Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு விழா

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதற்குத் தேவையான காணிகளை அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் தொழிற்திறமையுள்ள சுமார் 3000 புலமைப்பரிசில் பெற்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் கல்வித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் எமது சமூகத்தையும் போசித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான கல்விப் பரிமாற்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அமெரிக்க மிஷனரிகளின் யாழ்ப்பாண வருகையுடன் இது ஆரம்பமானது. இரண்டாவது, கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்காட் இலங்கைக்கு வந்தபோது. ஜனாதிபதி வூட்ரோ வில்சன் (Woodrow Wilson) காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்து 14 விடயங்களை அறிவித்தமை 20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கலாசாரம் என்பவற்றுக்கு வரையறுக்கப்படவில்லை. பொருளாதார உதவிகள், இரு நாடுகளுக்கும் சமமான நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் பிரச்சினைகள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் இந்த உறவு வியாபித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங் மற்றும் அமெரிக்காவின் இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்தர்ஷி குணவர்தன ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, வயம்ப பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதித் ஜயசிங்க, ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே மற்றும் ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன ஆகியோர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News