குழுவொன்றை நியமித்துள்ளேன்.

இந்தக் குழுவின் முன்மொழிவுகள் அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்படுவதற்கும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் நான் எதிர்பார்க்கின்றேன்.

துரிதமான மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அதனால் உலகளாவிய ரீதியிலான தொற்று நோய் பின்னணியிலும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம். ஒரு மில்லியன் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம், நகர அபிவிருத்தித் திட்டம், கிராமபுற வீடுகள் மற்றும் நகர்புற தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், ஐயாயிரம் பாலங்களை அமைக்கும் திட்டம், 14,000 குளங்களை அபிவிருத்திச் செய்யும் திட்டம், நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை முன்னெடுத்து வருவதுடன், நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீரினை வழங்கும் திட்டம், துரித இன்டர்நெட் வசதிகளை நாடு முழுவதிலும் விஸ்தரித்தல், வெள்ளப் பெருக்கினை கட்டுப்படுத்தல் மற்றும் கிராமங்கள் உட்பட கைத்தொழில் நகரங்களை உருவாக்கும் திட்டம் என்பவற்றை நாங்கள் எதிர்பார்த்தவாறு தொடர்ந்தும் நடைமுறைபடுத்தி வருகின்றோம். இந்தப் பணிகள் கட்டம் கட்டமாக பூர்த்தியடையும் போது, மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் உடன்பட்ட விதத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணித்தலை நாங்கள் கடந்த வாரம் ஆரம்பித்தோம். மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும். 2024 மற்றும் 2025ஆம் வருடங்களில் இக்கருத்திட்டம் முடிவடையும் போது, கொழும்புத் துறைமுகத்தின் கொள்ளளவு இருமடங்காகி உலகத்தில் அதிவேலை மிகுந்த துறைமுகங்கள் 15ற்குள் எங்களால் இணைய முடியும்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சுற்றுலா பயணிகள் மீண்டும் வருகிறார்கள். ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி காணப்படுகின்றது. ஆனால் மேலும் பல சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவற்றைக் வெற்றிகொள்வதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வை வழங்குவது அவசியமாகவுள்ளது.

இவ்வாறான குறுகிய கால தீர்வாகத்தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கிராமீய வாழ்வாதார மேம்பட்டு நடவடிக்கைகளுக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ஏராளமான சுயதொழில் செய்பவர்களுக்கு உதவ அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இன்று மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை நாம் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். எனவே, 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே மக்களுக்காக 229 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும் பொருளாதார சவால்கள் மத்தியிலும், அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து செயற்படுவதால் இந்த நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எங்கள் அரசு இலவசமாக உரம் வழங்கி வருகிறது.

நெல்லுக்கு 50 ரூபாய் உத்தரவாத விலை நிர்ணயம் செய்தோம். அரசு 50 ரூபாய் கொடுத்தபோது, தனியார் துறையினர் விவசாயிகளுக்கு மேலும் அதிகமான விலையை கொடுத்தனர். சில சந்தர்ப்பங்களில் அரசாங்கம் எடுத்த அந்த முடிவால்தான் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்க முடிந்தது. இதனை இன்று விவசாய சமூகத்தில் ஒரு பிரிவினர் மறந்திருப்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் பாசிப்பயறு, கௌபீ, மஞ்சள், இஞ்சி போன்ற 16 பயிர் வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தினேன். இன்று விவசாய சமூகம் அதன் பலனை அனுபவித்து வருகிறது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கின்றது. அதேபோன்று, தேயிலை, தேங்காய், இறப்பர் போன்றவற்றுக்கு சமீப காலத்தில் சிறந்த விலை கிடைத்தது. இதற்கு நாம் மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானங்களே காரணம். இன்று மஞ்சள் விளைச்சலில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மீள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் மிளகு, கறுவா, பாக்கு போன்ற பயிர்களின் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அதேபோன்று வெற்றிலைக்கு இன்று நல்ல விலை கிடைக்கிறது.

