Presidential Secretariat of Sri Lanka

முன்னாள் விமானப்படைத் தளபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்…

இலங்கை விமானப் படையின் முதல் விமானப்படைத் தளபதியான அமரர் ஓய்வுபெற்ற எயார் ஷீப் மார்ஷல் பத்மன் ஹரிப்பிரசாத மெண்டிஸ் அவர்களின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கல்கிஸை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலை ஒன்றில், இறுதி அஞ்சலிக்காக அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (19) முற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

ரோயல் லங்கா விமானப் படையின் ஐந்தாவது பயிற்சி அதிகாரியாகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த மெண்டிஸ் அவர்கள், பிரித்தானியாவில் விமானி ஆலோசகர் பதவி மற்றும் விமானப் பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிகளைப் பெற்ற முதல் இலங்கையர் என்றும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

1971ஆம் ஆண்டில், ரோயல் லங்கா விமானப் படையின் நான்காவது விமானப்படைத் தளபதியாக ஹரிப்பிரசாத மெண்டிஸ் அவர்கள் நியமனம் பெற்றார். 1972ஆம் ஆண்டில், ரோயல் லங்கா விமானப் படையானது இலங்கை விமானப் படையாக மாற்றம் பெற்ற நிலையில், அதன் முதலாவது விமானப்படைத் தளபதியாக அவரே பதவி வகித்தார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனத் அல்விஸ், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News