Presidential Secretariat of Sri Lanka

2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

உலகின் நவீன போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளம் ஒன்றைத் தயாரித்து, சந்தைப் பொருளாதாரம் என்ற சமூக பாதுகாப்புடன் கூடிய திறந்த பொருளாதார முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உயர் செயற்பாட்டுடன் கூடிய நவீன பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான பயணம் இந்த வரவு செலவு திட்டத்துடன் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இன்று (14) பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் நீண்டகால அபிவிருத்தியானது பிரபலமான தீர்மானங்களை அன்றி சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரபலமான பாதையில் மேலும் தொடர்ந்து செல்வதில் நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென்றும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு சமூகப் பாதுகாப்புடன் கூடிய திறந்த பொருளாதார முறையே நவீன பாதையாக அமையுமென்றும் குறிப்பிட்டார்.

2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு-

1. 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும்.

2. நாட்டின் நீண்டகால அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது( 2023-2048).

3. இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் ,ளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.

4. பரிச்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும்.

5. தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக ,ளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய முறைமை.

6. உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும்.

7. வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களை பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் .

8. தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்

9. ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம்

10. சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம்

11. உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டும் குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியும் சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்

12. பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஜனாதிபதி

13. சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% -8% ஆன உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது

14. சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% சதவிகிதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்.

15. 2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

16. 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள்.

17. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

18. நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன

19. வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான முழு அதிகாரம் பெற்ற ஒரு நிறுவனம்
• இது தொடர்பில் இயங்கி வரும் அரச நிறுவனங்கள் இதனுடன் இணைக்கப்படும்.

20. மேல், வடமேல், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை உட்பட பல புதிய பொருளாதார வலயங்கள்
• இதற்கான விசேட சட்டக் கட்டமைப்பு

21. நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிக்க தேசிய பொருளாதார உற்பத்தித்திறன் ஆணைக்குழு

22. உலகளாவிய சந்தை பிரவேசத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள்

23. முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்படும்.

24. தொழிலாளர் சந்தைக்கான புதிய கொள்கைகள்

25. காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த சட்டம்

26. விவசாய ஏற்றுமதிக்கு காணி வழங்கப்படும்
• குறைந்த பயன்பாடுள்ள பயிரிடப்படாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக தொழில்முனைவோருக்கு வழங்கப்படும்.

27. பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை

28. தேசிய அபிவிருத்திக்காக கனிம வளங்களை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை.

29. கருவா கைத்தொழிலை ஊக்குவிக்க புதிய திணைக்களம்.

30. அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை கண்டறிந்து பகுப்பாய்வு செய்வதற்கான புதிய வேலைத் திட்டம்

31. கடல்சார் சுற்றுலா மேம்பாட்டுக்கு புதிய வேலைத் திட்டம்

32. கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு 03 புதிய கடல்சார் சுற்றுலா மேம்பாட்டு வலயங்கள்

33. பின்தங்கிய பாடசாலைகளுக்கு இணைய வசதிகள்

34. 1000 உயர்கல்வி கற்பிக்கும் பாடசாலைகளுக்கு இலவச இணைய வசதி

35. கிராமப்புற பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

36. 2024 முதல் பல்கலைக்கழக பிரவேசத்தில் திறமை அடிப்படையிலான தெரிவு படிப்படியாக 50% ஆக உயர்த்தப்படும்.

37. மருத்துவர்களுக்கான பட்டப்பின் படிப்பு வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கைகள்
• றுகுணு, பேராதனை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டப்பின் படிப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

38. 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்தாக உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை தொடர புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

39. சிறப்புப் பட்டம் பெறும் 75 இளைஞர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின்படிப்பை தொடர புலமைப்பரிசில் வழங்கப்படும்.

40. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு புதிய மருத்துவ பீடம்

41. அரச சேவையில் பொருத்தமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு

42. அரச வருமான முகாமைத்துவத்தை பகுப்பாய்வு செய்து பரிந்துரைகளை பெறுவதற்காக வரியியல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு

43. அனைத்து அரச கொடுப்பனவுகளையும் 2024 மார்ச் 01 முதல் இலத்திரனியல் முறையில் மாத்திரம் மேற்கொள்ள நடவடிக்கை.

44. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள்
• உணவு பாதுகாப்பு பற்றிய அனைத்து தகவல்களும் இணையவழியூடாக செயல்படுத்தப்படும்.