கடந்த காலத்தில் இந்த நாட்டிற்கு எத்தனோல் இறக்குமதி செய்வது தொடர்பாக பெரும் எதிர்ப்பு நிலவியது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எத்தனோல் இறக்குமதியை முற்றிலும் தடை செய்தோம். அதன் காரணமாக இன்று சீனி உற்பத்தி ஆலைகள் இலாபம் ஈட்டி வருகின்றன. அதேபோன்று கரும்பு விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கின்றது.

இன்று பால் பண்ணையாளர்களுக்கும் நல்ல சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனங்களின் இலாபம் அதிகரித்துள்ளது.

நச்சுத்தன்மையற்ற பசுமை விவசாயத்திற்காக நாங்கள் எடுத்த கொள்கையை செயற்படுத்தும் போது, சில சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. எமது நோக்கம் மற்றும் திட்டம் தொடர்பாக சரியாக அறிவூட்டப்படாமையினாலும், திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட சில நடைமுறை சிக்கல்கள் அரசியல் மயமாக்கப்பட்டதாலும் இது தொடர்பாக தவறான புரிதல் ஏற்பட்டது. பசுமை விவசாயம் தொடர்பான பரந்த கருத்து பரப்பெல்லை சில நேரங்களில் சேதன பசளை என பொறுப்பானவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமை தவறான கருத்துக்கள் மக்கள் மயமாகுவதற்கு வழிவகுத்தது. அதற்கேற்ப சில முடிவுகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் அவற்றில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால், பசுமை விவசாயம் தொடர்பான நமது அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, குறைபாடுகளை நிவர்த்தி செய்து இக்கொள்கைகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னோக்கி கொண்டு செல்ல நாம் எதிர்பார்க்கின்றோம். விவசாயத்தில் அதிக உற்பத்தித்திறனை அடைய நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதும், உயிரின பசளை  பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் நச்சுத்தன்மையற்ற விவசாய உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை உருவாக்குவது எங்கள் இறுதி இலக்காகும். அதனூடாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் அதனை சார்ந்த சேவைகளை வழங்கும் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு வலுவான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்.

2022 என்பது உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பல முடிவுகளை எடுக்க வேண்டிய ஆண்டாகும். இதில், உள்ளூர் உற்பத்தி இயலளவை அதிகரிப்பதற்கான துரிதமான செயல்திட்டமொன்றின் தேவை முக்கியமாக மேலெழுகின்றது. நாட்டில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு சேற்று மற்றும் மேட்டு நிலத்தையும் பயன்படுத்திக்கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து விவசாய புரட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்காக பல நீர்ப்பாசன வசதிகள் அபிவிருத்தி மற்றும் குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை எமக்கு வலுவூட்டலாக அமைகின்றது. கடந்த காலங்களில் சுவர்களில் ஓவியம் வரைந்துகொண்டு, பாழடைந்த வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்டு முன்வந்த நாட்டை நேசிக்கும் இளைஞர் சமுதாயமும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்று குறிப்பாக எதிர்பார்க்கின்றேன்.

எமது ‘வாரி சௌபாக்யா’ திட்டத்தின் கீழ் மக்களுக்கு வசதியளிக்கக் கூடிய  பல பாரிய அளவிலான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

120 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை தேசிய மின்சார வலையமைப்புக்கு வழங்கும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதற்கு இணையாக அலிகொட்ட ஆர, ஹந்தபானகல மற்றும் குடா ஓய சேமிப்பு நீர்த்தேக்கங்கள் மற்றும் அதனால் போஷிக்கப்படும் 300 குளங்களை அபிவிருத்தி செய்தல்.

மொனராகலை மாவட்டத்தின் வரண்ட பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வழங்கும் கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்டம்.

மன்னார் மாவட்டத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வழங்கும் பஹல மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம்.

வடமேல் மாகாணத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வழங்கும் வயம்ப மகாஎல கால்வாய் திட்டம்.

வடமத்திய மாகாணத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வழங்குவதற்கான வட மத்திய பிரதான கால்வாய் திட்டம்.

கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டம்.

ஊவா மாகாணத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்கும் தல்பிட்டிகல நீர்த்தேக்கத் திட்டம்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் மஹாஓயா பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்கும் முந்தேணி ஆறு திட்டம்

யாழ் குடாநாட்டில் நிலவும் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக ‘யாழ்ப்பாணத்துக்கு ஓர் நதி’ திட்டத்தின் கீழ் புதிய நன்னீர் தடாகங்களை அபிவிருத்தி செய்தல்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வுகளை வழங்கும் அதே நேரம் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் நில்வலா நதி அபிவிருத்தித் திட்டம்.

மினிபே மஹா எல புனரமைப்புத் திட்டம், மாதுரு ஓயா தென்கரை அபிவிருத்தித் திட்டம் மற்றும் மகாவலி ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டம்

நாடு முழுவதும் சிறிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் 5000 மற்றும் 52 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாய சமூகத்தின் உண்மையான தேவைகளை கண்டறிந்த, விவசாயத்தை மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 பாரிய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களை எனது பதவிக்காலத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளேன்.

பொருளாதார முகாமைத்துவதில் இன்று நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவால் தற்போதைய அந்நியச் செலாவணி பிரச்சினையாகும். காலகாலமாக பல அரசாங்கங்கள் நிரந்தரத் தீர்வை வழங்கத் தவறிய பிரச்சினையின் உச்சத்தில் இன்று நாம் இருக்கிறோம்.

2019ஆம் ஆண்டு நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே. அதன் ஒரு பகுதி குறுகிய கால கடன்களாகும்.

அதற்குள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு 06 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. அதுவரை இருந்த சகல அரசாங்கங்களும் அவ்வப்போது வாங்கிய கடன்களையே அவ்வாறு திருப்பி செலுத்த வேண்டியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், நமது செலவினங்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், எதிர்காலத்தில் அந்நியச் செலாவணி பிரச்சனை ஏற்படும் என்பதை நாம் ஏற்கனவே புரிந்துகொண்டிருந்தோம். அதனால்தான் வாகனங்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது, பல்வேறு அத்தியாவசியமற்ற இறக்குமதிப் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவது போன்ற மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக மொத்த இறக்குமதி செலவினத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக, நாட்டின் சராசரி ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 08 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்த பற்றாக்குறை சுற்றுலாத்துறையின் வருவாய் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் என்பவற்றின் மூலம் ஈட்டப்பட்ட அந்நிய செலாவணி மூலமே ஈடு செய்யப்பட்டது.

இவற்றில், சுற்றுலாத் துறையின் மீது எமக்கு அதிக நம்பிக்கை இருந்தது. சில ஆண்டுகளுக்குள் சுற்றுலாத்துறையின் வருவாயை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் டிசம்பர் 2019இல் ஆரம்பித்த கொவிட் 19 உலகளாவிய தொற்றுநோய் காரணமாக  உலகளாவிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. இதனால், சுற்றுலா மூலம் 2020 மற்றும் 2021ல் நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 4.5 பில்லியன் டொலர் வருவாயை நாம் இழக்க நேரிட்டது.

உலகளாவிய ரீதியிலான கொவிட் தொற்றுநோய் காரணமாக சுமார் 200,000 வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் வேலையை விட்டு நாடு திரும்பியதன் காரணமாக ஒவ்வொரு மாதமும்  அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் பெருந்தொகையை நாங்கள் இழந்தோம்.

தொடர்ந்து நாடு முடக்கப்பட்டமையினால், புதிய வெளிநாட்டு முதலீடுகளை எம்மால் ஈர்க்க முடியவில்லை.

எம்மையும் மீறி நடந்த இந்த தவிர்க்க முடியாத செயல்பாட்டினால் தான் நமது கையிருப்பு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்து பொருட்களை இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகியது.

கையிருப்பை அதிகரிக்காமல் நமது இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.

