Presidential Secretariat of Sri Lanka

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது சிங்களப் பத்திரிகை “லக்மினி பஹன” 160ஆவது ஆண்டு நிறைவைக் காண்கிறது

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்களப் பத்திரிகையான “லக்மினி பஹன” எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் 160 ஆண்டு நிறைவைக் காண்கிறது.

குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோறளயே முதலியார் தலைமையில் இரத்மலானை பரம தம்ம சைத்தியராமாதிபதி அதிவணக்கத்துக்குரிய வளானே ஸ்ரீ சித்தார்த்த மா தேரரின் வழிகாட்டலில் இந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை ஆசிரியராக புகழ்பெற்ற அறிஞர் பண்டிதர் கொக்கல பணியாற்றினார்.

நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பத்திரிகை அக்கால நிலவரப்படி ‘ஒரு காசு’க்கு விற்பனை செய்யப்பட்டது. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயசூரிய ஆராச்சிகே ஹென்ட்ரிக் பெரேரா இதன் வெளியீட்டாளராக செயற்பட்டுள்ளார். கொழும்பு வுல்பெண்டல் தெருவில் நடத்தப்பட்டு வந்த அச்சகத்தில் இந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டது.

பின்னர் குமாரதுங்க முனிதாச ஆசிரியரின் தலைமையில் பல வருடங்கள் இந்தப் பத்திரிகை வெளிவந்தது. மாத்தறை திக்வெல்ல, வவுருகன்னல மகா விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி திக்வெல்ல திஸ்ஸ மா தேரர் அவர்கள் உயிரிழக்கும் வரை “லக்மினி பஹன” பத்திரிகை அச்சிடப்பட்டு வந்தது.

இலங்கை ஊடகத்துறையிலும் பத்திரிகை வரலாற்றிலும் அழியா நினைவுச் சின்னமாக விளங்கும் “லக்மினி பஹன” பத்திரிகையின் 160ஆவது ஆண்டு நிறைவு விழா, இலங்கை ஊடகத்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

(English) Recent News