45. நன்னீர் மீன்வளர்ப்பு கைத்தொழிலை மேம்படுத்த மீன் இனப்பெருக்க செயற்பாட்டு நிலையங்களின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கைகள்

46. சுங்கம் அல்லாத வரிகள் படிப்படியாக நீக்கப்படும்
• செஸ் வரி 3 ஆண்டுகளிலும் துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி 5 ஆண்டுகளிலும் படிப்படியாக நீக்கப்படும்.

47. விசேட படைப்பிரிவுகளைத் தவிர, ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு 18 வருட சேவைக்குப் பின்னர் ஓய்வு பெறுவதற்கான அவகாசம் .

48. ஶ்ரீலங்கன், டெலிகாம், ஹில்டன், வோட்டர்ஸ் ஏஜ், ஶ்ரீலங்கா இன்சூரன்ஸ் ஆகியன மறுசீரமைக்கப்படும்
• இதன் ஊடாகத் கிடைக்கும் வருமானம் அந்நிய செலாவணிக் கையிருப்பு மற்றும் ரூபாவை வலுப்படுத்த பயன்படுத்தப்படும்.

49. பயன்படுத்தப்படாத சொத்துக்களுக்காக புதிய சட்டம் மற்றும் புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.

50. நுண் கடன்களை ஒழுங்குபடுத்த அதிகாரசபை ஒன்று நிறுவப்படும்.

51. நலன்புரி பயன்பாட்டுக் கொள்கைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

52. குழந்தைகளின் போஷாக்கை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்.
• அதற்காக 500 மில்லியன் ரூபா.

53. தென்னந்தோப்புக் காணிகள் துண்டாடப்படுவது மட்டுப்படுத்தப்படும்.
• தென்னந்தோப்புக் காணிகள் துண்டாடப்படுவது 01 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான அளவுக்கு மட்டுப்படுத்தப்படும்.

54. 10 விவசாய கிராமங்கள் உருவாக்கப்படும்.

55. அறுவடைக்குப் பின்னரான பயிர்ச் சேதங்களைக் குறைக்க நடவடிக்கை.
• விளைச்சலைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை .

56. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை.
• குண்டசாலை செயற்கை கருவூட்டல் நிலையம் மேம்படுத்தப்படும்.

57. காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்று எமது நாட்டில் ஆரம்பிக்கப்படும்.

58. பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பம் இந்நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.

59. வன வளத்தை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்.

60. 2027 ஆகும்போது 50,000 ஏக்கர் காடுகள் வன வளத்துக்கு உள்வாங்கப்படும்.

61. மதுவரி திணைக்களத்திற்கு மதுபான பரிசோதனைக்காக புதிய ஆய்வுகூடம்

62. சூரிய சக்தி கலங்கள் மற்றும் மின்சார மோட்டார் கார்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

63. 2023 முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அரச அனுசரணையுடன் சூரிய சக்தி கலங்கள் வழங்கப்படும்

64. இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் வேலைத்திட்டம்.

65. குடிநீர் போத்தல்களுக்கான பாதுகாப்பு முத்திரை.

66. சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.

67. பதுளை, குருநாகல், பொலன்னறுவை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்படும்.

68. வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஜனாதிபதி செயலணி.

69. 2022 இல் 9.8% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை, 2023 இல் மொத்த தேசிய உற்பத்தியில் 7.9% வரை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை.

70. 2022 இல் ஆரம்ப வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் -4.0% ஆக இருந்ததோடு, அதனை 2023 இல் – 0.7% வரை அதிகரிக்க திட்டம்.

71. 2023 இல் 1,220 பில்லியன் ரூபாவை அரச முதலீட்டிற்காக ஒதுக்கத் திட்டம்.

72. பொதுவான உடன்பாட்டுக்கு வந்து தேசிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பொன்றை உருவாக்குவோம். அந்த கொள்கைக் கட்டமைப்பை அடுத்த 25 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்துவோம்.

73. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை, அரச நிர்வாகத்தின் ஊடாக அரச அதிகாரிகளால் நடைமுறைப்படுத்துவதில் துறைசார் குழுக்கள் பெரும் பங்காற்ற முடியும். அரச செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் நிதிக் குழுவுக்கு திறம்படத் தலையிட முடியும். எனவே அனைத்து குழுக்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பாராளுமன்றத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்

74. புதிய பொருளாதார அடித்தளத்தின் ஊடாக நாட்டை மீள எழுச்சி பெறுவதற்கான முயற்சிக்கு தீவிரமாகவும், செயற்திறனுடனும் பங்களிக்குமாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கோரிக்கை.

(English) Recent News

Most popular