நீண்டகால அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட, புத்தாக்கம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், மதிப்பு சேர்த்தல் போன்ற முறைகள் மூலம் நமது ஏற்றுமதித் துறையில் பெரும் முன்னேற்றத்தை கட்டாயமாக நாம் ஏற்படுத்த வேண்டும். அதே போன்று, வெளிநாட்டு செலாவணியை ஈர்க்கும் சுற்றுலாத்துறை, வெளிநாடுகளுக்கு பயிற்சிபெற்ற தொழிலாளர்களை அனுப்புதல், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றம் காண வேண்டும். இவை அனைத்தும் எமது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தற்போது அவற்றை செயல்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்.

சிறிய நாடான நம் நாட்டில் அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய இயற்கை வளங்கள் மிகக் குறைவாகும். எம்மிடம் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்ற வளங்கள் இல்லை. இன்று உலகில் இயற்கை வளங்கள் இல்லாத முன்னேற்றமடைந்த நாடுகள் அனைத்தும் அந்நிய நாட்டு முதலீடுகளையே தீர்வாகத் தேர்ந்தெடுத்துள்ளன. ஏற்றுமதி தொழில்களை மேம்படுத்தவும், புதிய வேலைகளை உருவாக்கவும் மற்றும் உள்நாட்டு தொழில்களை ஆதரிக்கவும் அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பயன்படுத்தினர்.

தவறான விளக்கங்கள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த, முற்றிலும் அரசியல் நோக்கத்திற்காக யாராவது செயல்பட்டால் அவர்கள் நாட்டிற்கு செய்வது நன்மையல்ல.

இந்த நேரத்தில் நமது நாட்டின் அபிவிருத்திக்கான முதலீட்டின் தேவை தீவிரமாக உள்ளது. எனவே, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் புதிய முதலீட்டை ஈர்க்க எதிர்காலத்தில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை உள்நாட்டு முதலீடுகளா அல்லது வெளிநாட்டு முதலீடுகளா என்பது முக்கியமல்ல, அவை நாட்டின் நலனுக்கானதா என்பது மாத்திரமே முக்கியம்.

வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உள்ளது. தற்போது நாட்டின் பெரும்பாலான வேலைவாய்ப்புத் தேவைகள் சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் தொழில்துறைகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. எனவே, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள உள்ளூர் தொழில் முனைவோரின் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டுதலுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும். அதனால், வர்த்தக சமூகத்தின் தேவைகளை நாங்கள் புரிந்துகொண்டு அவர்களை ஊக்குவிக்க எங்களால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

எமது வருடாந்த இறக்குமதி செலவினத்தில் 20% எண்ணெய் இறக்குமதிக்காக ஒதுக்கப்படுகிறது. மொத்த ஏற்றுமதி வருமானம் ஒரு மாதத்திற்கு 1,000 மில்லியன் டொலர்களுக்கும் குறைவாக இருக்கும்போது, எண்ணெய்க்காக மாத்திரம் ஒரு மாதத்திற்கு சுமார் 350 மில்லியன் செலவழிக்க வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70% வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மின்சார உற்பத்திக்கு சுமார் 21% பயன்படுத்தப்படுகின்றது. தொழில்துறைக்கு 4% மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கும்போது மின்சாரத்தினால் இயங்கும்  வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க எதிர்பார்க்கின்றோம். அதன்படி, வாகனங்களுக்கு மின்சாரம் வழங்குவதில் இயன்றளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை பயன்படுத்த திட்டமிட வேண்டும்.

