Presidential Secretariat of Sri Lanka

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் புனித ஜோசப் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற விசேட போஷாக்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் வறுமை நிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், குழந்தைகளின் போஷாக்கு நிலையை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாத வேலைத்திட்டம் பாரிய பலமாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், தன்னார்வ அடிப்படையில் இவ்வாறான போஷாக்கு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பாராட்டினார்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த நாட்டை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் எனவும், அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை எனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சரியான தொலைநோக்குப் பார்வையின் ஊடாக நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு, மாறாத கொள்கைக் கட்டமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும், தேவைக்கு ஏற்ப அதனை சட்டமாக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பிரதி மேயர் மொஹமட் இக்பால், மாநகர சபை உறுப்பினர்களான எம். சரப்தீன், கலீல் ரஹ்மான், ஏ.ஆர்.எம். சபான் மற்றும் புனித ஜோசப் கல்லூரி அதிபர் பிரசாத் சமரதுங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News