இலங்கையில் தொழிற்துறைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை அதிக எரிசக்தி செலவாகும். அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட வேண்டும். ஆனால் எமக்கு  ஆறுகள், அருவிகள் உள்ளன, நாட்டை சுற்றிலும் கடல் உள்ளது, ஏராளமான காற்று மற்றும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி உள்ளது. இதனால்தான் எமது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 70% எரிசக்தி தேவையை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யும் இலக்கை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பல திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம், காற்றாலை மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உள்ளூர் மின்சார வலையமைப்புக்கு கவனத்திற்கொள்ளக்கூடிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கொள்ளளவை சேர்க்க முடிந்தது.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தம்பபன்னி காற்றாலை மின் நிலையத்தின் திறன் தற்போது சுமார் 100 மெகாவாட் அளவில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது, இந்த ஆண்டு மேலும் 50 மெகாவாட்டால் அது அதிகரிக்கப்படும். இதற்கு மேலதிகமாக, ‘கிராமத்துக்கு ஒரு வலுசக்தி நிலையம்’ திட்டத்தின் கீழ் உள்ளூர் முதலீட்டாளர்கள் மூலம் கிராம அளவில் 100 கிலோவாட் திறன் கொண்ட 7000 சிறிய சூரிய மின் நிலையங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதில், 560 மெகாவாட், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்சார வலையமைப்பில் சேர்க்கப்படும். அதேபோன்று கடந்த ஆண்டு இந்திய குடியரசுடன் கைச்சாத்திடப்பட்ட ரூபா 2000 கோடி கடன் வசதி மூலம் அரச அலுவலகங்களின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (Rooftop Solar Panels) பொருத்தும் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

120 மெகாவாட் உமா ஓயா மற்றும் 35 மெகாவாட் பிராட்லேண்ட்ஸ் நீர் மின் நிலையங்களின் கட்டுமாணப் பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன. மொரகொல்ல நீர் மின் நிலைய கட்டுமாண பணிகளை 2023ஆம் ஆண்டு பூர்த்திச் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

2050க்குள் கார்பன் பூச்சிய இலக்கை அடைவது எமது இலக்காகும். உலகளாவிய நிலக்கரி அல்லாத எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை ஏற்கனவே இணைத் தலைவராக உள்ளது. எக்காரணம் கொண்டும் இனி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம்.

தேசியக் கொள்கைகளை வகுப்பதில் கல்விக்கு மிக முக்கிய இடமளிக்க வேண்டுமென நான் எப்போதும் கூறி வருகிறேன்.

உலகத்தரம் வாய்ந்த புதிய கல்வி முறையொன்றே எமக்குத் தேவை. இந்த நோக்கத்திற்காக, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். இதுவரை 379 ஆக இருந்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிப்பதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் பாடசாலை அபிவிருத்திக்காக பாரியளவிலான நிதியை ஒதுக்கியுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில், பாடசாலைகள் இடையே உள்ள இடைவெளியை குறைக்க, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.

புதிய உலகில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் கண்டறிந்துள்ளோம். எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய பிரிவுகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக மாணவர்கள் என்ன பாடதிட்டங்களை பயின்றாலும், அவர்கள் எல்லோருக்கும் தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் தொழில் முனைவு தொடர்பான அறிவை வழங்கும் பாடத்திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு சீர்த்திருத்தங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உயர்தரம் சித்திபெறும் ஒவ்வொரு பிள்ளைக்கும் பல்கலைக்கழகத்திற்கு உள்நுழையும் உரிமையை நாம் அன்று வழியுறுத்தினோம். அதன்வண்ணம் சகல பல்கலைக்கழகங்களினதும் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த வசதியுள்ள 10 மாவட்டங்கள் உள்ளடங்கும் விதத்தில் 10 நகர பல்கலைக்கழகங்களை  (CITY UNIVERSITIES) புதிதாக ஆரம்பிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இச் சீர்திருத்தங்களினூடாக தற்போது பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35% வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்வண்ணம் இதற்கு முன்னதாக உள்வாங்கப்பட்ட 30,000 அளவிலான மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேலதிகமாக புதிதாக 10,000 மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு கடந்த வருடம் எங்களால் முடிந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழாமை 500 ஆல் அதிகரிக்கச்செய்து அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் நலன்புரி வசதிகளை அதிகரிக்கச் செய்வதற்கு தேவையான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக திறந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பட்டத்திற்காக புதிதாக 10000 மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இம் மாணவர்களுக்கு ஆரம்ப வருடத்திலிருந்தே தொழிலொன்றில் ஈடுபட்டுக்கொண்டு கல்வியை பெற்றுக்கொள்ளக் கூடிய வண்ணம் பாடநெறிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அது எவ்வாறாயினும், இன்னும் வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்கும் குறைந்த அளவினையே அரச பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு இயன்றுள்ளது. இந் நிலைமையின்கீழ் வருடாந்தம் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஒப்பீட்டளவில் உயர்தரம் சித்தியடையும் சகல மாணவர்களுக்கும் கூடிய தரத்திலான பல்கலைக்கழக கல்வியொன்றை அரசாங்கத்தால் மட்டும் பெற்றுக் கொடுப்பது மேலும் யதார்த்தமாகாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகமொன்றுக்கு உள்வாங்கப்படுவதற்கு தகைமை இருந்தாலும், அதற்காக அரச பல்கலைக்கழக தொகுப்பினுள் போதுமான இடவசதி இல்லாமையும், பணத்தை செலவு செய்தேனும் உயர் கல்வியை பெறுவதற்கு இந் நாட்டினுள் வாய்ப்பு இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் விரக்திக்கு உள்ளாகின்றார்கள். ஏதேனும் வசதியுள்ளவர்கள் தாய், தந்தையரின் காணி நிலங்களை விற்றேனும் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு செல்கின்றார்கள். ஏனையோர்கள் நிர்க்கதிக்குள்ளாகின்றார்கள்.

எமது பிள்ளைகளின் கல்விக்காக பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு மாறாக உயர்ந்த தரத்தினுடனான பல்கலைக்கழக தொகுப்பொன்றினூடாக வெளிநாட்டு மாணவர்களையும் கூட இலங்கைக்குள் ஈர்ப்பதற்குள்ள சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துள்ளோம்.

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அதிகமான பல்கலைக்கழகங்கள் இலாபம் ஈட்டாத நிறுவனங்களாக செயற்படுகின்ற அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களாகும். அப் பல்கலைக்கழகங்கள் சகலவற்றிலும் திறமைவாய்ந்த மாணவர்களுக்கு இலவசமாக கல்வி பெறுவதற்கு வசதிகள் வழங்கப்படுகின்றது. உலகில் அதிகமான நாடுகளுக்கு பொதுவான இந்த முன்மாதிரியானது எமது நாட்டில் செயற்படுவதில்லை.

எமது நாட்டினுள்ளும் பல்கலைக்கழக கல்விக்காக மிகவும் சுதந்திரமான சூழலை ஏற்படுத்தினால் சர்வதேச தர மட்டத்திலான உலக அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களை இலங்கைக்கு ஈர்த்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும். அதனூடாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பினுள் கொள்ளளவினை அதிகரிக்கச் செய்து அதிகளவிலானோருக்கு உயர் கல்வி சந்தர்ப்ப வாய்ப்பை வழங்க முடியும்

இவ் வாய்ப்பினை நாட்டின் பிள்ளைகளுக்கு வழங்காதிருக்க பாரம்பரிய அரசியல்வாத சித்தார்த்தங்களைத் தவிர வேறு எந்தவித காரணிகளும் இல்லை. இதை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டின் சட்ட கட்டமைப்பினை மாற்ற வேண்டுமாயின் அதனை பாராளுமன்றத்தினால் மட்டுமே மேற்கொள்ள முடியும்

ஆகையினால் அரச பல்கலைக்கழக கொள்ளளவினை அதிகரிக்கச் செய்வதோடு, தரமுயர்ந்த அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நாட்டினுள் ஆரம்பிப்பதற்காக அனுமதி வழங்க வேண்டுமா என்பதை பரவலாக கலந்துரையாடும்படி நான் இந்த உன்னத சபைக்கு முன்மொழிகின்றேன்.

இன்று முழு உலகமே தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒரு யுகம். எமது நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை ஈடேற்றிக் கொள்வதற்காகவும், சகல துறைகளிலும் தொழில்நுட்பத்தைப் பாவிப்பது மிகவும் முக்கியமாகும். தொழில்நுட்பத்தினால் வலுப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரத்துடன் நேர்த்தியான இலங்கையொன்றை உருவாக்கும் இலக்கை ஈடேற்றிக் கொள்வதற்காக கடந்த இரண்டு வருடத்தினுள் நாம் அதிகமான வேலைத்திட்டங்களைச் செய்துள்ளோம்.

இது தொடர்பாக செயற்படுகின்ற (TRCSL, ICTA மற்றும் CERT) போன்ற சகல அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவைக்குத் தேவையான வழிகாட்டலை வழங்குவதற்கும், அவற்றின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கும் தனியானதொரு தொழில்நுட்ப அமைச்சொன்றை நிறுவுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

எந்தவொரு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக இணையத்தள மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அடிப்படை வசதிகள் மிகவும் முக்கியமாகும். ஆகையினால் FIBER மற்றும் 4G வலையங்களை பரவலாக்கி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் BROADBAND அதிவேக இணையத்தள தொடர்பாடல் வசதிகளை வழங்குவதற்கு நாங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். 08 மாவட்டங்களை உள்ளடக்கும் விதத்தில் 300க்கும் அதிகமான கிராமங்களை தற்போது இவ் வலையத்துடன் இணைத்து முடித்துள்ளோம். மிகவும் குறுகிய காலத்தினுள் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் FIBER மற்றும் 4G வலயத்தை பரவச் செய்து சிறிய மற்றும் பெரிய சகல பாடசாலைகளுக்கும் BROADBAND அதிவேக இணையத்தள தொடர்பாடல் வசதிகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த கால கொவிட் 19 உலகளாவிய ரீதியிலான தொற்றுப் பரவல் இருந்த காலகட்டத்தினுள் வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் (Work From Home), இயங்கலை (ONLINE) முறையினூடாக தொடர்ச்சியாக கல்வியை வழங்குவதற்கும், இணையத்தளத்தினூடாக வியாபார நடவடிக்கைகளை பேணுவதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்விதமான அதிவேகமாக முன்னேறும் அடிப்படை வசதிகளின் காரணத்தினாலேயாகும்.

அண்மையில்  பிரசுரிக்கப்பட்ட International Telecommunication Union அறிக்கைகளுக்கமைய, உலகில் அதிகமான நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தொடர்பாடல் கட்டணங்கள் ஆகக் குறைந்த நாடுகளுக்குள் நாம் முன்னிலை வகிக்கின்றோம்.

சுதந்திர கல்வி எண்ணக்கருவை டிஜிட்டல் நிலைக்கு கொண்டு செல்வதற்காக கல்வி அமைச்சு மற்றும் ICTA நிறுவனம் ஒன்றிணைந்து கட்டியெழுப்பிய ஈ – தக்சலாவ கல்வித் தொகுதியை சகல பாடசாலைகளிலும் உத்தியோகபூர்வ இயங்கலை (ONLINE) கல்வி தொகுப்பாக தாபித்துள்ளோம். முற்றும் முழுதாக இணையத்தள சேவைக் கட்டணங்களிலிருந்து விடுவித்துள்ள இப் புகுமுகமானது அரச பல்கலைக்கழக தொகுப்பிற்கு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

அரச  நிருவாக நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தலும் எங்களால் எடுக்கப்பட்ட மற்றுமொரு முதன்மையான நடவடிக்கையொன்றாகும். அதன்வண்ணம் முன்னுரிமையாக இனங்காணப்பட்ட சுகாதாரம், விவசாயம் மற்றும் நீதி உள்ளிட்ட பல துறைகளுக்கான அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடு தற்போது அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் பல காலமாக எதிர்பார்த்திருந்த டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்யும் கருத்திட்ட நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. இதனை அறிமுகப்படுத்தும் ஆரம்ப கட்டத்தை இவ் ஆண்டுக்குள் நாங்கள் ஆரம்பிப்போம்.

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் போது அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஊழியச் செயலணியை உருவாக்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறைகளில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் அதிகளவிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இளம் தொழில்நுட்பவியலாளர்களுக்கு நாட்டில் எந்த இடத்தில் இருந்தேனும் வியாபாரமொன்றை ஆரம்பிப்பதற்கு மற்றும் அவ் வியாபாரத்தை நடாத்திச் செல்வதற்கு இயன்றவிதத்தில் தேசிய மட்டத்தில் வசதிகளை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம். தேசிய தொழில்நுட்பவியலாளர்களுக்கு மட்டுமல்ல Digital Nomad வேலைத்திட்டத்தினூடாக வெளிநாடுகளிலிருந்து வரும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்குவதற்கு இயன்ற விதத்தில் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது காலி, குருநாகல், கண்டி, நுவரெலிய மற்றும் ஹபரண ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப பூங்காக்களின் ஊடாக இலங்கை புத்தாக்க ஊக்குவிப்புக்கு போன்று வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களையும் இலங்கைக்கு ஈர்த்துக் கொள்வதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

அதிவேகமாக நடைபெறும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு இணையாக அதற்குரிய சட்டரீதியான சூழலை புதுப்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது மக்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக தரவுப் பாதுகாப்பு சட்ட வரைவிற்கு போன்று இலங்கையின் சைபர் பாதுகாப்புக்கான சைபர் பாதுகாப்புச் சட்டவரைவிற்கும் தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சப்மெரின் கேபல் தொகுதியைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டத் தொகுப்பு தற்போது வரையப்பட்டு வருகின்றது.

இத்துறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் போது வலயத்தில் எந்தவொரு நாட்டிற்கும் இணையாகாத வண்ணம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மிக விரைவாக 03 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் கூடிய ஏற்றுமதி துறையொன்றாக ICT / BPM வியாபாரங்களை கட்டியெழுப்புவதோடு, அதனுடாக தொழில்நுட்பத்தினுடாக வலுவூட்டப்பட்ட நாடொன்றாக எதிர்கால இலங்கையை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு புதிய தொழில்நுட்பத்தை உபயோகிப்பதன் மூலம் தமக்கே தனித்துவமான படைப்புகளினுடாக உலகத்தில் எந்தவொரு நாடொன்றினுடனும் போட்டியிடக் கூடிய சூழலொன்றை தயார் செய்து கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நாங்கள் வரலாறு முழுவதும் எந்தவொரு சவால்களையும் எதிர்நோக்கிய இனமாகும். நாட்டுக்கு உரிய தலைமைத்துவம் இருந்த சந்தர்ப்பங்களில் நாம் அச்சவால்களை சிறப்பாக வெற்றி கொண்டோம்.

இச் சந்தர்ப்பத்திலும் எமக்குள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு எமக்கு முடியும். அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நான்  தயாராகவுள்ளேன்.

தற்கால சவால்களை வெற்றி கொண்டு மக்கள் எதிர்பார்க்கும் சுபீட்சமான தேசத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது இலக்கு எதிர்வரும் வருடங்களுக்குள் வலயத்தில் வேகமாக அபிவிருத்தியடையும் நாடொன்றாக இலங்கையை உருவாக்குவதாகும். இதற்காக விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் எனும் மூன்று பிரிவுகளிலும் தெளிவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எமது திட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக எனக்கு உங்களதும், மக்களினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.

இந்நாடு, தற்போது இந்நாட்டில் வசிக்கும் மக்களைப் போன்று எதிர்காலத்தில் வசிக்கவுள்ள மக்களுக்கும் உரித்தானதாகும். நாங்கள் இந்நாட்டின் தற்கால பாதுகாவலர்கள் மட்டுமே. நாங்கள் இன்று செயற்படும் விதத்தில் தான் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஆகையினால் நாங்கள் எல்லோரும் எதிர்கால சந்ததியினருக்கு பொறுப்பு கூற வேண்டும்.

ஆகவே, நாட்டுக்கு ஆதரவான சகலரும் ஒன்று சேர்ந்து இச்சந்தர்ப்பத்தில் அவ் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

மும்மணிகளின் ஆசி.

(English) Recent News

Most popular